21 ஏப்ரல் 2019

பங்குச் சந்தையில் லேசான சரிவு

DIN | Published: 23rd March 2019 12:50 AM

இந்த வார வர்த்தகத்தின் இறுதிநாளான வெள்ளிக்கிழமை இந்தியப் பங்குச் சந்தையில் லேசான சரிவு ஏற்பட்டது. முன்னதாக, கடந்த 8 நாள்களாக பங்குச் சந்தையில் எழுச்சி இருந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 222.14 புள்ளிகள் சரிந்து 38,089.36 என்ற அளவில் நிலைப் பெற்றது. தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 64.15 புள்ளிகள் சரிந்து 11,456.90 என்ற அளவில் நிலைப்பெற்றது. எனினும், கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது மும்பை பங்குச் சந்தை 140 புள்ளிகளும், தேசியப் பங்குச் சந்தை 30 புள்ளிகளும் உயர்ந்தே காணப்பட்டது.
முன்னதாக கடந்த 8 வர்த்தக நாள்களாக சந்தையில் காளையின் பாய்ச்சல் இருந்தது. இதனால் பங்குகளின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருந்தது. இதனைப் பயன்படுத்தி பலரும் லாபநோ க்கில் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் வெள்ளிக்கிழமை லேசாக சரிவு இருந்தது. இதுதவிர அமெரிக்காவின் பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான பிட்ஜ் ரேட்டிங்ஸ், அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பீட்டை அளித்தது. முன்னதாக, இந்த மதிப்பீடு 7 சதவீதமாக இருந்தது. மதிப்பீடு குறைக்கப்பட்டதும் பங்குச் சந்தையில் எதிரொலித்தது.
மும்பை பங்குச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் அதிகபட்சமாக 2.47 சதவீதம் சரிந்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (2.44 சதவீதம்), மாருதி (1.84 சதவீதம்) எஸ்பிஐ (1.54 சதவீதம்), பஜாஜ் பைனானஸ் (1.23 சதவீதம்) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.
என்டிபிசி நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 3.67 சதவீதம் அதிகரித்தது. எல் அண்ட் டி, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், பவர்கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலையும் சற்று உயர்ந்தன.
பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான நிச்சமற்றதன்மை, அமெரிக்க-சீன வர்த்தகப் பிரச்னை உள்ளிட்ட சர்வதேச காரணிகளும் இந்தியப் பங்குச் சந்தையில் சற்று பாதிப்பை ஏற்படுத்தின. அதே நேரத்தில் ஆசிய நாடுகளில் ஹாங்காங், ஷாங்காய், கொரியா, ஜப்பான் பங்குச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க உயர்வு இருந்தது. ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் சுணக்கம் காணப்பட்டது.
 

More from the section

தங்கம் பவுனுக்கு ரூ.24 உயர்வு
ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு
அந்நியச் செலாவணி கையிருப்பு 41,488 கோடி டாலராக அதிகரிப்பு
ஹெச்டிஎஃப்சி வங்கி நிகர லாபம் ரூ.5,885 கோடியாக உயர்வு
பொதுக் காப்பீட்டு பிரீமியம் வருவாய் 13 சதவீதம் வளர்ச்சி