செவ்வாய்க்கிழமை 19 மார்ச் 2019

மத அரசியல்-8: இஸ்லாம்

By C.P.சரவணன்| DIN | Published: 20th August 2018 05:01 PM

 

இஸ்லாம் என்றால் ‘அடிபணிவதை” சரணடைவதை அல்லது “தன்னையே ஒப்படைத்துவிடுதல்” என அர்த்தப்படுகிறது. ”முஸ்லீம்” என்றால் இஸ்லாமைக் கடைபிடிப்பவர் என்று பொருள். மற்ற மதங்களை இன்னின்னார் உருவாக்கினார்கள் என்பது எவ்வளவு தவறோ அதே தவறுதான் இஸ்லாமை முகம்மது நபி உருவாக்கினார் என்று சொல்வதும்.

முகம்மது நபி (Muhammad)

முகம்மது நபி  (Muḥammad), அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim), கிபி 570, 8, ஜூன்-இல் சவூதி அரேபியாவில் மக்கா நகரில் பிறந்தார். இவர் குரைஷி வம்சத்தில் பிறந்தவர். இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து சிறிய தந்தை அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார். இவரது 40-ஆவது வயதில் நபித்துவம் பெற்று இறை தூதுகள் கிடைக்கத் துவங்கின. அதன் பின்னர் அவர் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டினார்.

இவரே அராபியத் தீபகற்பம் முழுமையும் இஸ்லாம் என்ற ஒரே மதத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல், பாபிஸ்துகள், மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்றும் இறைவாக்கினர் என்றும் போற்றப்படுகிறார். உலக அளவில் முஸ்லிம்கள் முகம்மதுவை கடவுளால் மனித உலகிற்கு அனுப்பப்பட்ட கடைசி இறைவாக்கினர் என நம்புகின்றனர்.

கஅபா (Caaba)

அரேபியர்களின் வீரமும், போர் விருப்பமும் தொன்மையானவை. அயம்-அல்-அரபு என்ற வரலாற்றுப் புத்தகமாம், நபிகள் தோன்றுவதற்கு முன்பே அரேபியர்கள் 1700 போர்களில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. தங்களுக்குள் ஓய்வில்லாமல் சண்டையிட்டுக் கொண்டாலும் குறைஷி அரேபியப் பழக்குடியினர் மெக்காவிற்கு அருகிலிருந்த கஅபா (Caaba) கோயிலில் தான் இறைவணக்கமும் உயிர்பலியும் செய்து வந்தனர். " கஅபா" வில் உள்ள கருமையான கல் புனித சின்னமாய் போற்றி வழிபடப்படுகிறது. இந்தக் கல்லின் பெயர் 'ஹஜ்ர அஸ்வத்' என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பழங்குடியின் முக்கிய குடும்பமாகத் திகழ்ந்த ஹசிமைட் (Hashemites) குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இருந்தது. ஹசிமைட் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஒருவர் “இறைவன் ஒருவரே” என அறைக் கூவல் விடுத்தார்.

 

கஅபா

குறைஷி பழைமைவாதத்திலிருந்து ஒவ்வொரு குடும்பமாக விலகி “ஹசீம்” குடும்பத்தாரோடு இணைந்து கொண்டனர். விசுவாசப் படையின் தளபதிகள் என்ற பட்டத்தைப் பெற்ற இவர்கள் மெக்காவைக் கைப்பற்றி, மெக்கா நகருக்குள் கடவுள் நம்பிக்கையற்ற யாரும் நுழையக்கூடாது என்று சட்டம் இயற்றினர். கஅபா கோயிலின் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டு முகம்மதுவின் கடவுளுக்கான புனித தலமாக மாற்றப்பட்டது.

இப்ராகிம் நபிகளும் அவரது மகன் இஸ்மாயில் நபிகளும் ஒருசேர முயற்சி செய்து கஅபாவை கட்ட ஆரம்பித்தார்கள். கஅபாவை கட்டி முடித்த நிலையில் தான் இப்ராகிம் நபிகள் மேலே சொல்லப்பட்டுள்ள பிரார்த்தனையை ஓதினார்கள். அன்று முதல் இன்று வரை கஅபா புனிதமிகு ஆலயமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகம் அழியும் காலம் மட்டும் அது பாதுகாக்கப்படும் என்பதும் உறுதி.  அதிலும் மாபெரும் ஆச்சரியம், எந்த கனிவர்க்கமும் விளைய முடியாத அந்த பாலைவனத்தில் வருடம் முழுவதும் எல்லாவிதமான கனி வகைகளும் கிடைத்து வருவது என்பது அவர்கள் பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்பட்டதன் அடையாளமாக உள்ளது.

