சனிக்கிழமை 20 ஜூலை 2019

சாதகமான சர்வதேச நிலவரங்களால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்பு

DIN | Published: 12th July 2019 01:05 AM


சர்வதேச அளவிலான சாதகமான நிகழ்வுகளால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவெல் வட்டி குறைப்பு நடவடிக்கைக்கு வலுவான ஆதரவு கரத்தை நீட்டுவார் என்ற நிலைப்பாட்டால் சர்வதேச சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் உணரப்பட்டது.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் நிலையில், அது சர்வதேச அளவில் நிதி புழக்கத்தை அதிகரிப்பதுடன், வளரும் நாடுகளில் முதலீடு குவிவதற்கு வழிவகுக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
மும்பை பங்குச் சந்தையில், மோட்டார் வாகனம், உலோகம், தொலைத்தொடர்பு, ரியல் எஸ்டேட் துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்கள் 1.84 சதவீதம் வரை அதிகரித்தன. அதேசமயம், பொறியியல் சாதன மற்றும் நுகர்வோர் சாதன துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்கள் 0.69 சதவீதம் வரை இழப்பைக் கண்டன.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனப் பங்கின் விலை அதிகபட்சமாக 4.46 சதவீதம் உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, இன்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, எஸ்பிஐ பங்குகளின் விலை 3.63 சதவீதம் வரையிலும் அதிகரித்தன. அதேசமயம், முதலீட்டாளர்களின் வரவேற்பு இல்லாத காரணத்தால், டெக் மஹிந்திரா, யெஸ் வங்கி, டிசிஎஸ், எல் அண்டு டி, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் என்டிபிசி பங்குகளின் விலை 1.27 சதவீதம் வரையிலும் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 355 புள்ளிகள் வரையிலும் அதிகரித்திருந்த நிலையில், இறுதியில் 266 புள்ளிகள் அதிகரித்து 38,823 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 84 புள்ளிகள் உயர்ந்து 11,582 புள்ளிகளாக நிலைபெற்றது.
 

More from the section

ரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்
ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி  ரிலையன்ஸ் ஜியோ 2-ஆம் இடம்
அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்கள்:  தமிழகத்துக்கு 4-ஆம் இடம்
கரூர் வைஸ்யா வங்கி மொத்த வணிகம் ரூ.1.10 லட்சம் கோடி
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி