வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா ஏப்.2-இல் தொடக்கம்

By  உளுந்தூர்பேட்டை,| DIN | Published: 19th March 2019 08:40 AM

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைப் பெருவிழா வருகிற ஏப்.2-ஆம் தேதி தொடங்குகிறது.
 பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு தனி வரலாறு உண்டு. மகாபாரதத்தில் கௌரவர்களுக்கு எதிரான போரில் பாண்டவர்கள் வெற்றி பெற, யுத்த தேவதையை திருப்திபடுத்தும் பொருட்டு 32 சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய, அர்ச்சுனனுக்கும், நாகக் கன்னிக்கும் பிறந்த அரவானை களப்பலி கொடுத்ததாக வரலாறு.
 மகாபாரதத்துடன் தொடர்புடைய சிறப்புமிக்க இந்த கோயிலின் சித்திரைப் பெருவிழா ஏப். 2-ஆம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்குகிறது. 3-ஆம் தேதி பந்தலடி என்.தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று முதல் பாரதச் சொற்பொழிவு தொடங்கி, தொடர்ந்து 18 நாள்கள் நடைபெறுகிறது.
 ஏப்.4-இல் சந்தனு சரிதம் நிகழ்ச்சி, இரவு சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 5-ஆம் தேதி பீஷ்மர் பிறப்பு, 6-ஆம் தேதி தர்மர் பிறப்பு, 7-ஆம் தேதி பாஞ்சாலி பிறப்பு, 8-ஆம் தேதி பகாசூரன் வதம், 9-ஆம் தேதி பாஞ்சாலி திருமணம், 10-ஆம் தேதி கூத்தாண்டவர் பிறப்பு, 11-ஆம் தேதி ராஜ சுயயாகம், 12-ஆம் தேதி விராடபர்வம், என்.தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் வெள்ளிக்கால் நடுதல், 13-ஆம் தேதி கிருஷ்ணன் தூது, 14-ஆம் தேதி அரவான் பலி, கூத்தாண்டவருக்கு பாலாலயம்,
 15-ஆம் தேதி கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.
 தாலி கட்டிக்கொள்ளுதல்: ஏப்.16 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு சுவாமிக்கு கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகள், மும்பை, தில்லி மற்றும் வெளிநாடுகளிலிருந்து திருநங்கைகள் கோயிலில் ஒன்று கூடுவர். பின்னர், கோயில் பூசாரிகள் கைகளால் தாலிக்கட்டிக் கொண்டு, அன்றிரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். அரவான் சுவாமிக்கு 108, 1008 என சூறை தேங்காய்களை உடைப்பர்.
 தேரோட்டம்: தொடர்ந்து, கோயிலின் வடபுறத்தில் உள்ள சகடையில் 30 அடி உயரத்துக்கு கம்பம் நட்டு வைக்கோல் பிரி சுற்றப்படும். இதுதான் அரவான் திருவுருவம் வடிவமைப்பதற்கான அடிப்படைப் பணியாகும். பின்னர், கீரிமேட்டிலிருந்து அரவான் புஜங்கள், மார்புப் பதக்கம், சிவிலியான்குளம் கிராமத்திலிருந்து பாதம், விண் குடை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து கொண்டு வரப்படும் பாகங்களிலிருந்து அரவான் திருவுருவம் அமைக்கப்பட்டு, ஏப்.17-ஆம் தேதி (புதன்கிழமை) காலை தேரோட்டம் நடைபெறுகிறது.
 தேரோட்டத்தை உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ இரா.குமரகுரு வடம்பிடித்து இழுத்து, தொடக்கி வைக்கிறார். தேரோடும் வீதிகள் வழியாக வலம் வரும் தேர் மீது தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகள், தானியங்களை வேண்டுதலின் பேரில் பொதுமக்கள் வீசி எறிவர். தேர் அழிகளம் நோக்கிப் புறப்பட்டவுடன் திருநங்கைகள் ஒன்றுகூடி, ஒப்பாரி வைத்து அழுவர். தேர், நத்தம் எனப்படும் பந்தலடிக்கு வந்தடைந்தவுடன், அங்கு அரவான் சுவாமிக்கு களப்பலி கொடுக்கும் ஐதீக நிகழ்வு நடைபெறும்.
 அப்போது, திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிவர்.நெற்றிப் பொட்டை அழித்து, கை வளையல்களை உடைத்து நொறுக்குவர். தாலியை அறுத்தெறிவர். பின்னர், வெள்ளாடை உடுத்தி சோகமாய் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்வர். ஏப்.18-ம் தேதி விடையார்த்தியும், ஏப்.19-ஆம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
 
 

More from the section

பயணிகள் மறியலால் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்
மத்திய, மாநில அரசுகள் தொடர அதிமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பு
மாவட்டத்தில் 77.96 சதவீதம் வாக்குப் பதிவு
விழுப்புரம் மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு
இயந்திரங்கள் பழுதால் வாக்காளர்கள் அவதி