புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

மத அரசியல்-4: கிறிஸ்தவம்-கத்தோலிக்கம்

By C.P.சரவணன்| DIN | Published: 06th August 2018 05:22 PM

 

கிறிஸ்தவம் (Christianity)

தாவிதின் மரபில் பிறக்கும் மீட்பர் ஒருவரால் இறைவனின்  மீட்புத்திட்டம் செயல்படும் என்று கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, அதாவது கி.மு.8-ஆம் நூற்றாண்டில் யூதர்களின் தீர்க்கதரிசிகளான ஆமோஸ்,  இசையாஸ் போன்றோர் மக்களுக்கு அறிவித்தனர். அவ்வாறான மீட்பர் ‘மேசியா”( messiah) என்றும் அவர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.

அன்றைய காலக்கட்டத்தில் இருந்த இறைவாக்கினர்களில் அருளப்பர் மட்டும் வித்தியாசமானவராக இருந்தார். பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளை இணைத்து கிருஸ்துவத்திற்கு நல்ல அடித்தளம் அமைத்தார். பழைய ஏற்பாடு என்பது இறைவனை மையப்படுத்தி அமைந்தது.  புதிய ஏற்பாடு மனிதனை மையப்படுத்தி உருவானது. அருளப்பர் காலம் வரை பழைய ஏற்பாடு என்றும்,  அதன் பின்னர் புதிய ஏற்பாடு என்றும் கருதப்படுகிறது.

இயேசு கிருஸ்துவின் வருகையை மக்களுக்கு அறிவித்தவர் என்னும் பெருமை அருளப்பரையே சாரும். இயேசு பிரானுக்கு தண்ணீரால் திருமுழுக்கு அளித்தவரும் இவரே.  இதனால் இவர் “ஸ்தாபகர்” என்றும், ‘திருமுழுக்கு அருளப்பர்” என்றும் மக்களால் அழைக்கப்பட்டார். அருளப்பரின் நடவடிக்கைகளைப் பார்க்க மக்கள் தீர்க்கதரிசிகள் அறிவித்த ‘மெசியா’இவர்தான்  என்று நம்பத் தொடங்கினர். ஆனால் அருளப்பர் தன்னடக்கத்துடன் இதனைத் திட்டவட்டமாக மறுத்தார். ‘மேசியாவாக இருக்கும் தகுதி எனக்குச் சிறிதும் கிடையாது. அதற்கு தகுதியான ஒருவர் மிக விரைவில் பிறப்பார் என ஆரூடம் கூறினார்.

தாவீதின் மன்னர் குடும்பத்தில்தான் மேசியா என்னும் மீட்பர் பிறப்பார் என்றே எல்லோரும் நம்பிக்கொண்டிருந்தனர்.  இதனால் அங்கிருந்த பெண்கள் அனைவரும் தங்கள் வயிற்றில் மெசியா பிறக்க வேண்டும் என்று தீவர பிரார்த்தனை செய்தனர். ஆனால் இறை சித்தும் வேறாக அமைந்துவிட்டது. மன்னர் குடும்பத்தைச் சாராத பெண்மணியான மரியாள் வயிற்றில் சிசு உருவானது.

