வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

சரியான பாதையில் செல்கிறதா இந்திய வாகனத் துறை?

By - நாகா| DIN | Published: 21st January 2019 03:42 AM

இந்தியப் பொருளாதாரத்தின் ஆதாரமாக விளங்கும் முக்கியத் துறைகளில் ஒன்று ஆட்டோமொபைல்.
கடந்த 2016-ஆம் ஆண்டின் நிலவரப்படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஆட்டோமொபைல் துறை 7.1 சதவீதம் பங்களிப்பு வழங்கியுள்ளது. அந்தத் துறை மூலம் 3.2 கோடி பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
2000-ஆம் ஆண்டிலிருந்து 2017-ஆம் ஆண்டு வரை 1,841 கோடி டாலர் (ரூ.1.31 லட்சம் கோடி) அந்நிய நேரடி முதலீட்டை இந்திய ஆட்டோமொபைல் துறை கவர்ந்துள்ளது.
பெரும்பாலான வெளிநாடுகளின் விருப்பத் தேர்வாக இந்திய ஆட்டோமொபைல் துறை திகழ்கிறது. ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட ஆட்டோமொபைல் ஜாம்பவான்கள், இந்தியச் சந்தையில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.
ஜப்பானின் சுஸýகி நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் பாதி, இந்தியாவில்தான் நடைபெறுகிறது. அதுபோல ஹோண்டாவும் தனது தொழிலில் இந்தியாவுக்கு முக்கிய இடத்தைக் கொடுத்துள்ளது.
இத்தனை சிறப்புகள் மிக்க இந்திய ஆட்டோமொபைல் துறையின் சிறப்புக்கு மகுடம் சூட்டியது போல, கடந்த 2017-ஆம் ஆண்டில் அந்தத் துறை உலகின் நான்காவது பெரிய ஆட்டோமொபைல் துறை என்ற அந்தஸ்தைப் பெற்றது.
 ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்திய ஆட்டோமொபைல் துறை அந்த இடத்துக்கு உயர்ந்துள்ளது. 2020-க்குள் இன்னும் ஒரு படி மேலே உயர்ந்து, உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் துறை என்ற உயரத்தை அது அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026-ஆம் ஆண்டு வாக்கில் 30,000 கோடி டாலர் (ரூ.21.37 லட்சம் கோடி) வருடாந்திர வருவாய் ஈட்டவும், 6.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீத பங்களிப்பை வழங்கவும் இந்திய ஆட்டோமொபைல் துறையால் முடியும் என்று அடித்துக் கூறுபவர்களும் உண்டு.
இந்த வகையில் பல வெற்றிக் கதைகளுடன் பயணித்தாலும், இந்திய ஆட்டோமொபைல் துறை செல்லும் பாதை சரிதானா? என்று கேள்வி எழுப்புபவர்களும் இருக்கிறார்கள்.
உலக ஆட்டோமொபைல் துறையில் ஏற்படவிருக்கும் தலைகீழ் மாற்றம்தான் அதற்குக் காரணம் என்கிறார்கள் அவர்கள்.
இத்தனை ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் எரிபொருளுக்குப் பதிலாக, மாற்று எரிபொருளை நாடி சர்வதேச ஆட்டோமொபைல் துறை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
குறைந்து வரும் வள ஆதாரமான பெட்ரோல்-டீசலை நம்பியிராமல், மாற்று எரிபொருளைத் தேடியும், சுற்றுச் சூழலில் மாசுபாட்டை ஏற்படுத்தி உலக வெப்பமயமாதலை உருவாக்காமல் தடுப்பதற்கும் புதிய எரிபொருள்களை சர்வதேச ஆட்டோமொபைல் துறை மேம்படுத்தி வருகிறது.
ஆட்டோமொபைல் துறையில் இனி வரும் காலம் லித்தியம், கோபால்ட் போன்ற பொருள்களின் காலம் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், எதிர்கால ஆட்டோமொபைல் தேவையை இப்போதே மனதிற்கொண்டு, லித்தியம் பேட்டரியில் இயங்கும் வாகனத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றன.
மேலும், பெட்ரோல் -டீசல் கார்களின் பயன்பாட்டுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை இயற்றி செயல்படுத்தியும் வருகின்றன.
சீனாவைப் பொருத்தவரை, பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் தயாரிப்பில் தற்போதே அந்த நாடு முன்னிலை வகிக்கிறது.
மேலும், அந்த நாட்டில் லித்தியம் மற்றும் கோபால்ட் வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
ஆனால், இந்தியாவிலோ, வாகனத் துறையின் எதிர்காலமான லித்தியமும், கோபால்ட்டும் மிகக் குறைந்த அளவே உள்ளன. நாகாலாந்து, ஜார்க்கண்ட், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் மட்டுமே அவை கொஞ்சமாகக் கிடைக்கின்றன.
இந்தச் சூழலில், அந்தப் பொருள்களைக் கையகப்படுத்துவதில் மும்முரமாக இருக்க வேண்டிய இந்தியா, இந்த விஷயத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை என்று நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அண்மையில், லித்தியம் வளம் மிக்க ஆர்ஜெண்டீனா, இந்தியாவுக்கு அந்தப் பொருளை விற்பனை செய்வது குறித்து ஆர்வம் காட்டியது. எனினும், இந்த விவகாரத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை என்கிறார்கள் சந்தை ஆய்வாளர்கள்.
மேலும், எதிர்கால ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலமாக விளங்கப் போகும் லித்தியம் போன்ற பொருள்களுக்கு, அதிகபட்ச 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அது தற்போது 18 சதவீதமாக 
குறைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வருங்காலத்தின் நவீன ஆட்டோமொபைல் சந்தையின் புதிய தொழில்நுட்பங்களில் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளே ஆதிக்கம் செலுத்தும் எனவும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளில் பின்தங்கியிருக்கும் இந்தியா, இந்த விஷயத்திலும் கோட்டை விடலாம் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, தற்போதைய பெட்ரோல் - டீசல் வாகனங்களில் மட்டும் முழு கவனம் செலுத்தாமல், எதிர்காலத்தின் ஆட்டோமொபைல் துறையை இப்போதே மனதில் நிறுத்தி இந்திய நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தியாவின் மாபெரும் சந்தைதான் அதன் மிகப்  பெரிய பலம். மக்களின் வாங்கும் சக்தி வளர்ந்து வருவதும், இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் எதிர்கால இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு மிகப் பெரிய அனுகூலமாக இருக்கும். சர்வதேச நிறுவனங்களும், அதனை மனதிற்கொண்டு காய்களை நகர்த்தும்.
இருந்தும், வருங்காலத்தின் முற்றிலும் மாறுபட்ட ஆட்டோமொபைல் உலகுக்காக தற்போதே தன்னை தயார்ப்படுத்திக் கொள்வதுதான், இந்திய வாகனத் துறை செல்ல வேண்டிய மிகச் சரியான பாதையாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

- நாகா

More from the section

ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் முடிவு ஒத்திவைப்பு
கோதுமை உற்பத்தி சாதனை அளவை எட்டும்
நவீன 5ஜி ரக ஸ்மார்ட்போன்: சாம்சங் முதன் முதலில் அறிமுகம்
பங்குகளை வாங்க நிப்பான் லைஃப் நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் கேப்பிட்டல் அழைப்பு
பங்குச் சந்தையில் தொடர் விறுவிறுப்பு