புதன்கிழமை 16 ஜனவரி 2019

தேர்தல் முறையில் மாற்றம் தேவை

By வெ.ந. கிரிதரன்| DIN | Published: 07th September 2018 01:16 AM

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதால், வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டுமென காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தேர்தல் வாக்குப்பதிவு முறையில் மாற்றம் கொண்டுவருவது ஒருபுறம் இருந்தாலும், தற்போது நம் நாட்டில் நடைமுறையில் உள்ள தேர்தல் முறைக்கு மாற்றாக விகிதாசார பிரதிநிதித்துவ முறையைக் கொண்டு வரவேண்டும் என்ற குரலும் மற்றொருபுறம் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது. 
ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தலில் குறிப்பிட்ட இரு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களில் ஒருவர் 1.5 லட்சம் வாக்குகளையும், இன்னொருவர் 1.25 லட்சம் வாக்குகளையும் பெறுவதாக கருத்தில் கொள்வோம். இருவரில், 1.5 லட்சம் வாக்குகளை பெற்ற வேட்பாளர் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராகிறார்.
அவருக்கு அடுத்ததாக, இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் வேட்பாளர் பெற்ற 1.25 லட்சம் வாக்குகளும், மூன்றாம், நான்காம் இடத்தை பிடித்த வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளும் சுத்தமாக கணக்கில் எடுத்து கொள்ளப்படாமல் அவற்றின் மதிப்பு பூஜ்யமாகி விடுகின்றன.
மேலும், தற்போதுள்ள தேர்தல் முறையில், அதிக வாக்கு சதவீதத்தைப் பெறும் கட்சி, குறைவான தொகுதிகளில் வெற்றி பெறுவதும், குறைவான வாக்கு சதவீதத்தைப் பெறும் கட்சி, அதிக தொகுதிகளில் வென்று ஆட்சி அமைப்பதுமாகிய நகைமுரணும் உள்ளது. இதற்கு அண்மையில் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலை உதாரணமாக சொல்லலாம்.
இத்தேர்தலில் 38.14 சதவீதம் வாக்குகளை பெற்ற காங்கிரஸ் கட்சி 80 இடங்களையும், காங்கிரஸைவிட கிட்டத்தட்ட 2 சதவீத வாக்குகள் குறைவாக, அதாவது 36.34 சதவீத வாக்குகளை பெற்ற பா.ஜ.க. 104 இடங்களையும் கைப்பற்றின. இந்த முரண்பாடு ஏற்புடையதா? 
தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையில் பதிவாகும் வாக்குகளில் கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதம் வரையிலான வாக்குகள் பயனற்றுப் போய் விடுகின்றன. அதாவது, தேர்தலில் ஒரு கட்சி தனித்தோ, பிற கட்சிகளுடன் கூட்டணியாகவோ சராசரியாக 30 முதல் 40 சதவீதம் வரை வாக்குகளைப் பெற்றாலே ஆட்சி அமைக்கும் நிலை உள்ளது.
இதன் மூலம், மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்களால் விரும்பப்படாத மக்கள் பிரதிநிதிகள்தான் ஆட்சி அமைத்து ஒட்டுமொத்த மக்களுக்குமான சட்டங்களை இயற்றி வருகின்றனர். இதுஎப்படி சரியாக இருக்கும்?
கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்களின் மொத்த வாக்கு சதவீதம் 22. 7 தான். இதேபோன்று 2014 மக்களவைத் தேர்தலில் 282 பா.ஜ.க. எம்.பி.க்கள் மொத்தமாக 25 சதவீதம் வாக்குகளைதான் பெற்றனர்.
மேலும், 2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்அ.தி.மு.க.வின் 134 எம்.எல்.ஏ.க்கள் பெற்ற மொத்த வாக்குகள் 1.1 கோடி. அதாவது மொத்தம் பதிவான வாக்குகளில் 25.6 சதவீதம் வாக்குகளைதான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பெற்றுள்ளனர்.
தேர்தலில் தற்போதுள்ள இதுபோன்ற நகைமுரண்களைக் களைய விகிதாசார பிரதிநிதித்துவ முறையே சிறந்தது என்கின்றனர் அதனை ஆதரிப்போர். இம்முறையில், தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில், தங்களது நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்களை அக்கட்சிகளே தேர்ந்தெடுத்து அனுப்பும் ஒரு முறை உள்ளது.
உதாரணத்துக்கு ஒரு மாநிலத்தில் 100 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருப்பதாக வைத்து கொள்வோம். அவற்றுக்கான தேர்தலில் நான்கு கட்சிகள் முறையே 40, 30, 20, 10 சதவீதம் என வாக்குகளை பெறுவதாக வைத்து கொள்வோம்.
அதன்படி குறிப்பிட்ட அந்த 4 கட்சிகளில் இருந்தும் முறையே 40, 30, 20, 10 என 100 உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்கப்படுவர். இதன் மூலம் தேர்தலில் போட்டியிடும் எல்லா கட்சிகளுக்கும் அவை பெறும் வாக்கு சதவீதத்தை பொருத்து சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
ஆனால், இந்த முறையில் வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை என்ற குறையும் இருக்கத்தான் செய்கிறது. இக்குறையைப் போக்கும் வகையில், திறந்த கட்சிப் பட்டியல் தேர்தல் முறை அமைந்துள்ளது. இதில், ஒரு தொகுதியில் ஒரு கட்சி சார்பில் ஒரு வேட்பாளர் போட்டியிடும் தற்போதைய முறைக்கு மாறாக, ஒரு கட்சியே ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களை களமிறக்க வேண்டும்.
வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட கட்சியை பிடித்துள்ளது. ஆனால், அக்கட்சி நிறுத்தும் வேட்பாளரைப் பிடிக்கவில்லை என்றால், அதே கட்சியின் மற்றொரு வேட்பாளருக்கு வாக்களிக்கும் வாய்ப்பு வாக்காளர்களுக்கு கிடைக்கிறது. இதனால், வீணாகும் வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும். இவ்விரு முறைகள் மட்டுமின்றி, கலப்பு வாக்கு முறை' எனும் மூன்றாவது முறையும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் உள்ளது. இதில் மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் மொத்தமுள்ள தொகுதிகளில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களில் அதிக வாக்குகளை பெற்று முதலிடம் பெறும் வேட்பாளர்கள் வெற்றியாளர்களாக கணக்கில் கொள்ளப்படுகின்றனர்.
மீதமுள்ள தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அவற்றுக்கு குறிப்பிட்ட தொகுதிகளும் பிரித்து வழங்கப்படுகின்றன. இதன் மூலம் வாக்கு சதவீதம் அதிகம் பெற்றும், குறைந்த இடங்களிலேயே வெற்றி பெறும் அவல நிலை மாறும்.
 

More from the section

தமிழர் திருநாளும் திருவள்ளுவர் தினமும்...
தேவை மனநல ஆலோசனை மையங்கள்!
தேவையா இந்தக் கொண்டாட்டங்கள்?
புத்தக உலகம் புத்துயிர் பெறுமா?
தேவை கட்டாய பயிர்க் காப்பீட்டுத் திட்டம்!