திங்கள்கிழமை 25 மார்ச் 2019

உலக சுற்றுலா தினப்போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த பறவைச் சுற்றுலா அனுபவக் கட்டுரை!

By கார்த்திகா வாசுதேவன்| DIN | Published: 11th October 2018 03:12 PM

 

இன்றைய இயந்திரமான வாழ்க்கை சூழ்நிலையில் இருந்து  விடுபட நம் அனைவரும் சில நாட்களாவது ஓய்வு மற்றும் மனநிம்மதிக்காக சுற்றுலா செல்வது அவசியம். சுற்றுலா என்பது பெரும் பணக்கார்ர்களுக்கு மட்டும் என்ற நிலை மாறி தற்போது அனைத்து வகுப்பினருக்கும் அவர்களுக்கு ஏற்ற பொருளாதார வகையில் சுற்றுலா சாத்தியம் ஆகிவிட்டது. சுற்றுலாவின் மூலம் பல நாடு, பல ஊர் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம், தட்பவெப்பம் மற்றும் தொழில் பற்றி நேரில் பார்த்து ரசித்து எளிதில் தெரிந்து கொள்ள முடியும். சைக்கிள்,கார்,பைக்,பஸ், ரயில்,விமானம் மற்றும் கப்பல் இப்படி ஒவ்வொரு விதமான சுற்றுலாவும் தனி தனி அனுபவத்தை நமக்கு கொடுக்கும்.

சுற்றுலாக்களில் எனக்கு மிகவும் பிடித்தது பறவை சுற்றுலா. இது அநேகம் மக்களுக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம். ஒவ்வொரு பறவை சுற்றுலாவிலும் நான் அதுவரை பார்க்காத பறவைகளை கண்டு ரசித்து , புகைப்படம் எடுத்து, பறவை பற்றிய புத்தகத்தில் என்ன இனம், என்ன பெயர் என்று தெரிந்து கொண்டு அந்த புகைப்படங்களை பறவைகளை பற்றி தெரிந்த நண்பர்களிடம் அனுப்பி நாம் எப்படி, எங்கு எடுத்தோம் என்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் உள்ள சுகம் அலாதியானது. அப்போது அந்த பறவைகளை அதுவரை பார்த்திராத நண்பர்கள் உடனே அதே இடத்திற்கு சென்று அதே பறவை இனத்தை தேடி கண்டுபிடித்து புகைப்படம் எடுத்து நம்மிடம் பகிர்ந்து கொண்டு அவரின் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளும் போது தனி சுகம்.

இந்த வருடம் மட்டும் 10 முறை பறவை சுற்றுலா சென்று இருக்கிறேன்.

ஆழ்வார்குறிச்சி டார்ட்டர் பறவை...

புலிகேட் ஏரி, ரெங்கன்னதிட்டு சரணாலயம், அம்பாசமுத்திரம், வெள்ளோடு சரணாலயம், வாகைகுளம் சரணாலயம், சிறுமலை, வண்டலூர் ஓட்டேரி ஏரி சரணாலயம், கோத்தகிரி, தெட்டகாடு சரணாலயம், லங்காவி தீவு மலேசியா ஆகிய இடங்களுக்கு சென்று சுமார் 60 பறவைகளை இனம் கண்டு, புகைப்படம் எடுந்து ரசித்து வந்தேன்.

கேரளா, தெட்டகாடு ரெட் புல் புல் பறவை...

18.05.18 அன்று கேரளாவில் உள்ள தெட்டகாடு சலீம் அலி பறவைகள் சரணாலயம் சென்றது தான் என் வாழ்நாளில் மறக்கமுடியாத கடினமான  பறவை சுற்றலா அதுதான். சுமார் 7மணி நேரம் பயணம் செய்து மழையின் காரணமாக15 நிமிடம் மட்டுமே குறைந்த ஒளியில் புகைப்படம் எடுக்க முடிந்தது,ஆனால் அதுவும் ஒரு புதுவிதமான அனுபவம்.

புலிகேட் ஏரியின் பிளமிங்கோ பறவைகள்...