உலகின் முதல் பெண் ஏவாள், ஆதாமுடன் இணையக் கூடாது என்பது கடவுளின் கட்டளை.  ஆனால் அதனை உறுதியாகப் பின்பற்றாமல் தவறு செய்தாள். ஆனால் உலகின் இரண்டாவது பெண்மணியான மரியாள், கடவுளின் கட்டளைக்கு அடிபணிந்தாள்.  ஆகவே கடவுளின் ஆவி மரியாள் மீழுது படர்ந்து,  அவள் வயிற்றில் கருவைச் சுமக்கச் செய்தது.  சிசு உருவானது.
இந்த உண்மையை அறியாத மரியாளின் கணவர் சூசை மனம் வருந்தினார். இதனைப் புரிந்து கொண்ட இறைவன், வான தூதர்களை அனுப்பி உண்மையை சூசைக்கு விளக்கச் செய்தார். அதன்பிறகே அவரும் சித்தம் தெளிந்தார். சூசையும், மரியாளும் ரோமானியப் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட பெத்லகேம் நகருக்கு இடம்பெயர்ந்தனர்.  அங்கு அவர்கள் தங்குவதற்குச் சரியான இடம்பெயர்ந்தனர். அங்கு அவர்கள் தங்குவதற்குச் சரியான இடம் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி மாடுகள் கட்டப்படும் தொழுவத்தில் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அங்கு தான் மெசியா பிறந்தார். அங்கு தான் இயேசு நாதர் அவதரித்தார். அங்கு தான் தேவதூதனை மரியாள் பெற்றெடுத்தாள். குழந்தை வளர்ந்தது. அவர் தான் மேசியா என்பது கி.பி. 2ஆம் நூற்றாண்டில் அறிவிக்கப்பட்டது. “ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஜானஸ்நானம் பெற்று, ஜபம் பண்ணூகையில் வானம் திறக்கப்பட்டது” பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல் அவர் மீது இறங்கினார்.-லூக்கா 3:21-23; யோவான் 1:32-34 தனது பன்னிரெண்டாவது வயதில் ஜெருசலேமில் போதர்கள் நடுவே அமர்ந்து அவர்களுக்குச் சரிசமமாக இயேசு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். தன் 30-வது வயதில், இறைப் பணியைச் செய்யப் போவதாக இயேசு அறிவித்தார். மனம் திரும்புதலுக்கு அடையாளமாக யோர்தான் (Jordan River) நதிக்கரையில் யூதர்களுக்கு யோவனிடம் முதலில் சென்றார். அருளப்பர் அவருக்கு திருமுழுக்கு என்னும் ஞானஸ்நானம் செய்து வைத்தார்.  அப்போது கடவுள் புறா வடிவில் வந்து அவர் மீது அமர்ந்தார்.  இதன் பின்னர் நாற்பது நாட்கள் உண்ணா நோன்பிருந்தார் இயேசுபிரான். 

இந்நிலையில்தான் சாத்தான் விழித்துக் கொண்டது ஊழியம் செய்வதற்காகப் புறப்பட்டிருக்கும் இயேசுவை சந்தேகப் பார்வையால் பார்த்தது. யார் இந்தப் புதியவன்?  உலகிற்குக் கெடுதலைச் செய்து கொண்டும் உலக மக்களை நசுப்பித்துக் கொண்டும் இருக்கும் நிலையில், அவர்களைக் காப்பாற்றி நல்வழிப்படுத்துவதற்காகக் கிளம்பி இருக்கும் இப்புதிய மனிதன் யார்? ஏன்று குழப்பத்துடன் இயேசுவை சாத்தான் அணுகியது.

இறைச் சேவையைச் செய்யவிடாமல் தனது வழிக்கு அவரைத் திருப்பிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டியது.  அதற்காக சில தந்திரங்களைப் பிரயோகித்துப் பார்த்தது.  சுவையான உணவு,  உலக சுகபோகங்கள், பெரும் புகழ் போன்றவற்றைக் காட்டி அவரை மயக்க முயற்சி மேற்கொண்டது. ஆனால் விடுதலைப் பணியில் மட்டுமே நாட்டமுள்ள இயேசு,  இத்தகைய கீழ்த்தரமான மயக்கங்களுக்குத் தன்னை விலை போக மறுத்துவிட்டார். சிறைப்பட்டோரை விடுவித்தார். பார்வையற்றோர்களுக்கு பார்வையை வழங்கினார்.  அடிமைத்தனத்தை உடைத்தார். ஒடுக்கப்பட்டோருக்கு உரிமைகளை அளித்தார். இவ்வாறாக அவரது விடுதலைப் பணி வேகமாக வளர்ந்தது. இதன் பின்னர் இவரது சீடரானார் அருளப்பர்.

பழம் பெருமை பேசித் திரிதல்,  முட்டாள்தனமான பாரம்பரிய பழக்க வழக்கங்கள் போன்றவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தார் இயேசு பிரான். அநீதிகளைப் பார்த்தும் பாராமுகமாக இல்லாமல் அதனைப் பகிரங்கமாகவே கண்டித்தார். பெரிய மனிதன் என்னும் போர்வையைப் போர்த்திக் கொண்டு சிறுமைகளைச் செய்யும் கயவர்களின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டினார்.    இவ்வாறு தவறுகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடிய இயேசு,  மக்கள் பால் மிகுந்த அன்பு செலுத்தினார்.  அவர்களைப் பரிவுடன் நடத்தினார்.  அவர்களிடம் பாசத்தைக் கொட்டினார்.

