24 பிப்ரவரி 2019

ஆகஸ்ட் மாத வாகன விற்பனை நிலவரம்

DIN | Published: 02nd September 2018 12:58 AM

 

புது தில்லி: சென்ற ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுஸூகி தவிர்த்து பெரும்பாலான நிறுவனங்களின் வாகன விற்பனை அதிகரித்தே காணப்பட்டது.

மாருதி சுஸூகி விற்பனை 3.4% சரிவு

வாகன தயாரிப்பில் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் மாருதி சுஸூகியின் கார் விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 3.4 சதவீதம் சரிவடைந்து 1,58,189-ஆக இருந்தது. கடந்தாண்டின் இதே கால அளவில் விற்பனை 1,63,701-ஆக காணப்பட்டது.

உள்நாட்டில் கார் விற்பனை 1,52,000-லிருந்து 2.8 சதவீதம் குறைந்து 1,47,700-ஆனது. குறிப்பாக, ஸ்விப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிûஸயர் விற்பனை 74,012-லிருந்து 3.6 சதவீதம் சரிந்து 71,364-ஆக இருந்தது.  அதேசமயம், சிறிய ரகத்தைச் சேர்ந்த ஆல்டோ, வேகன் ஆர் விற்பனை 1.3 சதவீதம் அதிகரித்து 35,895-ஆக காணப்பட்டது. நிறுவனத்தின் கார் ஏற்றுமதி 10.4 சதவீதம் சரிவடைந்து 10,489-ஆனது என மாருதி சுஸூகி தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் விற்பனை 27% உயர்வு

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 58,262 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டின் இதே கால அளவில் விற்பனையான 45,906 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 27 சதவீதம் அதிகமாகும்.
பயணிகள் கார் விற்பனை 28 சதவீதம் உயர்ந்து 18,420-ஆகவும், வர்த்தக வாகன  விற்பனை 31,566-லிருந்து 26 சதவீதம் வளர்ச்சி கண்டு 39,859-ஆகவும் இருந்தன. பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் மொத்த ஏற்றுமதி 78 சதவீதம் உயர்ந்து 5,478-ஆக இருந்ததாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.


அசோக் லேலண்ட் விற்பனை 27% வளர்ச்சி

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத விற்பனை 27 சதவீதம் உயர்ந்து 17,386-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் வாகன விற்பனை 13,637-ஆக காணப்பட்டது. நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 24 சதவீதம் அதிகரித்து 13,158-ஆகவும், இலகு ரக வர்த்தக வாகன விற்பனை 38 சதவீதம் உயர்ந்து 4,228-ஆகவும் இருந்ததாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.


ஃபோர்டு விற்பனை 31% அதிகரிப்பு

ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை சென்ற ஆகஸ்டில் 31.18 சதவீதம் அதிகரித்து 20,648-ஆக இருந்தது. கடந்தாண்டில் வாகன விற்பனை 15,740-ஆக காணப்பட்டது. ஏற்றுமதி 58.30 சதவீதம் உயர்ந்து 12,606-ஆக இருந்ததாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.


ஹுண்டாய் விற்பனை  3.4% உயர்வு

ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் 61,912 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு இதேகால அளவு விற்பனையான 59,905 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 3.4 சதவீதம் அதிகம். உள்நாட்டு சந்தையில் விற்பனை 2.8 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம், ஏற்றுமதி 25.8 சதவீதம் அதிகரித்து 16,111-ஐ எட்டியுள்ளதாக ஹுண்டாய் தெரிவித்துள்ளது.


மஹிந்திரா விற்பனை 14% வளர்ச்சி

உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 48,324 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு விற்பனையான 42,207 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் அதிகம். உள்நாட்டு சந்தையில் வாகன விற்பனை 15 சதவீதம் அதிகரித்து 45,373 ஆகவும், ஏற்றுமதி 14 சதவீதம் வளர்ச்சி கண்டு 2,951-ஆகவும் இருந்தது என மஹிந்திரா தெரிவித்துள்ளது.


டிவிஎஸ் மோட்டார் விற்பனை 8% ஏற்றம்

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதம் அதிகரித்து 3,43,217-ஆக இருந்தது. கடந்தாண்டு இதே மாத கால அளவில் விற்பனை 3,17,563-ஆக காணப்பட்டது. மொத்த இருசக்கர வாகன விற்பனை 3,09,146-லிருந்து அதிகரித்து 3,30,076-ஆக இருந்தது. உள்நாட்டு சந்தையில் இருசக்கர வாகன விற்பனை 2 சதவீதம் உயர்ந்து 2,75,688-ஆக இருந்தது.  மூன்று சக்கர வாகன விற்பனை 8,147 என்ற எண்ணிக்கையிலிருந்து 56 சதவீதம் வளர்ச்சி கண்டு 13,141-ஆனது. ஏற்றுமதி 45 சதவீதம் அதிகரித்து  66,028-ஆக இருந்தது. அயல் நாடுகளுக்கான இருசக்கர வாகன ஏற்றுமதி 41 சதவீதம் உயர்ந்து 54,388-ஆக காணப்பட்டது என டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது.

More from the section

ஃபோர்டு இந்தியாவின் புதிய எண்டவர் கார் அறிமுகம்
மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார் அறிமுகம்
டாடா மோட்டார்ஸ் சர்வதேச விற்பனை 12 சதவீதம் சரிவு
கார், பைக் விற்பனை 1.87 சதவீதம் சரிவு
லம்போர்கினி ஹுரகன் இவோ' கார் இந்தியாவில் அறிமுகம்