நான் இதுவரை சென்ற சுற்றலாகளில் புலிகேட் ஏரி சென்ற அனுபவம் வித்தியாசமானது. கிரேட்டர் பிளமிங்கோ என்ற பறவை இனம் இந்தியாவிற்கு மிகச் சில இடங்களுக்கு மட்டும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை  பருவநிலையை பொருத்து விஜயம் செய்யும் பறவை. புலிகேட் ஏரியின் பூகோள அமைப்பு கிரேட்டர் பிளமிங்கோ பறவைக்கு இரை தேடுவதற்க்கு மிகவும் ஏற்றது. 1.1.18 புது வருடத்து அன்று காலை சென்ற போது சுமார் 3000 கிரேட்டர் பிளமிங்கோ பறவைகள் 2 குழுக்களாக இரை தேடி கொண்டு இருந்தது கண் கொள்ளாகாட்சி. அதை தவிர சுமார் 15 வகையான பறவைகள் இனங்களையும் கண்டுகளிக்க முடிந்தது. அந்த புகைபடங்களை முகநூலில் வெளியிட்ட போது 2 நண்பர்கள் நாங்களும் வருகிறோம் ஒருநாள் புலிகேட் ஏரி சென்று கிரேட்ட்ர் பிளமிங்கோ பறவைகளை கண்டு ரசித்து வருவோம் என்றார்கள். 10.1.18 அன்று மிகவும் திட்டமிட்டு, 1.1.18 அன்று சென்ற அதே காலை நேரம் சென்று அடைந்தோம். என்ன ஒரு ஆச்சரியம் 10 நாட்களில் பருவநிலையின் பெரும் மாற்றத்தினால் ஏரியில் நீர் மட்டம் மிகவும் குறைந்து பறவைகளே இல்லை என்ற நிலை. உடன் வந்த நண்பர்களுக்கு கிரேட்டர் பிளமிங்கோ பறவையை காண முடியாத ஏமாற்றம்.

இது நம்ம வண்டலூர் டார்ட்டராக்கும்...

பறவை சுற்றுலா மூலம் நான் கற்றது நிதானம் மற்றும் பொறுமை. எனது அச்சு தொழிலில் இது இரண்டையும் கடைப்பிடிப்பது கண்டிப்பாக இயலாத ஒன்று. ஒரு பறவையை புகைப்படம் எடுக்க பறவை வரும் வரை பொறைமையாக சேறு, கற்கள், முட்கள் நிறைந்த இடத்தில் மறைந்திருந்து பறவை வந்த பின்பு பதட்டம் அடையாமல் சப்தம் எழுப்பாமல் பறவை நம் பக்கம் திரும்பி நமக்கு பிடித்த பாவனையில் நிற்கும் வரை பொறுமை காத்து கிளிக் செய்ய வேண்டும்.

இது சிவகாசி ஆந்தையாக்கும்...

நாம் எவ்வளவு தான் திட்டமிட்டு, பருவநிலயை கணித்து சென்றாலும் பறவைகளை பார்ப்பது நமது யோகத்தை பொருத்ததே. அந்த யோகம் நமக்கு இருந்தால் அன்று நம்மை விட அதிஷ்டசாலி யாரும் இல்லை. ஏனெனில் நாம் செல்லும் சிலநிமிட நேரங்களுக்கு முன்னால் பலத்த சப்தம் எழுப்பி ஒரு வாகனம் சென்றிருந்தால் கூட 2 நாட்களுக்கு அந்த இடத்திற்கு பறவைகள் வராது. திட்டமிடாமல் சென்று அங்கே அரிய பறவை இனங்களை காண முடிந்தால் அதில் உள்ள கிளர்ச்சி மற்றும் இன்பத்திற்கு ஈடு எதுவும் இல்லை.

தேன்மலைக்காட்டு மீன்கொத்திப் பறவை...

பறவை சுற்றுலா மூலமே இந்த அழகிய உலகத்தில் இதுவரை 168 பறவைகளை இனம் கண்டு பார்த்து ரசித்து இருக்கின்றேன். அதன் புகைப்படங்களை முகநூலில்  வெளியட்டதன் மூலம் உலகம் ழுமுவதும் 1000க்கும் மேற்பட்ட நண்பர்களை பெற்றுள்ளேன். இவ்வளவு நண்பர்களை நான் பெற காரணம் பறவை சுற்றுலா தான்.

கட்டுரையாளர்: ரவி அருணாச்சலம், பறவைச் சுற்றுலா ஆர்வலர்.

  1.  
Tags : தினமணி வாசகர் போட்டிகள் dinamani readers contest உலக சுற்றுலா தினப்போட்டி bird tour பறவைச் சுற்றுலா RAVI ARUNACHALAM INTERNATIONAL TOURISM DAY CONTEST ரவி அருணாச்சலம்

More from the section

குடியரசு தினவிழா ஏன் கொண்டாடுகிறோம்? வாசகர்களே ஜனவரி மாத காணொளி போட்டிக்கு நீங்க ரெடியா!
தினமணி.காம் உலக சுற்றுலா தினப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு!
திலகா சுந்தரின் மெக்ஸிகோ டூர்... பீதியில் உறைய வைக்கும் ‘கோபா’ மாயன் கோவில் அனுபவங்கள்!
உலக சுற்றுலா தினப்போட்டியில் 5 ஆம் பரிசு பெற்ற வாசகி மீனாள் தேவராஜனின் சுற்றுலா அனுபவங்கள்!
உலக சுற்றுலாப் போட்டியில் 4 ஆம் பரிசு பெற்ற லண்டன் சுற்றுலா அனுபவக் கட்டுரை!