வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

மத அரசியல்-6: கிறிஸ்தவம் - பெந்தகோஸ்து

By C.P.சரவணன்| DIN | Published: 13th August 2018 03:48 PM

 

பெந்தகோஸ்து (Pentecost)

பெந்தகோஸ்து சபை என்பது கிறிஸ்துவ சமயத்தின் மற்றொரு பிரிவு தூய ஆவியில் திருமுழுக்கு என்னும் வழியாகக் கடவுள் பற்றிய நேரடி அனுபவத்தைப் பெறலாம் என்று வலியுறுத்துகிறது இச்சபை. விவிலியத்தில் எந்தவிதமான தவறான தகவலும் கிடையாது என்று நம்பும் இச்சபை, இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்டோர் ஒவ்வொரு வரும் அவரைத் தம் சொந்த மீட்பராக ஏற்பதிலேயே மீட்பு அடங்குவதாக நம்புகிறது.

பாவத்தை விட்டு விட்டு மனமாற்றம் அடைவது, புதுப் பிறப்பு அடைவது, தூய ஆவியில் திருமுழுக்குப் பெறுவது என்னும் வகையில் ஒருவர் மீட்பு அடைகிறார் என்று பெந்தகோஸ்து சபைகள் பொதுவாக போதிக்கின்றன. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக விரைவிலேயே நிகழப்போகிறது என்னும் நம்பிக்கையின் அடிப்படையில், கிறிஸ்தவர்கள் புத்துணர்ச்சி பெறவேண்டும் என்றும், தூய்மைபெற வேண்டும் என்றும் கூறுகிறது பெந்தகோஸ்து.

 

 சார்லஸ் ஃபாக்ஸ் பாராம்

‘உறுதியான இறை நம்பிக்ககை இருந்தால் எந்த நோயிலிருந்தும் குணமடையலாம் என்ற கருத்தை 1900-ஆம் ஆண்டு சார்லஸ் ஃபாக்ஸ் பாராம் (Charles Fox Parham) முன்வைத்தார். அதன் அடிப்படையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அசூசா வீதியில் எழுப்புதல் கூட்டங்கள் (Azusa Street Revival) மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டன.

 

வில்லியம் செமோர்

இக்கூட்டங்கள் அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை எழுப்பி பின்னர் உலகம் முழுவதும் பெந்தகோஸ்து இயக்கமாகப் பரவியது. இக்கூட்டத்தை வில்லியம் செமோர் (William J. Seymour)தலைமையேற்று நடத்தினார். இந்த இயக்கத்தில் மூவொரு இறைவன்கொள்கை (doctrine of the Trinity) என்பதை ஏற்கும்பிரிவு (Trinitarian) என்றும்,  ஏற்காத பிரிவு (Non-Trinitarian) என்றும் இரு பெரும் பிரிவுகள் காணப்படுகின்றன.

பெந்தகோஸ்து இயக்கத்தில் 700 சபைப் பிரிவுகளும், தனிச் சபைகளும் உள்ளன. மைய அதிகாரம் உடைய சபை என்று எதுவும் இல்லை என்றாலும், பல பெற்தகோஸ்து உலக இணைப்பு என்னும் அமைப்பின் கீழ் இயங்கி வருகின்றன.

 

பெந்தகோஸ்துவின் பொருள் 

வருடத்தில் மொத்தம் 365 நாட்கள் இருந்தபோதிலும், ஒரேயொரு நாளை பெந்தபோஸ்து நாள் என்று இச்சபை கொண்டாடுகிறது. பெந்தகோஸ்து என்றால் ஐம்பதாவது நாள் என்று பொருள் இஸ்ரேல் மக்கள் பஸ்கா என்னும் பண்டிகையை முக்கியமாகக் கொண்டாடுகிறது.  இதன்பின்னர் ஐம்பதாவது நாள் அன்று பெந்தகோஸ்து நாள் கொண்டாடப்படுகிறது.

பஸ்கா பண்டிகைக்குப் பிறகு ஐம்பதாவது நாள் இஸ்ரேலியர் சினாய் மலைக்குச் சென்றார்கள். அங்கே அக்னி, மின்னல், இடி முழுக்கம், பூமி அதிர்வு ஆகியவற்றைக் கண்டார்கள். அப்போது கர்த்தர் சினாய் மலையில் இறங்கி இருந்தார். அது ஒரு அபிஷேக அனுபவமாக இருந்தது. அன்று 120 பேர் அபிஷேகம் பெற்றார்கள் 3 ஆயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள்.