இயேசு கிறிஸ்துவிடம் மக்களுக்கு ஏற்பட்ட நோய் நொடிகளைக் குணப்படுத்தும் சக்தி இருந்தது. இயற்கையை வெல்லும் அற்புத சக்தி அவரிடம் நிறைந்து காணப்பட்டது.  மரணத்தை வெல்லும் சக்தி இருந்தது. இவற்றுக்கெல்லாம் கொடுமைகளை இழைத்து வந்த சாத்தானை வெல்லும் சக்தி அவரிடம் இருந்தது. இயேசு ஒரு சமூகப் புரட்சியாளராகச் செயல்பட்டார். எதையும் வீராவேசமாகப் பேசி, மற்றவர்களைக் கவர்ந்துவிட்டு, அப்புறம் எங்கோ காணாமல் போய்விடும். சாதாரண மனிதனாக அவர் இருக்கவில்லை. எதைச் சொன்னாரோ அதைச் செயலிலும் காட்டினார்.

இவரது இத்தகைய பண்பும், உழைப்பும், உண்மையும் நேர்மையும் ஏராளான மக்களின் அன்பைப் பெறுவதற்கு உதவின.  அவரைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே இருந்தது. இவ்வாறு ஏராளமான விசுவாசிகளை அவர் ஈர்த்து வந்த நிலையில்,  யூதர்கள் மட்டும் இவரை ‘மேசியா”என்று நம்பத் தயாராகவே இல்லை.

மன்னர் குலத்தில்தான் மேசியா பிறப்பார் என்றும் சாதாரண குடும்பத்தில், அதிலும் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தவர் நிச்சயமாக மேசியாவாக இருக்க முடியாது என்றும் அவர்கள் உறுதியாகக் கூறினார்கள். இதனால் இயேசுவை அவர்கள் இறைத் தூதராக ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அப்போது ரோமானியர்களின் ஆட்சிஅ ங்கு நடைபெற்று வந்தது.  யூதர்களை அவர்கள் அடக்கு ஒடுக்கி வந்தபோதிலும்,  இயேசுவைப் பற்றித் தவறான எண்ணத்தை ரோமானிய அதிகார வர்க்கத்திடம் யூதர்கள் தெரிவித்து வந்தனர்.  அதனை நஞ்சு என்று அறியாமல் ரோமானியர்களும் முழுமையாக நம்பினர்.

“இயேசு தேசத்திற்கு துரோகம் இழைப்பவராக நடந்து வருகிறார். மதத்திற்கு தீங்கிழைப்பவராக அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அவர் ராஜதுரோக நடவடிக்கைகளில் இறங்கி வருகிறார். எனவே இயேசுவிற்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். இதுதான் யூதர்களின் எண்ணமாக இருந்தது. இதனை ரோமானியப் பேரரசும் நம்பி ஏற்றுக் கொண்டது.இயேசு கைது செய்யப்பட்டார். துன்புறுத்தப்பட்டார். சித்ரவதை செய்யப்பட்டார். கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

கடைசியில் சிலுவையில் அறையப்பட்டார் இயேசுபிரான். மரணம் அவருடன் கைகுலுக்கியது. இயேசு கிறிஸ்து சுமந்த சிலுவையின் எடை 150 கிலோ இதன் நீளம் 15 அடி அகலம்8 அடி. தன் மரணத்தால் உலக மீட்புக்கு விடுதலை அளித்தார் இயேசுநாதர். ஆனால் மரணிப்பதற்கு முன்பு தனது சீடர்களிடம், மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதாக உறுதிபடக் கூறினார். அதேபோல மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். தனது சீடர்களுக்குக் காட்சி அளித்தார்.  அத்துடன் நாற்பது நாட்கள் இந்த உலகில் அவர் உயிர் வாழ்ந்தார்.

அப்போது தன் கூடவே இருந்து பயிற்சி பெற்றவர்களை ”அப்போஸ்தலர்”களாக நியமித்தார்.  மேலும் தான் நிறுவும் திருச்சபையின் தலைமைப் பொறுப்பினை அவரது சீடர்களில் ஒருவரான ராயப்பருக்கு வழங்கினார். அத்துடன் இவ்வுலகம் உள்ளவரை திருச்சபையும் கூடவே இருப்பதாகவும் வாக்களித்த இயேசுபிரான் விண்ணுலகை அடைந்தார்.

