சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

மாட்டுப் பொங்கல்: கிராமங்களில் கோலாகலம்

DIN | Published: 17th January 2019 09:33 AM

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் மாட்டுப் பொங்கல் விழா  புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மஞ்சு விரட்டு, மாட்டு வண்டி ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தைப் பொங்கலையொட்டி வீடுகளில்,  புதுப்பானை வைத்து,  பச்சரிசி, பால் ஊற்றி பொங்கலிட்டு சூரியனுக்கு படையலிட்டு வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து,  புதன்கிழமை மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது.  
விவசாயத்துக்கு உற்ற துணையாய் உள்ள மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் கொண்டாடப்படும் இந்த விழா, கிராமப்புறங்களில் கோலாகலமாக நடைபெற்றது.  காலையில் மாடுகளை குளிப்பாட்டி,  நெற்றியில் பொட்டு வைத்து, கழுத்தில் மாவிலை,  பூக்களால் அலங்கரித்து,  கொம்புகளை சீவி, வண்ணம் தீட்டி, சலங்கைகள் அணிவித்து  தயார்படுத்தினர். இதையடுத்து,  வீட்டில் புதுப்பானை வைத்து பொங்கலிட்டு,  மாடுகளுக்கு படையலிட்டனர். 
தொடர்ந்து மாலையில்,  அலங்கரித்த மாடுகளை,  கிராமப்புறங்களில் உள்ள கோயில்களுக்கு அழைத்துச் சென்று,  மஞ்சு விரட்டு எனும் மாடு விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.  கோயில் முன்புள்ள மைதானத்தில் மாடுகளை கொண்டு வந்து விவசாயிகள் நிறுத்தி வைத்தனர். அதேபோல மாடுகள் பூட்டப்பட்ட வண்டிகளும்,  விவசாயத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களும் அலங்கரித்து கொண்டு வந்து நிறுத்தி வைக்கப்பட்டன.
கோயிலில் பூஜை செய்து மாடுகளுக்கு ஆரத்தி காண்பித்தவுடன் மஞ்சு விரட்டு நடைபெற்றது.  விவசாயிகள் தாங்கள் அழைத்து வந்த மாடுகளை,  ஒருவருக்கொருவர் விரட்டிச் சென்று மகிழ்ந்தனர்.  முக்கிய வீதிகள் வழியாக மாட்டு வண்டிகள் ஊர்வலம் நடைபெற்றது.
விழுப்புரம் வி.மருதூர்,  கீழ்ப்பெரும்பாக்கம்,  காகுப்பம்,  வழுதரெட்டி,  மரகதபுரம்,  கண்டமானடி,  கண்டம்பாக்கம்,  கொளத்தூர்,  சாலாமேடு,  பாணாம்பட்டு,  தளவானூர்,  அகரம்,  வளவனூர்,  காணை,  விக்கிரவாண்டி,  கண்டமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மஞ்சு விரட்டும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.  
களையிழந்த மஞ்சு விரட்டு: நிகழாண்டு மாட்டு வண்டிகளின் பயன்பாடு குறைந்து போனதால்,  பல கிராமங்களில் மாடு விரட்டும் நிகழ்ச்சியில் மாட்டு வண்டிகளின் எண்ணிக்கை குறைந்து களையிழந்திருந்தது. ஏற்கெனவே, விவசாயத்துக்கு மாட்டு வண்டிகள் பயன்பாடின்றி போன நிலையில்,  ஆற்று மணல் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால்,  மாட்டு வண்டிகளை பலர் விற்பனை செய்து வருகின்றனர்.  இதனால்,  மாட்டு வண்டிகள் குறைந்து,  வாகனங்களே மஞ்சு விரட்டில் அதிகம் பங்கேற்றிருந்தன.

More from the section

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கொலை: பெண் உள்பட 6 பேருக்கு ஆயுள் சிறை
கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து காவல் நிலைய கட்டடம் திறப்பு
தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
காய்கனி பதனிடுதல் பயிற்சி
பல்லடுக்கு சேமிப்புக் கிடங்கு: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்