திங்கள்கிழமை 25 மார்ச் 2019

பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 311 புள்ளிகள் சரிவு

DIN | Published: 19th February 2019 12:52 AM


வங்கி, ஆட்டோ மொபைல், தகவல் தொழில்நுட்ப துறைகள் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் சரிவைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 311 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.
கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பதாக ரிசர்வ் வங்கி இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஒருசில வங்கிகளே புதிய வட்டி விகிதத்தை அமல்படுத்துவதாகத் தெரிவித்தன. இதையடுத்து, வர்த்தக வங்கிகளின் தலைவர்களை சந்தித்து, வட்டி விகிதக் குறைப்பை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தி வலியுறுத்தப் போவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்திருந்தார். இந்த நிலையில், திங்கள்கிழமை பங்குச் சந்தையில் வங்கித் துறை பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இந்த வீழ்ச்சியிலும், தொலைத் தொடர்பு துறை பங்குகள் சிறிய ஏற்றத்தைக் கண்டன.
நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனியார் துறையில் மிகப் பெரிய வங்கியான ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி பங்கு விலை சரிந்தது. வங்கித் துறை பங்கு விலை 1.36 சதவீத அளவுக்கு சரிந்தது.
டாடா கன்சல்டன்சி, ஐடிசி, சன் பார்மா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோல் இந்தியா, ஏஷியன் பெயின்ட்ஸ், மாருதி சுஸுகி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், எச்.ஸி.எல்.டெக் ஆகிய பங்குகள் இழப்பை சந்தித்தன. எனினும், ஓ.என்.ஜி.சி., டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, வேதாந்தா, என்.டி.பி.சி., இண்டஸ்இந்த், எச்.டி.எப்.சி. ஆகியவற்றின் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 853.25 கோடி மதிப்பிலான பங்குகளை கடந்த வெள்ளிக்கிழமை விற்பனை செய்ததாக மும்பை பங்குச் சந்தை அறிவித்தது. 
வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 35,498 புள்ளிகளாக நிலைத்தது. தொடர்ச்சியாக எட்டு நாள்கள் மும்பை பங்குச் சந்தையில் சரிவு நிலை காணப்படுகிறது.
தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 83 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. ஐம்பது முக்கிய நிறுவனப் பங்குகளின் குறியீடான நிஃப்டி வர்த்தக இறுதியில் 10,640 புள்ளிகளாக நிலைத்தது.

More from the section

தங்கம் பவுனுக்கு ரூ.168 உயர்வு
எஸ்ஆர்எஸ் பைனான்ஸ்  ரூ.13 கோடி கடன் மோசடி: ரிசர்வ் வங்கியிடம் கர்நாடக வங்கி அறிக்கை தாக்கல்
வாகனங்களின் விலை ரூ.25,000 வரை உயரும்
அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.28.39 லட்சம் கோடியாக அதிகரிப்பு
வங்கிகளை இணைப்பதால் சிறப்பாக செயல்பட முடியும்: பரோடா வங்கி பொது மேலாளர்