அதன் பின் கஅபா தன்னுடைய நிலைத்த தன்மையை இன்று வரை இழக்கவே இல்லை. முகம்மது நபி அவர்களின் காலத்தில் கி.பி.630 ஜனவரியில், மக்கா வெற்றியைத் தொடர்ந்து கஅபாவில் இருந்த 360 சிலைகள் அகற்றப்பட்டுயாத்திரிகர்களின் புனித தலமாக மாற்றப்பட்டது. கருங்கற்களால் கட்டப்பட்ட கஅபாவின் உயரம் 50 அடி, நீளம் 40 அடி, அகலம் 25 அடி. ருக்னுல் அஸ்வத், ருக்னுல் யாமானி, ருக்னுல் ஷாமி, ருக்னுல் ஹிந்த் என்ற நான்கு மூலைகள் கொண்ட கட்டிடமாக கஅபா உள்ளது.

 

மக்காமா இப்ராகிம்

இப்ராகிம் நபிகள் கஅபாவை கட்ட ஆரம்பித்த போது அதன் உயரம் அதிகரித்ததால் ஒரு கல்லின் மீது நின்று அதனை கட்ட ஆரம்பித்தார்கள். அப்போது கட்டிடத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க அந்த கல்லும் தன் உயரத்தை அதிகரித்துக் கொண்ட வந்தது. இவ்வாறு கஅபா கட்ட அந்தக் கல்லும் இப்ராகிம் நபிகளுக்கு உதவி புரிந்ததாக வரலாற்று குறிப்பு உள்ளது.

இப்ராகிம் நபிகள் நின்ற அந்த கல்லில் அவ ரது பாதம் பதிந்த சுவடு அப்படியே நிலைத்து விட்டது. அந்த கல்லோடு அவர்களின் பாத சுவடு களும் பாதுகாக்கப்பட்டு இன்றுவரை ‘மக்காமா இப்ராகிம்’ என்று கொண்டாடப்படுகின்றது.

 

திருமறை அல் குர்ஆன்
 

ஜபல் அல்-நூர் எனும் மலையில் அமைந்துள்ள கார்ஹிரா எனும் குகை 

அளவிலாக் கருனையும் இனையில்லாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால், இதுவே திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாகிய, அதாவது சூறாவாகிய அல் ஃபாத்திஹா ஆகும். சுமார் 40 வயதில் ஒரு நபியாக (Prophet) ஆகும்படியான அழைப்பை பெற்றார். மக்காவில் உள்ள கார் ஹிரா ( Ghar Hira) எனும் மலைக் குகையில், முகம்மது அவர்கள் வருடத்தின் பெரும் வாரங்களை, பிரார்த்தனை செய்து கழிப்பது வழக்கம். முகமது நபி முதன்முதலாக பெற்றுக் கொண்டதாக சொல்லப்படும் வெளிப்படுத்துதல் “அல் அலக்” (இரத்தக் கட்டி) என்ற தலைப்புள்ள சூறா-96 என இஸ்லாமிய அறிஞர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கின்றனர்.

கிபி 610-ஆம் வருடம், இதேப்போல் முகமது அம்மலைக்குச் சென்றபோது, காப்ரியல் முதலாவதாகத் தோன்றியப்பின், முகமது பெரும் துயரத்திற்கு ஆளானார். வீடு திரும்பிய முகமதுவை அவரது மனைவி கதீஜா மற்றும் அவரது கிறிஸ்த்துவ நண்பரான வரக்கா இப்னு நஃபல் இருவரும் ஆறுதல் படுத்தினர். காப்ரியல் தோன்றியதை கண்டு முகம்மது அஞ்சவில்லை என்றும், மேலும் அவர் அந்த நிகழ்வை முன்பே அறிந்ததுபோல அந்த தூதரை வரவேற்றதாகவும் ஷியா வரலாறு கூறுகிறது. கப்ரியலின் முதல் தோற்றத்திற்கு பின்பு மூன்று வருடங்களுக்கு மறுதோற்றம் நடக்கவில்லை, இந்த காலக்கட்டத்தை ஃபத்ரா என்கின்றனர். இக்காலக்கட்டத்தில் முகமது தொழுதல் மற்றும் ஆன்மீகத்தில் ஈடுப்பட்டு வந்தார். காப்ரியலின் மறுதோன்றாலுக்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்பினார் முகமது. கப்ரியல் அவரை பார்த்து "உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை." எனக்கூறி மதபோதகம் செய்யச் சொல்லி தூதர் அறிவுறுத்தினார்."மணியடிப்பதுப்போல வாசகங்கள் தோன்றின" என முகமது கூறியதாக புகாரி ஹதீஸ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முகமது (ஸல்)  அவர்களுக்கு வழங்கிய திருமறை அல் குர்ஆன் இஸ்லாத்திற்கு ஒரு முழு வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது. இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் குர்ஆன் ஆகும்.  அது ஸ்-ல்-ம் என்னும் மூன்று அரபி எழுத்துகளில் இருந்து உருவான ஒரு வினைப் பெயர்ச் சொல். ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல், கீழ்ப்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இதன் அர்த்தம் கடவுளை ஏற்றுக்  கொண்டு, தம்மை அவனிடம் ஒப்படைத்து, அவனை வழிபடுவது என்பதாகும்.

