வியாழக்கிழமை 17 ஜனவரி 2019

மத அரசியல்-5: கிறிஸ்தவம் - புரோடஸ்டன்ட் 

By C.P.சரவணன்| DIN | Published: 09th August 2018 06:56 PM

 

புரோடஸ்டன்ட் (Protestant)

ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் அக்காலத்து மன்னர்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர பெரு முயற்சி செய்து வந்தது.  இது ஒரு சாராருக்குக் கவலையை அளித்தது. இதனால் அரசியல் அதிகாரமும் மத அதிகாரமும் ஒன்றுக் கொன்று போட்டியிட ஆரம்பித்தன. பாப்பரசரின் அதிகாரம் இதன் காரணமாகப் பலவீனம் அடைந்தது.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் எதிர்ப்பாளர்கள் தங்கள் கருத்தை எதிர்ப்பாகக் கூறுவதைப் போல அறிவிக்காமல், ஆணையாகவே அறிவித்தார்கள். 1529ஆம் ஆண்டு ஸ்பியேர் பேரரசு மன்றம் கூடியது. இதில் எதிர்ப்பாளர்களாக இருந்த ஜெர்மன் கிறிஸ்தவத் தலைவைர்கள் மற்றும் கத்தோலிக்கத் திருச்சபையினர் இடையே சமரச உடன்பாடு செய்து கொள்ளவதற்காகவே இச்சபை கூடியது.

இம்மன்றத்தில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் கத்தோலிக்க ஆயர்கள். ஆனாலும் ஜெர்மன் கிறிஸ்தவர்கள் தங்கள் நிலையில் இருந்து சிறிதளவும் மாறவே இல்லை. பிடிவாதமாக இருந்தார்கள். தங்கள் எண்ணத்தையும், நிலைப்பாட்டையும் தைரியமாகவும் கட்டளையிடுவதைப் போலவும் தெரிவித்தார்கள். 

அவர்களின்  தொனி ஆணையிடுவதைப் போன்று இருந்த காரணத்தால்தான் அவர்களுக்கு புரோடஸ்டன்ட் என்ற பெயர் ஏற்பட்டது. Protest என்றால் எதிர்ப்பு என்று அர்த்தம். அதுபோன்று Protestation என்றால் எதிர்ப்பை தெரிவித்தல் என்பதாகும். இயேசு மரித்த பிறகு கிறிஸ்தவம் ஐந்து புனித தலங்களை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தது. ரோமாபுரி, ஜெருசலேம், அந்தியோக்கியா, அலெக்ஸான்ட்ரியா, காண்ஸ்டாண்டிநோபிள் ஆகியவைதான் அப்புனிதத் தலங்கள்.

ரோமாபுரியைத் தலைமை இடமாகக் கொண்டு  கிறிஸ்தவ திருச்சபை இயங்கி வந்ததை விரும்பாத மற்ற தலைவர்கள் மேற்கு ஐரோப்பிய சபையில் இருந்து மெல்ல விலகத் தொடங்கினர். இந்தப் பிரிவு வலுப்பெற்றது 1054 ஆம் ஆண்டில்தான். அப்போது பிளவு நிச்சயமானது. நிரந்தரமானது.  இவ்வாறு பிரிந்தவர்கள் ”கிரீக் ஆர்த்தோடக்ஸ்” சர்ச் என்ற பெயரில் சபைகளை நிறுவினர் ரஷ்ய, கிழக்கு ஐரோப்பா, மத்திய கரைப் பகுதிகள் போன்ற இடங்களில் இச்சபைகள் தோன்றின. இவர்கள் கத்தோலிக்க பிரிவையும் சேராதவர்கள்,  புரோடஸ்டன்ட் பிரிவையும் சேராதவர்கள்.
 

மார்ட்டின் லூதர்

இதனையடுத்து 1500-ஆம் ஆண்டுகளில் மதச் சீர்திருத்தக் கருத்துக்கள் மேலோங்கின.  ரோமாபுரியைத் தலைமைப் பீடமாகக் கொண்ட திருச்சபைக்கு எதிரான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கின. முக்கியமாக ஜெர்மனியைச் சேர்ந்த மார்ட்டின் லூதர் (Martin Luther) பிரான்ஸின் ஜான் கல்வின் (john calvin) ஆகியோர் சீர்திருத்தச் சிந்தனையாளர்களாக உருவெடுத்தனர்.