அவர் மரித்த பின்னர் அவரது சீடர்கள் அச்சத்துடன் இருந்தனர். அவர்கள் உயிருக்கும் ஆபத்து நேரிடும் என்பதை உணர்ந்து அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். ஜெருசலேமில் நடந்த பண்டிகைக்காக மக்கள் பெருமளவில் திரண்டபோது சீடர்கள் மக்களோடு மக்களோடு மக்களாகக் கலந்து அங்கே சென்றனர்.

ராயப்பர் மட்டும் துணிச்சலுடன் இயேசுவின் நற்செய்தியை அறிவித்தார். இதனால் மகிழ்ந்துபோய் 3 ஆயிரம் பேர் திருச்சபையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.  திருமுழுக்கு பெற்றனர். கத்தோலிக்க திருச்சபை தோன்றியது. துணிச்சல் அடைந்த சீடர்கள் இயேசுவின் கட்டளைப்படி திசைக் கொருவராகப் பயணித்து, பல்வேறு நாடுகளுக்கும் சென்று மக்களை திருச்சபையில் இணைத்தனார். ரோமைத் தலைமைப் பீடமாகக் கொண்டு திருச்சபை நிறுவப்பட்டது. இதனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபை என்ற பெயரும் இதற்கு சூட்டப்பட்டது.

இயேசுவின் போதனையை அடிப்படையாய் கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று வெளிப்படையாக அறிக்கை செய்வதே கிறிஸ்தவம் அல்லது கிறிஸ்தவன் என்கிறது வெப்ஸ்டர் என்னும் வேத விளக்கவுரை இயேசு கிறிஸ்துவை பின்பற்றினவர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் அந்தியோகியாவில் வழங்கப்பட்டது.

இயேசுவை,  மெசியா’என்று ‘கிறிஸ்து’என்றும் அழைத்தனர்.  இதன் பொருள் ‘திருப்பொழிவு பெற்றவர்’ என்பதாகும். மேசியா என்னும் சொல் எபிரேய மொழியில் இருந்தும்  கிறிஸ்து என்னும் சொல் கிரேக்க மொழியில் இருந்தும் பிறந்தன. கத்தோலிக்கம் என்பது  திருவழிபாடு,  இறையியல்,  அறநெறிக் கொள்கைகள் போன்றவற்றிற்காகப் பயன்படுத்தப்படும் சொல் என்றாலும் குறிப்பாக அது கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவத்தைக் குறிப்பிடுவதற்காகவே பயன்படுகிறது. முதலாம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்தவ சபைகளைக் குறிப்பதற்காக இச்சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

பைபிளை எழுதியது யார்?

பைபிளில் பழைய ஏற்பாடு என்று பலரால் அழைக்கப்படும் எபிரேய வேதாகமத்தின் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாடு என்றழைக்கப்படும் கிறிஸ்துவ வேதாகமத்தின் 27 புத்தகங்களும் இருக்கின்றன. ஆகவே 1600 ஆண்டுகாலப் பகுதியில் சுமார் 40 பேர்களால் எழுதப்பட்ட 66 புத்தகங்களின் தொகுப்பே பைபிள் என்பர். இவற்றில் சில அப்போஸ்தலர்கள், வரிவசூலிப்பவர்களாக இருந்த மத்தேயூ, மீன்பிடிப்பவராக இருந்த யோவான் வைத்தியனாக இருந்த லூக்காவும் எழுதியுள்ளனர். பைபிள் இவாறு சொல்கிறது “ஆக, வேத வாக்கியங்கள் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் செயல் நடப்பிக்கும் சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்டது. 2 தீமோத்தேயு 3:16,17. கத்தோலிக்க பைபிளில் உள்ள தள்ளுபடியாகமம் என்ற கூடுதலான பகுதிகளை யூதர்களும், புரோட்டஸ்டண்டினரும் ஏற்றுக்கொள்வதில்லை.

 

கத்தோலிக்க மதம்

கத்தோலிக்க மதம் எப்போது தோன்றியது. இதன் ஆரம்பாகல வரவாற்றைப் புரட்டினால் நான்காம் நூற்றாண்டில்தான் இது தோன்றியதாக வரலாற்றுச் சான்றாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அன்றைய  காலக்கட்டத்தில் ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தவர் கொன்ஸ்டன்டைன்.  இயேசுவின் மீது அப்போது அவருக்கு பற்று ஏதும் கிடையாது. ஆனாலும் ஏனைய ரோமாபுரி வேந்தர்களைப் போலவே அவரும் பல்வேறு நாடுகளுடன் போர் தொடுத்துக் கொண்டு தான் இருந்தார்.

