திங்கள்கிழமை 25 மார்ச் 2019

பங்குச் சந்தையில் தொடர் விறுவிறுப்பு

DIN | Published: 22nd February 2019 12:51 AM


அந்நிய முதலீட்டு வரத்து அதிகரிப்பால் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
உள்நாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் முதலீட்டை ஆர்வத்துடன் அதிகரித்தனர். இந்த அந்நிய முதலீட்டு வரத்தும் பங்குச் சந்தைகளுக்கு சாதகமாக இருந்தது. 
வட்டி விகிதத்தை உயர்த்தும் நடவடிக்கையில் அமெரிக்க மத்திய வங்கி நிதானப் போக்கை கடைப்பிடிக்கும் என்ற நிலைப்பாட்டால் சர்வதேச சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. இருப்பினும் அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் காணப்படவில்லை.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை   2.94 சதவீத ஏற்றத்தை சந்தித்தது. அதைத் தொடர்ந்து, வேதாந்தா, பஜாஜ் பைனான்ஸ், சன் பார்மா, ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், ஆர்ஐஎல், எல் & டி, எஸ்பிஐ பங்குகளின் விலை 2.78 சதவீதம் வரை அதிகரித்தன.
அதேசமயம், யெஸ் வங்கி, கோல் இந்தியா, இன்ஃபோசிஸ், இன்டஸ்இண்ட் வங்கி, கோட்டக் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐடிசி, டிசிஎஸ் பங்குகளின் விலை 1.33 சதவீதம் வரை சரிந்தன.
12 பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய அரசு ரூ.48,239 கோடி மூலதனத்தை வழங்கவுள்ளதாக தெரிவித்ததன் எதிரொலியாக வங்கித் துறை பங்குகளுக்கு சந்தையில் அதிக தேவை காணப்பட்டது. 
இதையடுத்து, கார்ப்பரேஷன் வங்கி பங்கின் விலை 19.02 சதவீதம் உயர்ந்தது. அதைத் தொடர்ந்து, யூகோ வங்கி பங்கின் விலை 8.75 சதவீதமும், யுனைடெட் இந்தியா பங்கின் விலை 7.19 சதவீதமும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் விலை 5.50 சதவீதமும் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 142 புள்ளிகள் அதிகரித்து 35,898 புள்ளிகளில் நிலைத்தது. 
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 54 புள்ளிகள் உயர்ந்து 10,789 புள்ளிகளில் நிலைத்தது.
 

More from the section

தங்கம் பவுனுக்கு ரூ.168 உயர்வு
எஸ்ஆர்எஸ் பைனான்ஸ்  ரூ.13 கோடி கடன் மோசடி: ரிசர்வ் வங்கியிடம் கர்நாடக வங்கி அறிக்கை தாக்கல்
வாகனங்களின் விலை ரூ.25,000 வரை உயரும்
அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.28.39 லட்சம் கோடியாக அதிகரிப்பு
வங்கிகளை இணைப்பதால் சிறப்பாக செயல்பட முடியும்: பரோடா வங்கி பொது மேலாளர்