 

ஜான் கல்வின்

மேலும் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இன்னும் சில சிந்தனையாளர்களும் இவர்களின் கருத்துக்கு வலுச் சேர்த்த காரணத்தால் கத்தோலிக்கத் திருச்சபையில் மிகப் பெரிய பிளவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. தனியாகப் பிரிந்த இத்திருச்சபை புரட்டஸ்டன்ட் என்று அழைக்கப்பட்டது.

கத்தோலிக்க பாதிரியாராகவும் ஜெர்மன் நாட்டின் விட்டன் பெர்க் பல்கலைக்கழகத்தில் மதம் சார்ந்த கலைகளுக்கான பேராசிரியராகவும் தேவாலயம் ஒன்றின் பொறுப்பாளராகவும் இருந்த மார்டின் லூதர் கத்தோலிக்க திருச்சபையில் இருந்து பிரிந்து அதற்கு எதிராகச் செயற்படுவதாக அறிவித்தார். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் பாப்பரசர் என்னும் நிலை கடவுளின் மூலம் கிடையாது என்றும் உரக்கக்கூறினார்.

இதனால் வருத்தமடைந்த பாப்பரசர், மீண்டும் மார்ட்டினை சமரசப் பேச்சுவார்த்தைக்காக ரோமுக்கு அழைத்தார். ஆனால் அவரோ பாப்பலசரைப் சந்திக்க மறுத்துவிட்டார்.  தனது நிலைப்பாட்டையே தீவிரமாகத் தொடர்ந்தார். இதனால் கோபமும், எரிச்சலும் அடைந்த பாப்பரசர் 1526-ஆம் ஆண்டு மார்ட்டின் லூதரை குற்றவாளியாகப் பிரகடனம் செய்தார். Deutsche Messe/ German Mass போன்ற அவரது நூல்கள் அனைத்தையும் எரித்துவிடுமாறும் கட்டளையிட்டார். ஆனால் மார்ட்டினோ இதைப் பற்றிக் கவலைப்படாமல் தனது முயற்சியைத் தொடர்ந்தார்.

 

மார்ட்டின் லூதரின் ஆட்சேபனைகள்

கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக அவர் இரண்டு முக்கிய ஆட்சேபனைகளை முன்வைத்தார். ஓன்று, புனிதப் புலி என்னும் சடங்கை  ஏற்க மறுத்தல் இரண்டு பாவ மன்னிப்பு பட்டயங்களை மறுத்தல்.

புனிதப் புலி சடங்கு என்பது பாதிரியார் ஜெபங்களை உச்சரித்துத் தரும் ரொட்டியையும், மதுவையும் பருகுபவரின் உடலில் இயேசு கிறிஸ்து இடம்பிடித்து அவருக்கு நல்வழிக் காட்டுவார் என்பது நம்பிக்கை. இத்திருப் பூஜையை மார்ட்டின் கடுமையாக விமர்சித்தார்.

1517-ஆம் ஆண்டு பாப்பரசர் பத்தாம் லியோ உலகம் முழுவதற்குமான பொது மன்னிப்புப் பட்டயங்களை வெளியிட்டார். இதன் மூலம் அப்பட்டயம் ஒன்றை விலை கொடுத்து வாங்குபவர் மன்னிப்புப் பெறலாம் ரோம்நகரில் உள்ள புனித பத்ரஸ் தேவாலயத்தைக் கட்டுவதற்குத் தேவையான நிதியைத் திரட்டவே பாப்பரசர் மன்னிப்புப் பட்டயங்களை வெளியிட்டார் என்பதால் மார்ட்டின் லூதர் இதையும் விமர்சித்தார்.