இந்நிலையில் ஒரு முக்கியமான போரில் அவர் ஈடுபட இருந்தார்.  அதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடி வேறு அவருக்கு இருந்தது. போர் தொடங்குவதற்கு முன்பாக இரவில் கனவு ஒன்று அவருக்கு வந்தது. சிலுவை குறி பொறிக்கப்பட்ட கவசத் தொப்பியை அணிந்து கொண்டு போர் புரிந்தார். கனவு என்று அதனைக் கழற்றிவிடாமல்,  அப்படியே சிலுவைக் குறி பொறிக்கப்பட்ட கவசத் தொப்பினை அணிந்து கொண்டு போர் புரிந்தார்.

ஆச்சர்யப்படும் வகையில் அந்தப் போரில் மகத்தான வெற்றி கொன்ஸ்டன்டைக்குக் கிடைத்தது. நிச்சயமாக இக்கனவுதான் வெற்றியைப் பெற்றுத் தந்ததாக அவர் உறுதியாக நம்பினார்.  இச்சிலுவை அடையாளம் கிறிஸ்தவ மதத்தோடு சம்பந்தப்பட்டது என்பதை அறிந்தார்.  கிறிஸ்தவர்கள் வணங்கும் இயேசு கிறிஸ்துதான் தனது வெற்றிக்குக் காரணமானாவர் என்ற நம்பிக்கையும்  அழுத்தமாகப் பதிந்தது.

இதற்கு விசுவாசமாக ஏதாவது செய்ய வேண்டும்  என்று விரும்பினார். தனது சாம்ராஜ்யத்தின் மதமாக கிறிஸ்தவம் விளங்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். அதுமுதல் கிறிஸ்தவம் அதிகாரப்பூர்வமான மதமாக மாறியது அவரது சாம்ராஸ்யத்தின் தலைநகர் ரோம் அதன் தலைமை இடமாகவும் அமைந்தது.

 

கத்தோலிக்க திருச்சபை

இயேசுவின் பன்னிரு சீடர்களில் தலைமைப் பதவியைப் பெற்றவர் ராயப்பர். இவரது இயற்பெயர்  சீமோன்.  இவரை பேதுரு என்று இயேசு அழைத்தார் இதன் தமிழ்  வடிவம் ராயப்பர்.  பேதுரு என்றால்  பாரை என்று பொருள்.

 

திருத்தூதர் பேதுரு

பேதுரு என்னும் பாறை மீது தமது ஒரே திருச்சபையை இயேசு கிறிஸ்து நிறுவினார் ஒருமை, புனிதம், கத்தோலிக்கம் என்னும் பொதுமை, திருத்தூதுத்துவம் ஆகியவற்றை இச்சபை அடிப்படையாகக் கொண்டது.

மீட்புப் பணி இத்திருச்சபையின் வழியாக மனித வரவாற்றில் தொடர்ந்து நிலைபெறுகிறது. இதுபலநிலைகளைக் கொண்டது அதிகார அமைப்பு மற்றும் ஆன்மீக சமூகமாக இச்சபை விளங்குகிறது.

இத்திருச்சபையின் தலைவர் பாப்பரசர் என்றும், போப் ஆண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார்,  இதன் முதல் பாப்பரசர் ராயப்பர். இவரைத் தொடர்ந்து இந்தப் பதவியைப் பெற்றவர்கள் பலபேர்.

அப்போஸ்தலர் என்பவர்கள் பின்னர் ‘ஆயர்”என்று அழைக்கப்பட்டனர். இப்போதும் அப்படித்தான் அழைக்கப்பபட்டு வருகின்றனர். திருச்சபையானது மறை மாவட்டங்கள்,  பங்குகள் போன்றவை அடங்கிய ஒரு சபையாக விளங்குகிறது. முறை மாவட்டத்தின் பொறுப்பாளர் ‘ஆயர்’ என்று அழைக்கப்படுகிறார். பங்குவின் பொறுப்பாளர் ‘பங்குத் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். ஆயர்களின் தலைவர்தான் ‘பாப்பரசர்’ ஆவார். இது தான் திருச்சபையின் நிர்வாக அமைப்பாக உள்ளது.

