திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

மேற்கு தொடர்ச்சி மலை - விமர்சனம்

Published: 26th August 2018 01:22 AM

விஜய் சேதுபதிக்கும் லெனின் பாரதிக்கும் குறிஞ்சி மலர் பூங்கொத்து!
இந்திய விவசாயிகளின் பாதுகாப்பு குறித்த அக்கறையுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது "மேற்கு தொடர்ச்சி மலை'. முகமற்ற, முகவரியற்ற மிக எளிய சாமானிய மனிதர்களின் வாழ்வை, சமரசம் இல்லாமல் தந்ததற்காக இயக்குநர் லெனின் பாரதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
 மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் இருந்து கேரளத்து எல்லை வரை தினமும் பொருட்களை சுமந்து சென்று கிராமங்களில் உள்ள மக்களிடம் ஒப்படைத்து விட்டு, அங்கிருந்து ஏலக்காய் மூட்டைகளை கீழே சுமந்து வந்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் ஆண்டனியின் வாழ்க்கையுடன் பயணிக்கிறது கதை.
 ஆண்டனிக்கு, சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. சிறுகச் சிறுக பணம் சேர்க்கிறார்; மனைவி, மகன் என வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தாலும், நிலம் வாங்குவது கனவாகவே இருக்கிறது. அடிவாரத்தில் ஒரு நிலம் ஆண்டனியின் கைக்கு வந்துசேர வேண்டிய சூழல். அந்த நிலத்தை வாங்கி தனது சொந்த விவசாய நிலக் கனவை அவர் நிறைவேற்றினாரா இல்லையா என்பதுதான் மேற்கு தொடர்ச்சிமலையின் கண்ணீர் வரலாறு.
 ஏலக்காய் தோட்டத்தின் பச்சை இலைகளுக்குப் பின்னால், உறைந்திருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வை, அன்பை, கருணையை, காதலை, அவஸ்தையை, பிரிவை, நினைவை இவ்வளவு எளிமையாகப் பதிவு செய்ததற்காக லெனின் பாரதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
 கடைசி வரை வெள்ளந்தியும் இயலாமையுமாகத் திரியும் நாயகன், காதலில் உயிர் சுமக்கும் ஒருத்தி, ஏலக்காய் தோட்டம், அட்டையோடு சேர்ந்து ரத்தத்தையும் உறிஞ்சும் முதலாளி, தொழிலாளர்களின் நலன் காக்கப் போராடும் கம்யூனிஸ்ட் தோழர், தொழிலாளர்களை நேசிக்கும் கங்காணி, வனங்களில் வாழ்க்கையைத் தொலைத்து தேடும் கிறுக்கு கிழவி, வீராப்பு பேசும் வனகாளி, டீக்கடை கிழவி, ஒத்தக் கடை கிழவன், இஸ்லாமியர், உரக்கடைக்காரர் என முழுப் படமுமே எதார்த்தத்தின் உச்சம். இது வழக்கமான சினிமா அல்ல என்பதை கதாபாத்திரங்களின் வார்ப்பு மூலம் நுட்பமாகப் பேசியிருக்கிறார் இயக்குநர். நுண்ணிய அரசியலை இலைமறை காயாகப் பேசிய விதத்தில் இது புது ரகம்.