கத்தோலிக்கத் திருச்சபை கிறிஸ்தவர்கள் மீது மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வந்த காரணத்தால் புரட்டஸ்டன்ட் பிரிவில் சேர்ந்தவர்கள். கத்தோலிக்க திருச்சபைகளின் கெடுபிடிகளில் இருந்து தப்பிப்பதற்காக புதிய நாடாக விளங்கிய அமெரிக்காவை நோக்கிப் பயணப்பட்டார்கள். அமெரிக்க சமூகத்தில் இவர்கள் பெருமளவில் இடம் வகிப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.

 

புதிய இனங்கள்

16-ஆம் நூற்றாண்டில் தோன்றிய புரட்டஸ்டன்ட் பல சபைகளை நிறுவியது லூதர் இனம்,  கல்வின் இனம்,  சுவிங்லி இனம், அங்லிக்கன் இனம் என்று பல இனங்கள் உருவாகின.

இதில் அங்லிக்கன் இனத்தில் (Anglican) மூன்று முக்கிய அடிப்படைக் கொள்கைகள் பின்பற்றப்பட்டன.

1) விசுவாகத்தினதால் மட்டுமே ஒருவன் நற்கதி அடைய முடியும் என்பதும், பக்தி யோகமே ஒருவனுக்கு மீட்பைத் தரும் என்பதும் மட்டுமல்லாமல் புண்ணியம் முக்திப் பேற்றின் அடையாளம் என்பதும்  இவர்களின் நம்பிக்கை.

2) கிறிஸ்தவ திருமறை பைபிள் மட்டுமே சகல இறை உண்மைகளுக்கும் ஒரே ஆதாரம் பைபிள்,  திருச்சபையின் வளர்ந்த மரபு, பாரம்பரியம் ஆகியவற்றிற்கு திருமறையின் அதிகாரம் கிடையாது.

3) மதகுரு மட்டுமே ஆசாரியார்கள் என்பதை ஒப்புக் கொள்ள மறுத்து, சகல விசுவாசிகளும் ஆசாரியார்களே என்கிறது. இறைவனோடு ஒவ்வொருவரும் நேரடியாகத் தொர்பு கொள்வதே சரி. திருச்சபை மூலமாகத்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது தவறானது.

 

புரோடஸ்டன்ட் பிரிவில்  மக்களை ஈர்க்க மார்ட்டின் கையாண்ட மூன்று முக்கிய வழிமுறைகள்

o தேவாலயங்கள் சேர்த்து வைத்திருந்த பெருமளவிலான சொத்துக்களை அபகரித்துக் கொள்ள வேண்டும். தேவாலயங்கள் மற்றும் மடங்களை பொதுமக்கள் பயனடையும் விதத்தில் கல்விக் சாலைகளாகவும், மருத்துவமனைகளாகவும் மாற்றிவிடுமாறு அன்றைய மன்னர்களைத் தூண்டும் விதத்தில் நூல்களை வெளியிட்டார்.

o ஹேஷ் ஆட்சியாளர் ஒருவர் தனது மனைவி உயிருடன் இருந்தபோது, இன்னொரு பெண்ணை மணமுடிக்க விரும்பினார். அப்போது இரு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று உரக்க அறிவித்தார் மார்ட்டின் லூதர், இதன்மூலம் ஆட்சியாளரின் ஆதரவையும் அன்பையும் பெற்றார். 

o பாதிரியார்கள், மதகுருக்கள் ஆகியோர் துறவறத்தினால் பெரும் அவதி அடைந்து வந்த நிலையில் அவர்களின் ஆதரவைத் தன் பக்கம் ஈர்ப்பதற்கு மற்றொரு உத்தியைக் கையில் எடுத்தார்.  கார்தரின் என்ற பெண் துறவியைப் பலவந்தமாக அடைந்து திருமணம் செய்தார். பின்னரும் அருட்தந்தையாக நீடித்து முன் மாதிரியாகத்  திகழ்ந்தார்.