கடவுள் ஒருவனே அவனே அல்லாஹ். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பது இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லாஹ் என்பது கடவுள் என்ற பொருள் கொண்ட பால்வேறுபாடு காட்டாத ஒரு படர்கைச் சொல்.  இது அரேபிய நாடோடிக் குழுக்கள்,  தங்கள் தெய்வத்தைக் குறிக்க பயன்படுத்திய சொல் என்பது குறிப்பிடத்தக்கது.

குரானை பெற்றுக் கொள்ள சுமார் 20 முதல் 23 (கி.பி.610-கி.பி.632) ஆண்டுகள் எனச் சொல்லப்படுகிறது. பேப்பர் தயாரிக்கும் முறையை அப்போது அரேபியர்கள் அறிந்திருக்கவில்லை. ஆகவே, அப்போது கிடைத்த ஒட்டகத்தின் தோள்பட்டை, எலும்புகள், பனை ஓலை, மரத்துண்டுகளை செய்திகளை எழுதி வைக்கச் செய்தார்.

 

மக்காவிற்கு பல பெயர்கள் 

1.மக்கா, 2.பக்கா, 3.அல் பைத்துல் ஹராம் (புனித மிக்க வீடு), 4.அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 5.உம்முல் குரா (நகரங்களின் தாய்), 6.உம்மு ரஹீம் (கருணையின் தாய்), 7.அல் மஃமூன் (பாதுகாக்கப்பட்டது), 8.அல் காதிஸ் (பாவங்களை விட்டும் தூய்மையாக்கக் கூடியது), 9.அல் பைத்துல்.

இறைவனை நம்புவதன் மூலம் அவனது கட்டளைப்படி நடந்தால், முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களைப் பெற முடியும் என்பது இஸ்லாமின் உறுதியான நம்பிக்கை, இறை வணக்கம்,  நோன்பு,  கட்டாயப் பொருள்தானம்,  மெக்காவை நோக்கிய புனிதப் பயணம் ஆகியவை இஸ்லாமின் கட்டாயக் கடமை.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் முகமது முதலாக இறைவனால் அனுப்பப்பட்ட இறை தூதர்களில் இறுதியானராக முகமது நபி அடையாளப்படுத்தப்படுகிறார். நூஹ் (அலை) நோவா-இப்ராகிம் (அலை) அபிரகாம் - இஸ்மாயில் (அலை) தாவூத் (அலை) முசா (அலை), மோசஸ் - ஈசா (அலை),  இயேசு ஆகியோரும், பிற இறை தூதர்களும் உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அனைவலுமே ஒரே நெறியைத்தான் போதித்ததார்கள். இதே சங்கிலித் தொடரில் வந்தவரே முகமது (ஸல்)

 

மதீனா வாழ்க்கை

“குரேஷ்” என்னும் பூசாரிகள் முகம்மது நபியைக் கொல்லத் திட்டமிட்டதால், கி.பி.614-இல் மக்காவை விட்டு, யஸ்ரிபுரிக்குச் சென்றுவிட (ஹிஜ்ரத்) நேர்ந்தது. இதன் நினைவாகவே “ஹிஜ்ரி ஆண்டு” கொண்டாடப்படுகிறது. 

முஹம்மது நபி நபித்துவம் வழங்கப்பட்டு பதினான்காம் வருடம் இறைவனின உத்தரவுப்படி தன் உற்ற தோழர் அபூபக்கர்ருடன் மதீனாவிற்கு (ஹிஜ்ரத்) குடிபெயர்ந்து சென்றார். இந்த ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட கி.பி. 622-ஆம் வருடம் இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டது. மதீனா நகரில் அனைத்து மக்களும் முகம்மது நபியை வரவேற்றனர். முகம்மது நபி தமது ஒட்டகம் சென்று அமர்ந்த அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்கருகிலுள்ள இடத்தில் தமது தங்குமிடத்தை அமைத்தார்.

