செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் விக்ரம்

By எழில்| DIN | Published: 08th July 2019 02:40 PM

 

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை அடுத்ததாகப் படமாக்கவுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

செக்கச் சிவந்த வானம் படத்துக்கு அடுத்ததாக மணி ரத்னம் இயக்கவுள்ள இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்து தயாரிக்கவுள்ளன.

வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் பெரிய பழுவேட்டரையராக தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் போன்றோர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணி ரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் உறுதி செய்தார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: மணி ரத்னம் இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் செய்தி வெளியே வந்துவிட்டது. ஆமாம். மணி ரத்னம் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கிறேன். நான் அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. என்னுடைய குருவுடன் இணைந்து மீண்டும் பணியாற்ற நான் எப்போதும் மிகுந்த ஆவலுடன் இருப்பேன். ஆமாம்.. இது நடந்துகொண்டிருக்கிறது, மீண்டும் என் பள்ளிக்குத் திரும்புகிறேன் என்றார். ஐஸ்வர்யா ராய் அறிமுகமான இருவர் படத்தை மணி ரத்னம் இயக்கினார். அதன்பிறகு குரு, ராவணன் ஆகிய மணி ரத்னத்தின் படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதை விக்ரமும் உறுதி செய்துள்ளார். மணி ரத்னம் இயக்கும் அடுத்தப் படத்தில் நான் நடிக்கிறேன். அடுத்த வருட ஆரம்பத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.

Tags : Chiyaan Vikram Mani Ratnam Ponniyin Selvan

More from the section

அபிராமி & முகன்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய காதல் ஜோடியா?
ஆகஸ்ட் 8-ல் வெளியாகவுள்ள அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை!
'தலைவன் இருக்கிறான்' 19 ஆண்டுகளுக்குப் பின் இணையும் கமல், ஏ.ஆர்.ரஹ்மான்!
திரை கொண்டாட்டம்: புது அனுபவம் - அமலாபால்
விவசாயமே தேசத்தின் ஆதாரம்.!