பேதுருவின் வாரிசு என்ற முறையிலும்,  இறை மக்கள் அனைவரின் ஆசிரியர் என்ற வகையிலும்,  திருத்தந்தை தவறா வரம் பெற்றவராக விளங்குகிறார். அவரோடு ஒன்றிணைந்து செயல்படும் ஆயர்களுக்கும் இந்த வரம் உண்டு. திருப்பணியாளர்கள். துறவறத்தார், பொதுநிலையினர் அனைவரும் ஆயர்களின் பணியில் ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.

அனைத்திற்கும் மேலாக அறைவனை நேசித்து, அவருக்கு ஆராதனை செலுத்தி வருகிறது திருச்சபை, நமது பாவ மன்னிப்புக்காக இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் செலுத்திய பலியை நாள்தோறும் புதுப்பித்து அவருக்கு நன்றி கூறுகிறது இறைவனின் மகிமைக்காகவும், மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் இப்பலியைப் புதுப்பித்து ஆராதனை செலுத்துகிறது.

திருச்சபை கிறிஸ்துவின் வாழ்வை மையமாகக் கொண்டு,  திருவழிபாட்டு ஆண்டையும் ஒழுங்கு முறைகளையும் அமைத்துள்ளது. இயேசு திறிஸ்துவின் வருகைக்குத் தயார் செய்ய திரு வருகை காலம், அவரது பிறப்பைக் கொண்டாட கிறிஸ்து பிறப்பு விழாக்காலம் உள்ளிட்டவைகளை திருச்சபை அமைத்துத் தந்துள்ளது.

திருப்பிலி,  நற்கருணை வழிபாடு ஆகியவை கிறிஸ்தவ வாழ்வின் மையாக அமைந்துள்ளது. செபமாலை, சிலுவைப் பாதை ஆகிய பக்தி முயற்சிகள் இறைவனின் உறவில் வளர உதவுகின்றன. கத்தோலிக்க திருச்சபை,  மூன்று விதமான புனிதர்களை இவ்வுலகிற்கு அடையாளம் காட்டுகிறது. விண்ணகத்தில் வாழும் புனிதர்கள், உத்தரிப்பிடத்தில் தூய்மை பெறும் ஆன்மாக்கள் மற்றும் மண்ணுலகில் வாழ்பவர்கள் ஆகிய இவர்களிடையே நிலவும் உறவே, புனிதர்களின் சமூக உறவு என்று அழைக்கப்படுகிறது.

புனிதர்களிடம் வேண்டுதல் செயவதும், அவர்களுக்கு வணக்கம் செலுத்துவதும் இறைவனின் உதவியைப் பெற தகுந்த வழிகள் ஆகும். கத்தோலிக்க திருச்சபை,  இறைவனின் தாயான கன்னி மரியாவுக்கு மேலான வணக்கத்தையும,  மற்று புனிதர்களுக்கு வணக்கத்தையும் செலுத்துகிறது. கடவுளின் கட்டளைகளுக்கு எதிராகவும், மனிதர்களுக்குத் துன்பம் ஏற்படுத்தும் வகையிலும் செய்யப்படும் செயல்களே பாவம் எனப்படுகிறது. பிறப்பு வழிப் பாவம் திருமுழுக்கின் வழியாகவும்,  செயல் வழிப் பாவம் ஒப்பரவு அருள் அடையாளம் முலமாகவும் போக்கப்படுகிறது.

என்னைப் பின்பற்ற விரும்புபவன், சிலுவையைத் தன் தோள் மீது சுமந்து கொண்டு என்னைப் பின்பற்றட்டும் என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வு என்பது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. கிறிஸ்துவ சாவில் இருந்து உயிர்ப்பு வாழ்வுக்கு கடந்து சென்றது போல,  பாவ வாழ்வில் இருந்து புனித வாழ்வுக்கு கடந்து செல்வதே ஒவ்வோரு கிறிஸ்தவனுக்கும் விடுக்கப்படும் அழைப்பு ஆகும்.

கத்தோலிக்கத் திருச்சபையில் குழப்பங்கள் ஏற்பட்ட காலமும் உண்டு. கொள்கை முரண்பாடு,  சுயநலம்,  நிர்வாகத் தவறு போன்றவை  காரணமாக மத்திய காலத்தில் திருச்சபையில் குழப்பம் ஏற்பட்டது.  முதல் புரட்சிக்குரல் மார்ட்டின் லூதர் கிங்,  கல்வின் போன்றவர்களின் மூலமாக வெளிப்பட்டது. இவர்கள் திருச்சபையில் புரட்சிவாதிகளாகக் கருதப்பட்டனர்,  தகராறு முற்றிவிடாமல் இருப்பதற்காகவும், பிளவு ஏதேனும் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்காகவும் திருச்சபையினருக்கும்,  புரட்சி வாதிகளுக்கும் இடையே சமரசம் செய்து  வைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. எனினும் இந்த முயற்சி தோல்வியையே தழுவியது. பிளவு ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. திருச்சபை பிரிந்தது.  வேறு பல திருச்சபைகள் உருவாகின.

கத்தோலிக்க  திருச்சபையினரோ விரிசல் அதிகமாகி விடாமல் கடுப்பதற்காக பாப்பரசர் தலைமையில் உடனடியாகக் கூடி விவாதித்தனர். சட்டம், வழிபாட்டு முறை போன்றவைகளைப் பற்றி விரிவாக விவாதித்தனர். அதில் காணப்படும் தவறுகளைத் திருத்தவும் செய்தனர். 1962 மற்றும் 1963ஆம் ஆண்டுகளில் கூடிய இரண்டாம் திருச்சபை கூட்டத்தில் புதிய மறுமலர்ச்சி எட்டப்பட்டது. கத்தோலிக்கத் திருச்சபை காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களைப் பெற்றது. தற்போது கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக திருச்சபையின் தலைமையகத்தில் செயலகம் ஒன்று பணியாற்றி வருகிறது. கத்தோலிக்க மதம் கிறிஸ்து இறை மக்களைக் கொண்டதாகத் தற்போது காட்சியளிக்கிறது.

 

கத்தோலிக்கத்தின் கருத்துகள்

o இயேசுவுக்கு கடவுள், மனிதன் என்னும் இரு இயல்பு நிலைகள் உள்ளன.
o பரிசுத்த ஆவியானவர் பிதா மற்றும் சுதனில் இருந்து தோற்றம் பெற்றவர்.
o கன்னிமரியாள் ஆதிபாவத்தில் இருந்து நீங்கியவளாகப் பிறந்தாள்.
o குன்னிமரியாளுக்கு இயேசுவின் பலியில் பங்கிருக்கிறது அவள் மூலமாகவே  அனைத்து அருட்கொடைகளும் வழங்கப்படுகின்றன. மரியாள் பாவங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டவள்.
o ரோம் நகரே உலகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களின் தலைமையகம்,  பாப்பரசர் தவறுகள், பாவங்களில்இருந்து பாதுகாக்கப்பட்டவர்.
o இயேசுவின் இரத்தத்தில் இருந்து யூதர்கள் குற்றமற்றவர்கள் என்னும் அறிவிப்பு 1965ஆம் ஆண்டு வாடிகனில் நடைபெற்ற கத்தோலிக்கர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

 

மாநாடுகள் 

இயேசு மரித்த பிறகு கிறிஸ்தவர்களிடையே மத ரீதியாக கருத்து முரண்கள் தோன்றின. அப்படி கருத்து முரண்பாடுகள் தோன்றிய போதெல்லாம் உயர்நிலைப் பாதிரியார்கள் ஒன்றுகூடி விவாதித்து,  கருத்துக் கணிப்புகள் நடத்தி புதிய தீர்மானத்தை மேற்கொண்டனர்.

இப்படி விவாதித்து முடிவெடுப்பதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு,  அதன் காரணமாகப் பிளவுபட்டு,  புதிய மதப் பிரிவுகள் உருவாகின. முதன் முதலாக பிராந்திய அளவில் ஜெருசலேம் நகரில் மாநாடு ஒன்று கூட்டப்பட்டது.  அதில் யூதர்கள் அல்லாதோர் விருத்த சேதனம் செய்ய வேண்டுமா? ஏன்பது குறித்து காரசார விவாதம் நடந்து முடிவெடுக்கப்பட்டது.

பின்னர் கி.பி. 325ஆம் ஆண்டு,  இயேசுவின் கடவுள் தன்மை குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைக் களைவதற்கான மாநாடு ஒன்று நடைபெற்றது.  அதில்,  இயேசு கிறிஸ்துவின் இறைத் தன்மை ஒப்புக்கொள்ளப்பட்டது.