குடும்ப வாழ்வில் ஈடுபட்டு அருட்தந்தையாகத் திகழ்ந்த மார்ட்டின் லூதர், பின்னர் நோய்வாயப்பட்டு 1546-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். இறை உண்மைகளை விளக்கும் அதிகாரம்  கத்தோலிக்க தமதத்தில் பாப்பரசரைத் தலைவராகக் கொண்ட திருச்சபைக்கே உண்டு. ஆனால், புரோடஸ்டன்ட் மத்தினரோ பைபிளை மட்டுமே இறை உண்மைகளின் ஒரே ஆதாரமாகக் கொண்டிருந்தனர். இதனால் சீர்திருத்தவாதிகளும், ஆய்வாளர்களும் பைபிளின் உண்மைக் கருத்துகளுக்கு மாறுபட்ட விளக்கங்களை வெளிப்படுத்தினர். இதனால் புரோடஸ்டன்டிற்குள் சர்ச்சைகள் கிளம்பி பல்வேறு உட்பிரிவுகள் தோன்றின.

இங்கிலாந்தின் எமதடிஸ்சபை, பப்டிஸ்ட் சபை, கொங்கிரிகேஷனல் சபை ஆகியவை அங்லிக்கன் சபையில் இருந்தும் தனித்தனியாகப் பிரிந்தன. இச்சபைகள் யாவும் மிஷனரிகளை அமைத்து பிறநாடுகளில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. கோங்கிரிகேஷனல் சபையின் ஒரு பகுதியினர் பின்னர் அமெரிக்காவில் குடியேறினர்.

 

புரோடஸ்ட்ன்ட்டின் கருத்துகள்

o இயேசு கிறிஸ்துவுக்கு இரு இயல்பு நிலைகள் உள்ளன.
o பரிசுத்த ஆவியானவர் பிதா மற்றும் சுதனில் இருந்து தோற்றம் பெற்றவர்.
o மதகுருக்களிடம் பாவமன்னிப்பு கோர வேண்டியதில்லை.  நேரடியாக கடவுளிடமே பாவமன்னிப்பு கோரலாம்.
o ரொட்டி மற்றும் மது இயேசுவின் சதை மற்றும் ரத்தமாக மாறுகிறது என்பது ஏற்புடையதல்ல.
o சுவிசேஷத்தின் சில பகுதிகள் தேவையற்றது என்பதோடு அதனை நீக்கவும் செய்தல்.
o இயேசு மீண்டும் இப்பூமிக்கு வந்து ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்வார்.
o இயேசுவைப் பிரசவித்த பின்னர் மீண்டும் வேறு குழந்தைகளை மரியாள் பெற்றெடுத்தார்.
o பாப்பரசர்தான் சுவிசேஷத்திற்கான விளக்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல,  ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் சுவிசேஷ விளக்கம் அளிக்கும் உரிமை உண்டு.
o சுவிசேஷத்தில் காணப்படும் வழிபாட்டு முறைகள் மட்டுமே உண்மையானது.  அதனை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

 

கொலைக்களம் 

கிறிஸ்தவ மதத்தின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்ததோடு பாப்பரசரின் அதிகாரத்தையும் பெருமளவில் குறைப்பதான நடவடிக்கையை எடுத்து, மதத்தைப் பிளவுபடுத்தி உருவானது புரோடஸ்டன்ட் என்பதால் இப்பிரிவினர் மீது பாப்பரசர்கள் கடுமையான கோபமடைந்தனர். லட்சக்கணக்கில் உயிர்ப் பலி கொண்டதான போர்களை அவர்கள் நடத்தினர்.

16-ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் கத்தோலிக்கர்களும், புரோடஸ்டன்ட்களும் தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக யுத்தத்தில் ஈடுபட்டனர். 1536ஆம் ஆண்டு அயர்லாந்தில் புரோடஸ்டன்ட் சித்தாந்தத்தை ஆங்கிலேயர்கள் திணிக்க முயன்றனர்.  இதனை எதிர்த்து மிக நீண்ட சண்டை அங்கே நடந்தது.  கிட்டத்தட்ட 18-ஆம் நூற்றாண்டு வரை நீடித்த இச்சண்டையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் செத்து மடிந்தனர்.