 

பெந்தகோஸ்து கொள்கை 

பெந்தகோஸ்து 4 முக்கிய கொள்கைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

1)  இயேசு மீட்பளிக்கிறார்
2) தூய ஆவியில் திருமுழுக்கு வழங்குகிறார்
3) நோய்களைக் குணமாக்குகிறார்.
4) மீட்பு அடைந்தவர்களைத் தம்மோடு எடுத்துக் கொள்ள மீண்டும் வரவிருக்கிறார்.

புரட்டஸ்டன்ட் பிரிவில் இருந்து பிரிந்து காரணத்தால் அதன் நம்பிக்கைகள் பெந்தகோஸ்துவிலும் காணக்கிடக்கிறது. இயேசு சிலுவையில் மரித்தல், அடக்கம் செய்யப்படுதல், உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் வழியாக மனிதர்களுக்குப் பாவ மன்னிப்புக் கிடைக்கிறது. மனித குலம் கடவுளுடன் நல்ல உறவைப் பெறுகிறது.இப்படி நம்புகிறது இந்த இயக்கம்.

மனிதர்கள்  மறுபிறப்பு அடைய வேண்டும்.  இந்த மறுபிறப்பு இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வதன் மூலமாகவே கிடைக்கப் பெறுகிறது என்கிறது பெந்தகோஸ்து. கடவுள் வழங்கும் மீட்புக் கொடையை ஏற்போர் மீட்பு அடைந்து விண்ணகம் சேர்வர் என்றும், அதனை வேண்டாம் என்று புறக்கணிப்போர் நகரம் செல்வர் என்றும் பெந்தகோஸ்து சபையினர் நிச்சயமாக நம்புகின்றனர்.

 

திருச்சடங்குகள் 

இயேசு கிறிஸ்துக்கு சடங்குகள் சிலவற்றைச் செய்யும் பழக்கம் இவர்களிடமும் காணப்படுகிறது. திருவருள் சாதனங்கள் என்று கத்தோலிக்கமும், புரட்டஸ்டன்டும் அழைப்பதை இவர்கள் பயன்படுத்துவதில்லை. கடவுளின் அருளானது நம்பிக்கை கொண்டோர் மீது நேரடியாக இறங்குவதாகவும், சடங்கை நிகழ்த்தும் தலைவர் ஒரு கருவியாகச் செயல்படுவதாகவும் இவர்கள் கூறுகின்றனர். நற்கருணை அல்லது இயேசுவின் இரா உணவுச் சடங்கு இயேசுவின் நினைவாகச் செய்யப்படுவதாகவும், இதனை நிகழ்த்த இயேசு கட்டளையிட்டுள்ளதாகவும் நம்புகின்றனர்.

இரா உணவின்போது இயேசு நிகழ்த்திய பாதம் கழுவும் சடங்கு இப்போதும் சில பெற்தகோஸ்து சபைகளால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  இச்சடங்கு தாழ்ச்சியை வெளிப்படுத்துவதாக நம்பிக்கை.

 

பின்பற்றுதல் 

உலகில் சுமார் 50 கோடிப் பேர் பெந்தகோஸ்து இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் கிறிஸ்தவ மக்கள் தொகையில் சுமார் 13 சதவீதம். புரட்டஸ்டன்ட் பிரிவுகளில் உலகளவில் மிகவும் பெரியதாக பெந்தகோஸ்து சபை விளங்குகிறது. இவ்வியக்கம் உலகின் தென்கோளப் பகுதிகளில் அதிகமாகப் பரவி வருகிறது. 1960ஆம் ஆண்டுகளில் இருந்து பெந்தகோஸ்து சபையின் சில கூறுகள் மைய கிறிஸ்தவ சபைகளால் ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475 
 

More from the section

மத அரசியல்-58: சிவனியம்
மத அரசியல்-57: சிவன்
மத அரசியல்-56: சாங்கியம் ஓகம், வைசேடிகம் நியாயம், மீமாம்சை
மத அரசியல்-55: அய்யாவழி
மத அரசியல்-54: விசிஸ்டாத்வைதம்