பரிசுத்த ஆவி என்பது தேவதூதர்கள் போல் படைக்கப்பட்டது.  என்பது குறித்து கருத்து மோதல்களைத் தொடர்ந்து கி.பி.381ஆம் ஆண்டு மற்றொரு மாநாடு கூட்டப்பட்டது. மாநாட்டில் இயேசு பிரிக்க முடியாத கடவுள் இயல்பு மற்றும் மனித இயல்புகளைக் கொண்டிருப்பவர் என்று தீர்மானிக்கப்பட்டது.

கன்னி மரியாள் கடவுளைப் பெற்றெடுத்த காரணத்தால் அவர் கடவுளின் தாய் என்று அழைக்கப்படுவாள் என்றும் முடிவு செய்யப்பட்டது. இயேசுவின் கடவுள் தன்மை மனிதத் தன்மையுடன் கலந்து விட்டது என்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை நீக்குவதற்காக கி.பி.449 ஆம் ஆண்டு மாநாடு ஒன்று கூடியது.

அதில், இயேசுவின் கடவுள் தன்மை அவரது மனிதத் தன்மையுடன் கலப்போ, மாற்றமோ இல்லாமல் ஒன்றிணைந்து விட்டது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பாப்பரசர் இதனை  ஏற்றுக்கொள்ளவில்லை என்தால், உடனே கல்கீதூனியா மாநாடு என்று இன்னொன்று கூட்டப்பட்டு,  இயேசுவின் கடவுள் தன்மையும் மனிதத் தன்மையும் ஒன்றிணையவில்லை என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மேலும் முந்தைய மாநாட்டு தீர்மானம் ரத்தும் செய்யப்பட்டது.

இது சிலருக்குப் பிடிக்கவில்லை.  கருத்து மோதல்கள் அதிகரித்து,  முடிவில் கிறிஸ்தவர்கள் இருபெரும் பிரிவாகப் பிரிந்தனர். இயேசுவிற்கு கடவுள் பண்புகள் மனிதப் பண்புகளுடன் எவ்வித மாற்றமும் இன்றி ஒன்றிணைந்துவிட்டதாக நம்பியவர்கள் ஆர்த்தோடெக்ஸ் பிரிவு என்று அழைக்கப்பட்டனர்.  இப்பிரிவு இன்று வரை அப்படியே இருந்து வருகிறது. அதில் எவ்விதப் பிளவும்   ஏற்படவே இல்லை.

இயேசுவிற்கு கடவுள், மனிதன் என்னும் இரு இயல்புகளும் இருப்பதாக  நம்பியவர்கள் கத்தோலிக்க பிரிவு என்றாகினர். கி.பி. 680ஆம் ஆண்டு பிரிந்து சென்றவர்கள் யோவான் மாறோன் என்பவர் தலைமையில் ஒன்றுகூடி கடவுள், மனிதன் ஆகிய இரு இயல்புகளும் ஒன்றிணைந்துவிட்டது என்று தீர்மானித்தார்கள். மாறோனியர்கள் என்று தனியாக இனங்காட்டப்பட்ட இப்பிரிவினர் கத்தோலிக்கர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இவர்கள் பயந்துபோய் லெபனான் மலைப்பகுதியில் தஞ்சம் அடைந்தனர்.

ஆனால் கி.பி. 1182ஆம் ஆண்டு தங்கள் பிரிவின் தனித்துவத்தைப் பேணிக் காப்பதுடன், ரோமாபுரியைத் தலைமை இடமாகக் கொண்டு விளங்கும் கத்தோலிக்க திருச்சபைக்கு விசுவாசமாக இருப்பதாகவும் அறிவித்தனர். கி.பி 879ஆம் ஆண்டு மற்றொரு கூட்டம் நடைபெற்றது ரோம் தேவாயத்தினருக்கு மாற்றாக பரிசுத்த ஆவியானது பிதாவிடம் இருந்து மாத்திரம் தோற்றம் பெற்றது என்று தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் 15ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக மார்ட்டின் லூதர் என்பவரால் புரட்டஸ்டன்ட் என்னும் புதிய பிரிவு உருவானது. இன்று வரை கத்தோலிக்கப் பிரிவுக்கு எதிராக சமபலத்துடன் அது விளங்கி வருகிறது.

 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

More from the section

மத அரசியல்-57: சிவன்
மத அரசியல்-56: சாங்கியம் ஓகம், வைசேடிகம் நியாயம், மீமாம்சை
மத அரசியல்-55: அய்யாவழி
மத அரசியல்-54: விசிஸ்டாத்வைதம்
மத அரசியல்-53: துவைதம்