1572-ஆம் ஆண்டு பாப்பரசர் பதின்மூன்றாம் கிரிகோரி என்பவரின் ஆசியுடன், புனித பர்த்தோலோமோ என்னும் இடத்தில் பண்டிகை தினத்தன்று கத்தோலிக்கர்கள் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். இக்கொலைக் களத்தில் சுமார் 30 ஆயிரம் புரோடஸ்டன்ட் பிரிவைச் சேர்ந்தவர்கள் வெட்டியும்,  மரங்களில் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டனர். ஆனால் வெறும் 2 ஆயிரம் பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக கத்தோலிக்கர்கள் சமாளித்தனர். ஜெர்மனியிலும் இரு பிரிவினருக்கும் இடையே முப்பது ஆண்டுக்காலம் சண்டை நீடித்தது 1618-ஆம் ஆண்டு வரை நீடித்த இப்போரில் லட்சக்கணக்கான மக்கள் மடிந்தனர்.

153-ஆம் ஆண்டு அயர்லாந்தில் புரோடஸ்டன்ட் சித்தாந்தத்தை ஆங்கிலேயர்கள் திணிக்க முயன்றனர்.  இதனை எதிர்த்து மிக நீண்ட சண்டை அங்கே நடந்தது. கிட்டத்தட்ட 18-ஆம் நூற்றாண்டு வரை நீடித்த அச்சண்டையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். ஸ்பெயின் நாட்டில் அண்மைக்காலத்தில், அதாவது 1936 முதல் 1939-ஆம் ஆண்டு வரை கத்தோலிக்கர்களுக்கும், புரோடஸ்டன்டுகளுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடந்தது.  இதில் 6 ஆயிரத்து 845 கத்தோலிக்க மத குருக்கள் உட்பட 3 லட்சத்து 6 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

 

யூதர்களுக்கு ஆதரவு 

புரோடஸ்டன்ட் மதம் தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதால் விவிலிய நூற்கள் பல்வேறு மொழிகளில் தாராளமாக மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன. விவிலியத்தை விளக்கும் உரிமை அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் உள்ளது என்னும் புரோடஸ்டன்ட் மதப் பிரிவினரின் கொள்கை இதன் காரணமாகப் பல காலமாக மத குருக்களின் பாதுகாப்பில் தேவாலயங்களுக்குள் முடங்கிக் கிடந்த பழைய ஏற்பாடு அனைவரின் கரங்களிலும் கிடைக்கும் நிலை உருவானது.

ஆபிரஹாமுடன் கர்த்தர் உடன்படிக்கை செய்து கொண்ட காலம் முதல் உலகம் அழியும் வரை பாலஸ்தீனம் யூதர்களின் பூர்வீகம் என்ற கருத்து இவர்களால் உறுதியாகக் கொள்ளப்பட்டது. பாலஸ்தீனத்தில் சியோனிச சாம்ராஜ்யத்தை யூதர்கள் உருவாக்கியதும்,  அங்கே மீண்டும் இயேசு கிறிஸ்து தோன்றுவார் என்பன போன்ற யூதர்களின் நம்பிக்கை கிறிஸ்தவ சமூகத்திற்குள் தாராளமாகப் பரவின.

இந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலும் அதிகளவில் புரோடஸ்டண்ட் மதத்தினரைக் கொண்டிருப்பதாலும் அமெரிக்கா யூதர்கள் வசித்துவரும் இஸ்ரேலுக்கு ஆதரவுக் கரம் நீட்டக் காரணமாக அமைந்தது.  தொடர்ந்து அமெரிக்காவும்,  மேற்குலக நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இன்று உலகளவில் நூற்றுக்கணக்கில் புரோடஸ்டன்ட் கிளைகள் பரவிக் கிடக்கின்றன.  கத்தோலிக்கப் பிரிவுக்கு இணையாக மிகப் பெரிய மதமாக இது விளங்குகிறது. 

 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

More from the section

மத அரசியல்-47: சீக்கிய மதம்
மத அரசியல்-46: ஆசீவகம்- விநாயகர், முருகன் எப்படி ஆசீவக நெறியின் கடவுளர்?
மத அரசியல்-45: ஆசீவகம் - எழுத்தியல்
மத அரசியல்-44: ஆசீவக மத நூல், ஐம்பூதக் கோட்பாடு, தருக்கவியல், எண்ணியக் கோட்பாடு, தந்திர உத்தி
மத அரசியல்-43: ஆசீவகம்-எண்ணியல்