 ஏலக்காய் தோட்டங்களில் வறுமையில் உழலும் அந்த மக்களின் வாழ்க்கைக்குள் ஒளிந்திருக்கும் கொண்டாட்டங்களும் நகைச்சுவையும் காதலுமாக விரியும் படம், பிற்பாதியில் தடதடக்கத் தொடங்குகிறது. ஒற்றையடிப் பாதைகளில் அதிகாலையில் பயணிக்க தொடங்கும் கதை, வனாந்திரத்தில் சோகம் கவ்வி முடியும் இறுதிக் காட்சி வரை நாம் பார்ப்பது இதுவரை பார்த்திராத, கேள்விப்பட்டிராத இன்னொரு உலகம்.
 அதிகாரமும், உலகமயமாக்கலின் போதையும் நிரம்பிய மனித மனங்களுக்கிடையே மனசாட்சியுடன் செயல்பட முயற்சிக்கும் ஒரு மனிதனின் ஊசலாட்டத்தை, கையறுநிலையை, குற்றஉணர்ச்சி நிறைந்த மனசாட்சியை முன் வைத்ததில் "மேற்கு தொடர்ச்சி மலை' தமிழ் சினிமாவில் புதியதொரு பரிமாணத்துக்கு வழியிட்டிருக்கிறது.
 ஒரு கண்ணில் அப்பாவித்தனமும் இன்னொரு கண்ணில் பரிதாபமும் மிதக்க வெகுளி இளைஞனாக அபாரமாக உழைத்திருக்கிறார் ஆண்டனி. "அதோ தெரியுது பாரு.... நம்ம காடு' என மகனை மடியில் வைத்து பேசும் அந்த காட்சி... அற்புதம் ஆண்டனி.
 படத்தின் மிகப் பெரிய பலம் இசையும், ஒளிப்பதிவும்.
 ஒரு பாத்திரத்தின் வார்த்தைகளாகவே இசையை ஏற்றி விட்டிருக்கிறார் இளையராஜா. காலமும் இயல்பும் அப்படியே பதிவாகியிருக்கின்றன. "அந்தரத்தில் தொங்குதம்மா...' பாடலில் அத்தனை கனம். கண்ணீர் பொங்க வைக்கின்றன. மனம் கரைந்து ஆன்மா உருகுகிறது.
 கேட்காத வாத்தியம் கேட்குது... பாடல், இளையராஜாவின் குரலில் இன்னொரு ரகம். பாடலும், இசையும் மலை அடிவார சாரலாக வீசுகிறது.
 வனங்களின் இண்டு இடுக்குகளில் புகுந்து புறப்படும் ஆரம்பக் காட்சி முதல், அதிர்ச்சிகள் உறைந்திருக்கும் ஏலக்காய் தோட்டத்தின் விஸ்தாரப் பரப்பைச் சுற்றிச் சுழலும் இறுதிக் காட்சி வரை தேனி ஈஸ்வரின் கேமரா, படத்தின் ஆகப் பெரும் பலம்.
 ஜெயச்சந்திரனின் கலை, காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு படத்தில் உயர் தரம். நொடிக்கு நொடி பரிதவிப்புடன் கடத்துகிறது படத்தொகுப்பு. எஸ்.ஆர்.ராஜ்மோகன் ஆடை வடிவமைப்பில் அவ்வளவு நேர்த்திய கமர்ஷியல் சினிமாவுக்கான சங்கதிகள் இல்லாதபோதும் டாக்குமென்ட்டரி தொனியை தவிர்ப்பதில், படக்குழுவினரின் உழைப்பு அசரவைத்திருக்கிறது. திரைக்கதையில் அவ்வப்போது ஏற்படும் வேகக் குறைவு தவிக்க முடியாதது என்பது புரிகிறது.
 எளியவர்களின் வலியை வலிமையாகப் பேசிய இந்தப் படம் தமிழ் சினிமாவின் பெருமை மிகு படைப்பு. தயாரிக்க முன் வந்த விஜய் சேதுபதிக்கு ஒரு குறிஞ்சி மலர் பூங்கொத்து.
 - ஜி. அசோக்

More from the section

இப்படியொரு ரஜினியப்பாத்து எத்தன நாளாச்சு...!
அஜித் போல இல்லாமல் பத்து வருடங்களுக்குப் பிறகும் அதே தோற்றத்துடன் இருக்கும் நயன்தாரா: ‘விஸ்வாசம்’ விமரிசனம்
அஜித்தின் ‘விஸ்வாசம்’ - திரை விமரிசனம்
ரஜினியின் ‘பேட்ட’ - திரை விமரிசனம்
கணவர்களை கேள்வி கேட்கும் 'தி மாஸ்குலினிட்டி' குறும்படம்