வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்களுடன் அதிகாரிகளை சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர்

DIN | Published: 22nd January 2019 09:30 AM

பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி தனது தொகுதி மக்களுடன் அதிகாரிகளை திங்கள்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தார். 
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலரும்,  திருக்கோவிலூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி, தனது தொகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்,  அரசு போக்குவரத்துக் கழக அதிகாரியை திங்கள்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
முதலில் எரளூர்,  மழவராயனூர் கிராம மக்களுடன் விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு வந்த பொன்முடி, மேலாண் இயக்குநர் கணேசனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். 
பின்னர் அவர் கூறியதாவது: விழுப்புரத்திலிருந்து எரளூர் வழியாக திருவெண்ணெய்நல்லூருக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என ஏற்கெனவே மனு அளித்து 15 நாள்களாகியும் நடவடிக்கை இல்லை.  இதனால்,  தற்போது அந்தப் பகுதி மக்களே திரண்டு வந்துள்ளனர்.
அந்த மார்க்கத்தில் ஏற்கெனவே இயங்கிய அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்.  எரளூர்,  சிறுமதுரை உள்ளிட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் காலை,  மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். இந்தப் பகுதிக்கு இம்மாத இறுதிக்குள் பேருந்து இயக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றார் அவர். 
மனுவைப் பெற்றுக்கொண்ட மேலாண் இயக்குநர் கூறுகையில்,  கோரிக்கை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும்,  விரைவில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து, பொதுமக்களுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொன்முடி,  மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனிடம் மனு அளித்துக் கூறியதாவது:  திருவெண்ணெய்நல்லூர் பகுதிக்கு கோரிய அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும்.  பல கிராமங்களில் தனி நபர் குடும்ப அட்டைகளை ரத்து செய்துள்ளனர். 
அவர்களுக்கு அரிசி கூட வழங்கவில்லை. 
பொங்கல் தொகையும் கிடைக்கவில்லை. மேலமங்கலத்தில் குடிநீர் பிரச்னை உள்ளதாக புகார் கூறுகின்றனர். திருவெண்ணெய்நல்லூர் - மழவராயனூர் இடையே கடந்த 1972-ஆம் ஆண்டில் கட்டிய பாலம் பழுதடைந்துள்ளதால் அதைப் புதுப்பிக்க வேண்டும்.  கிராமப்புற நூலகங்கள் மூடப்பட்டு கிடப்பதை செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.  
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கூறுகையில், கோரிக்கைகள் தொடர்பாக  அதிகாரிகள் மூலம் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பொன்முடி கூறுகையில், எனது தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு நேரில் சென்றபோது பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர். எனவே, அந்தக் குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி  மக்களுடன் வந்து  அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன் என்றார் அவர்.
அப்போது,  முறைகேடு வழக்குகளில் சிக்கியுள்ள திமுக எம்எல்ஏக்கள் 22 பேரும் சிறை செல்வார்கள் என  அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்துப் பேசிய பொன்முடி, தமிழக வரலாற்றில் கொலை வழக்கில் மாநில முதல்வர் சிக்கியுள்ளது அவமானகரமாகியுள்ளது. 
எனவே, அதை திசை  திருப்பவே திமுக மீது அதிமுகவினர் குற்றம் சுமத்துகின்றனர் என்றார் அவர். 
அப்போது, திமுக மாவட்டப் பொருளாளர் நா.புகழேந்தி,  துணைச் செயலர் முத்தையன்,  ரா.ஜனகராஜ், கல்பட்டு ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


 

More from the section

மணல் திருட்டு:  9 மாட்டுவண்டிகள் பறிமுதல்
தேமுதிக அணி நிர்வாகிகள் ஆலோசனை
பள்ளிப் பரிமாற்ற திட்ட பயிற்சி முகாம்
பயணிகள் நிழல்குடை திறப்பு
"விளம்பரப் பதாகைகள் குறித்த விதிகளில் பாரபட்சம் கூடாது'