சனிக்கிழமை 20 ஜூலை 2019

ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை

DIN | Published: 10th July 2019 12:50 AM

இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்பட்ட போதிலும் சென்செக்ஸ் இறுதியில் சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தது. அதேசமயம், நிஃப்டி குறியீட்டெண் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை சந்தித்தது. 
மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் சந்தைக்கு சாதகமாக அமையாத காரணத்தால், கடந்த இரு வர்த்தக தினங்களாக பங்குச் சந்தை சரிவை சந்தித்தது. அதிலும், குறிப்பாக, திங்கள்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 750 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. 
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகம் தொடங்கியபோது பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்துடனேயே காணப்பட்டது.
தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகள் வெளியாகவிருந்ததை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். சர்வதேச சந்தைகளிலும்  வர்த்தகம் ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், பஜாஜ் பைனான்ஸ், சன் பார்மா பங்குகளின் விலை 5.60 சதவீதம் வரை அதிகரித்தன. 
அதேசமயம், முதலீட்டாளர்களின் லாப நோக்கு விற்பனையால்  டிசிஎஸ் பங்கின் விலை 2.05 சதவீதம் குறைந்தது.  மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 10 புள்ளிகள் உயர்ந்து 38,730 புள்ளிகளாக நிலைத்தது. வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 379 புள்ளிவரை சரிந்து அதன்பின்னர் ஏற்றம் கண்டது. அதேசமயம், தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 2 புள்ளிகள் குறைந்து  11,555 புள்ளிகளாக நிலைபெற்றது.
 

More from the section

ரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்
ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி  ரிலையன்ஸ் ஜியோ 2-ஆம் இடம்
அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்கள்:  தமிழகத்துக்கு 4-ஆம் இடம்
கரூர் வைஸ்யா வங்கி மொத்த வணிகம் ரூ.1.10 லட்சம் கோடி
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி