புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

கடற்படைக்கு ரூ.1,200 கோடியில் 3-டி ரேடார்கள் தயாரிப்பு: டாடா பவருக்கு வழங்கியது மத்திய அரசு

DIN | Published: 23rd March 2019 12:46 AM


இந்தியக் கடற்படையில் பயன்படுத்தக் கூடிய அதிநவீன வான் கண்காணிப்பு ரேடார்களை, ரூ.1,200 கோடியில் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை பாதுகாப்புத் துறையிடமிருந்து டாடா பவர் ஸ்ட்ரேடஜிக் என்ஜினியரிங் டிவிஷன் (எஸ்இடி) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
போர்க் கப்பல்களில், வான் கண்காணிப்புக்காகப் பொருத்தப்படும் அதிநவீன 3-டி ரேடார்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை டாடா எஸ்இடி நிறுவனத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
ரூ.1,200 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ் 23 ரேடார்களை எங்கள் நிறுவனம் தயாரிக்கும்.
அடுத்த 10 ஆண்டுகளில் அந்த ரேடார்கள் தயாரிக்கப்பட்டு, கடற்படையிடம் ஒப்படைக்கப்படும்.
வெளிநாட்டு பாதுகாப்புத் தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரித்து, கொள்முதல் செய்வதற்கான 2013-ஆம் ஆண்டின் மத்திய அரசு கொள்கை அடிப்படையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் இண்ட்ரா சிஸ்டெமாஸ் நிறுவனத்தின் கூட்டுடன் டாடா எஸ்இடி நிறுவனம் அந்த ராடார்களை இந்தியாவில் தயாரிக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடற்படைப் பயன்பாட்டுக்கான ஒலியுணர்வு நீரடி கண்காணிப்புக் கருவியைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை பாதுகாப்புத் துறை அமைச்சகம் டாடா எஸ்இடி நிறுவனத்துக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு வழங்கியது நினைவுகூரத்தக்கது.

More from the section

மாருதி சுஸூகியின் புதிய ஆல்டோ கார் அறிமுகம்
3-ஆவது நாளாக பங்குச் சந்தைகளில் சரிவு
அலாகாபாத் வங்கிக்கு மத்திய அரசு ரூ.5,000 கோடி கூடுதல் மூலதனம்
தங்கம் பவுனுக்கு ரூ. 32 குறைவு
டுவிட்டர் இந்தியா புதிய தலைவர் மணீஷ் மகேஸ்வரி