செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

கேரள மழை வெள்ளம் எதிரொலி: பாதிப்படைந்த நாமக்கல் கோழிப் பண்ணைத் தொழில்

DIN | Published: 10th September 2018 03:00 AM

கேரள மாநிலத்தில் பெய்த கன மழையால் நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முட்டை, கோழி விற்பனை சரிந்ததால் ஒரே மாதத்தில் ரூ.20 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

 கேரள மாநிலத்துக்கு நாமக்கல் கோழிப் பண்ணைகளில் இருந்து தினமும் சுமார் 1 கோடி முட்டைகள், சுமார் 50,000 முட்டைக் கோழிகள் இறைச்சிக்காக அனுப்பப்படுகின்றன. கோழிப் பண்ணைகளில் பிடிக்கப்படும் வயதான கோழிகள் இறைச்சிக்காக கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படுகின்றன.

 நாமக்கல் மண்டலத்தில் தினமும் உற்பத்தியாகும் சுமார் 3 கோடி முட்டைகளில் கேரளத்துக்கு மட்டுமே 1 கோடி முட்டைகள் அனுப்பப்படுகின்றன.

 கேரளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்திலிருந்தே பெய்து வந்த கன மழையால், கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சுமார் 15 நாட்களுக்கு } தினமும் சுமார் 75 லட்சம் முட்டைகளை அனுப்ப முடியவில்லை. இதனால் தேங்கிய முட்டைகளை மைனஸ் ஒரு ரூபாய் வரையிலான ""விலையில்'' உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பண்ணையாளர்கள் அனுப்பி வைத்தனர். இதனால் கடந்த மாதம் 25-ஆம் தேதி வரை கோழிப் பண்ணையாளர்களுக்கு ரூ.12 கோடி வரை இழப்பு ஏற்பட்டது.

 இதுபோல், கோழிகள் அனுப்புவதும் பாதி எண்ணிக்கை அளவுக்கு குறைந்து விட்டது. கோழி கிலோவுக்கு சாராசரியாக ரூ.60}க்கு விற்பனையான நிலையில், தினமும் சுமார் 50,000 கிலோ அளவுக்கு கோழிகளை அனுப்ப முடியவில்லை. இதனால் பண்ணைகளில் வயதான கோழிகளைப் பிடிப்பது தேக்கமடைந்து, 15 நாள்களில் சுமார் ரூ. 5 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
 இதையடுத்து, 25-ஆம் தேதிக்குப் பிறகு கேரளத்தில் வெள்ளம் வடிந்த நிலையில், படிப்படியாக முட்டை அனுப்புவது அதிகரித்துள்ளது. கடந்த 9-ஆம் தேதி வரை தினமும் 75 லட்சம் முட்டைகள் அனுப்பப்பட்டன. இருப்பினும், தினமும் 25 லட்சம் முட்டைகள் தேங்குவதால், மைனஸ் விலைக்கு விற்க வேண்டியுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களில் ரூ.3 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 10 நாட்களில் கோழி விற்பனை சரிவால் ரூ.1 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் பண்ணையாளர்கள்.

 வாழ வைக்கும் கேரளம்

 இதுகுறித்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் ஏ.கே.பி.சின்ராஜ் கூறியதாவது: நாமக்கல்லில் இருந்து கேரளத்துக்கு தினமும் 1 கோடி முட்டைகள் விற்பனைக்குக் கொண்டு செல்வது வழக்கம். கடந்த மாதம் கேரள மாநிலம் முழுவதும் கன மழை பெய்ததால், மாநிலம் முழுவதும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

 இதன் காரணமாக கடந்த மாதம் 25 }ஆம் தேதி வரை நாமக்கல்லில் இருந்து முட்டையை கேரள மாநிலத்துக்கு சுமார் 7.5 கோடி அளவுக்கு முட்டை கொண்டு செல்ல இயலவில்லை. இப்போதும் கேரளத்துக்கு தினமும் அனுப்பும் முட்டைகளின் எண்ணிக்கையானது, 25 லட்சம் வரை குறைந்துள்ளது. கடந்த 10 நாள்களாக நிலைமை சற்று சீரடைந்துள்ளது என்றாலும், இயல்பு நிலை திரும்ப இன்னும் சில நாள்கள் ஆகலாம்.

 நாமக்கல் கோழிப் பண்ணையாளர்களை வாழ வைக்கும் கேரள மாநிலம் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், கோழிப் பண்ணையாளர்களுக்கு கடந்த 20 நாட்களில் சுமார் ரூ.20 கோடி வரை தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர வாய்ப்புள்ளது. இதனால் இழப்பு மேலும் ரூ.5 கோடி அளவுக்கு அதிகரிக்கும் என அஞ்ச இடமிருக்கிறது என்றார்.

 வாங்கும் சக்தி இல்லை

 கேரளத்தில் மழை வெள்ளத்தால் 10 சதவீத மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். தொழில், விவசாயம், மீன்பிடி தொழில் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம் இல்லாததால், மக்களிடம் வாங்கும் சக்தி மிகவும் குறைந்துள்ளது. இதனால் கேரளத்துக்கான நாமக்கல் முட்டை, கோழித் தொழில் முழுமையாக சீரடைய மூன்று மாதங்கள் வரை ஆகும் என்றார் தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம்.
 இதுகுறித்து அவர் மேலும் கூறியது:-

 மழை வெள்ளத்தால் கேரள மாநிலத்தில் வசதியாக இருந்த பலர் வீடு, நிலம், சொத்து என அனைத்தையும் இழந்து ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்களிடம் வாங்கும் சக்தி என்பது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 மேலும், அங்கு மழை வெள்ளத்தால் வீட்டுப் பொருள்கள் முற்றிலும் நாசமடைந்துவிட்டன. வீட்டின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கே அந்த மாநில மக்கள் பெருமளவில் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளதால், முட்டைத் தொழில் சீரடைய மேலும் சில மாதங்கள் வரை பண்ணையாளர்கள் காத்திருக்க வேண்டும் என்றார்.
 - கே. விஜயபாஸ்கர்
 

More from the section

கோட்டக் மஹிந்திரா வங்கி லாபம் ரூ.1,291 கோடி
சென்செக்ஸ் 192 புள்ளிகள் உயர்வு
ஓஎன்ஜிசி: பங்குகளை திரும்பப் பெறும் திட்டம் ஜன. 29-இல் தொடக்கம்
புதிய மாடல்களில் பைக்: யமஹா மோட்டார் அறிமுகம்
சரியான பாதையில் செல்கிறதா இந்திய வாகனத் துறை?