வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

குறைவான படங்களில் நடிக்கும் நடிகை இவர்!

DIN | Published: 21st January 2019 06:14 PM

குறைவான படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்களின் வெகுவான கவனத்தை ஈர்த்திருப்பவர் பிரியா பவானி சங்கர். அடிப்படையில் சாஃப்ட்வேர் என்ஜினீயரான இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், மெகா சீரியல் ஹீரோயின் என்று பலமான அனுபவத்தோடுதான் 'மேயாத மான்' படம் மூலமாக சினிமாவுக்கு வந்தார். 'கடைக்குட்டி சிங்கம்' உள்ளிட்ட படங்களில் ஆச்சரியப்படுத்தினார்.  '8 தோட்டாக்கள்' இயக்குநர் ஸ்ரீகணேஷின் அடுத்தப் படமான அதர்வா நடிக்கும் 'குருதி ஆட்டம்', 'ஒருநாள் கூத்து' இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 'மான்ஸ்டர்', 'மாப்ள சிங்கம்' இயக்குநர் ராஜசேகரின் இயக்கத்தில் ஜீவா - அருள்நிதி இணைந்து நடிக்கும் படம் என அடுத்தக் கட்டப் பரபரப்பில் இருக்கிறார். 'டி.வி.யில் எவ்வளவு பரபரப்பாக இருந்தேனோ, அதை விட  இப்போது பரபரப்பாக இருக்கிறேன். "மான்ஸ்டர்' படப்பிடிப்பு முடிந்து விட்டது.  நகர்புறத்தில் வாழுகிற பெண்ணாக நடிக்கிறேன்'' என்றார்.   

ரஜினியுடன் "கோச்சடையான்' படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். சமீபத்தில் இவருக்கும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் திருமணம் நடந்தது. சில தினங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து தீபிகா படுகோன் ரசிகர் ஒருவர் சுட்டுரைப் பக்கத்தில் ருசிகரமான தகவல் பகிர்ந்திருந்தார். ஒரு தோசையும் அதன் அருகில் மெனு கார்டும் இருந்தது. பின்னர்தான் அதன் விவரம் தெரியவந்தது.  அமெரிக்காவில் ஆஸ்டின், டெக்ஸாஸ் நகரில் உள்ள ஹோட்டல்களில் தோசை ஒன்றிற்கு "தீபிகா படுகோன் தோசை' என பெயரிடப்பட்டிருக்கிறது. தோசையின் மேல்புறத்தில் மிளகாய் மற்றும் உருளை கிழங்கு மசாலாவுடன் இந்த தோசை சுவை மிகுந்ததாக இருக்கிறதாம். ரசிகரின் சுட்டுரையைப் பார்த்த  தீபிகா மகிழ்ச்சியில் பொங்கினார். பிறகு அவருக்கு அளித்த பதிலில், "புத்தாண்டு என்னவொரு பிரமாதமாக தொடங்கியிருக்கிறது' என தெரிவித்துள்ளார். 
  
"என்னை நோக்கி பாயும் தோட்டா',  "அசுரன்' ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ், முதல்முறையாக நடித்துள்ள ஹாலிவுட் படம்,  "தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்'.  கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம், ஐக் வார்ட்ரோபின் "ஷதி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலைத் தழுவி உருவாகியுள்ளது. முழுநீள நகைச்சுவை படமாக உருவாக்கப்பட்டுள்ளது. தனுஷ், பெர்னைஸ் பெஜோ நடித்துள்ளனர். மே 30-ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் படம் வெளியாகிறது.  சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்டது. இதற்காக பிரான்ஸ் சென்றிருந்த தனுஷ், இந்தப் படம் தமிழில் டப் செய்யப்படுவதாக தெரிவித்தார். அத்துடன்  இந்தப் படத்துக்கு, "வாழ்க்கையை தேடி நானும் போனேன்'  என்று பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். தனுஷ் நடிப்பில் வெளியான "வேலையில்லா பட்டதாரி' படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளையே அவர் தலைப்பாக வைத்துள்ளார். இந்தப் படம் மே மாத இறுதியில் தமிழில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கான தமிழ் டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.   

தீபிகா படுகோனேவை காதலித்தார் ரன்பீர் கபூர். கருத்து மோதல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.  பின்னர் கேத்ரினா கைபுடன் ரன்பீர் நெருங்கி பழகினார். திடீரென அவரையும் பிரிந்தார். இப்போது நடிகை அலியா பட்டை காதலித்து வருகிறார். ரன்பீரை பிரிந்தது பற்றி கேத்ரினா  எதுவும் கூறாமல் இருந்து வந்தார். இப்போதுதான் அது பற்றி அவர் பேசியுள்ளார், ""அவரை பிரிந்த பிறகு இத்தனை நாட்களாக நான் என்னையே புரிந்து கொள்ளாமல் வாழ்ந்தது தெரிய வந்துள்ளது. அந்த காதல் முறிவுக்கு பிறகு என் வாழ்வில் தெளிவு ஏற்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக என்னை புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து வந்திருக்கிறேன். தற்போது என் வாழ்வில் நான் மட்டும் தான். அதனால் என் கவனம் எல்லாம் என் மீது மட்டும் தான். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. என்னிடம் பாசம் காட்டினால் நானும் பாசமாக இருப்பேன். இல்லை என்றால் கண்டுகொள்ள மாட்டேன்'' என்று கேத்ரினா பேசியுள்ளார். 

Tags : kollywood cinema சினிமா பிரியா பவானி சங்கர்

More from the section

செழியனின் ‘டு லெட்’ - திரை விமரிசனம்
நடிகையின் கட்செவி கணக்கில் தகவல் திருட்டு: சைபர் குற்றப்பிரிவு விசாரணை
ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜாத்யா மறைவு
நடிக்க வந்த 10 ஆண்டுகளில் நிறைய கற்றுக் கொண்டேன்! நடிகை பிரியா ஆனந்த் பேட்டி! (விடியோ)
மீ டூ புகார்: மெளனம் கலைத்தார் பாடகர் கார்த்திக்!