 

அல்-மஸ்ஜித் அந்-நபவி, சவுதி அரேபியா 

முகம்மது நபி தமது தங்குமிடத்திற்கு அருகில் தொழுகைக்கு கட்டியப் பள்ளிவாசல் அல்-மஸ்ஜித் அந்-நபவி (முகம்மது நபி கட்டிய பள்ளிவாசல்) என்று அழைக்கப்படுகிறது. இது முஸ்லிம்களின் இரண்டாவது புனிதத் தலமாகும். மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களுக்கும் மதீனா நகர அன்சாரிகளுக்கும் சகோதரத்துவ ஒப்பந்தம் ஏற்படுத்தினார். மேலும் மதீனா யூதர்களுடன் நட்புறவு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.

முகமது நபிக்கு முன்னர் வந்த இறை தூதர்களான மூசாவிற்கு தவ்ராத் என்னும் வேதமும், தாவூத்திற்கு சபூர் என்னும் வேதமும் ஈசாவிற்கு இஞ்சில் என்னும் வேதமும் இறைவனால் கொடுக்கப் பட்டதாக குர்ஆன் கூறுகிறது.

விதி எனப்படுவது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது.  அதன் புரிதல் இறைவனுக்கு மட்டுமே உண்டு என்று நம்புவது இஸ்லாமின் முக்கியக் கடமை விதியைப் பற்றி சிந்திப்பழைதயோ அல்லது அதைப் பற்றி தர்க்கம் செய்வதையோ குரான் தடுக்கிறது.

மேலும் தன்னைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியவை ஐந்து கடமைகள் என்று இஸ்லாம் கூறுகிறது.  இதனை இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் என்று அழைக்கின்றனர்.  அவை கலிமா, தொழுகை, நோன்பு,  ஜகாத், ஹஸ்.குலிமா என்பது இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றும், முகமது நபி இறைவனழனட தூதராக இருக்கிறார் என்றும் நம்புவதாகும். இதனை நம்பி சாட்சி பகர்நதால் மட்டுமே ஒருவர் முஸ்லீம் ஆகிறார்.

தொழுகை என்பது வயது வந்த அனைத்து முஸ்லீம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாவைத் தொழ வேண்டும் மனநோயாளிகள், சிறுவர்கள், மாதவிடாய் காலத்துப் பெண்கள் ஆகியோருக்கும் மட்டுமே இதிலிருந்து விதிவிலக்கு உண்டு.  பயணம் செய்கிறபோது தொழுகைகளைச் சேர்த்து தொழுவதற்கும் குறைத்து தொழுவதற்கும் இஸ்லாம் அனுமதியளிக்கிறது.

நோன்பு என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் அனுசரிக்கப்படுவது. ஆதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பிருந்து, சூரியன் மறையும் வரை உண்ணாமல் இருக்க வேண்டும். தண்ணீர்கூட அருந்தக் கூடாது மது, புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் அறவே கூடாது. ஜகாத் என்பது வளர்ச்சி அடைதல், தூய்மைப்படுத்துதல் என்பனவாகும். வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் நான்கில் ஒரு பங்கினை ஏழைகளுக்குக் கொடுப்பதாகும். ஏழைகளுக்கும், கடன்பட்டோர்க்கும், தங்கள் தேவையைத் தாங்களே பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.

ஹஸ் என்பது இஸ்லாமியர்களுக்கான புனித யாத்திரையைக் குறிப்பிடுவது. பொருளாதார வசதியும், உடல் வலிமையும் இருக்கும் நிலையில் மெக்காவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும். மனிதர்கள் அனைவரும் சமம் என்பதை உணர்த்து வதற்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நிறத்தால், இனத்தால், மொழியால் எவரும் ஒருவரைவிட ஒருவர் உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ இல்லை என்பதும் இறைவன் முன்னால் அனைவரும் சரிசமம் என்று உணர்ந்து அவனை அடிபணிதல் வேண்டும் என்பதையும் கற்றுக் தருகிறது. இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தின் 8 முதல் 12 வரை கடைப்படிக்கப்படும் ஹஜ் வசதி இல்லாதோரை வற்புறுத்துவது இல்லை.

 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
 

More from the section

மத அரசியல்-61: சைவ சமயம்-தத்துவங்கள்
மத அரசியல்-60: சைவ சமய வளர்ச்சியும், சைவ சமய உட்பிரிவுகளும்
மத அரசியல்-59: சிவமதம்
மத அரசியல்-58: சிவனியம்
மத அரசியல்-57: சிவன்