20 ஜனவரி 2019

பாரத சிங்கத்தின் கர்ஜனை

By வ.மு. முரளி| DIN | Published: 11th September 2018 01:30 AM


உலகை மாற்றி அமைத்த உரைகள்' என்ற பட்டியலில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரைகளுக்கு சிறப்பானதோர் இடம் உண்டு. 1893, செப்டம்பர் 11-இல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் கூடிய சர்வ சமயப் பேரவையில் அவர் நிகழ்த்திய உரை, உலக சமய வரலாற்றில் முக்கியமான ஒன்றாக இடம்பெற்றுவிட்டது. சமயங்களின் அடிநாதம் மக்களை மேம்படுத்துவதே என்பதுதான் அவரது பிரகடனம்.
உலகிலுள்ள சமயங்கள் அனைத்திலும் இணக்கம் காணும் முயற்சியாக சிகாகோவில் அந்தப் பேரவை கூடியிருந்தது. பல்வேறு சமயங்களின் பிரதிநிதிகள் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்து அதில் கலந்துகொண்டனர். அவர்களில் பலரும் தத்தமது சமயத்தின் சிறப்பை முன்வைப்பதையே கடமையாகக் கொண்டு உரையாற்றிய நிலையில், பாரதத்தின் இளஞ்சூரியனாக அங்கு சென்றிருந்த சுவாமி விவேகானந்தர், சமயம் கடந்த பேருண்மையை நிலைநாட்டினார். 
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே.. ' என்ற வார்த்தைகளுடன் அவர் தனது உரையைத் தொடங்கியபோது, அவரது பேரன்பு கலந்த சொற்களின் தாக்கத்தால் அவையே சில நிமிடங்கள் ஆர்ப்பரித்தது. இந்த வார்த்தைகளை அதற்கு முன் சிலர் கூறியிருந்தபோதும், விவேகானந்தர் கூறியபோதுதான் அதன் உண்மைப் பொருளை அந்த அவை உணர்ந்து கொண்டது.
பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகுக்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்...' என்று அவர் தொடர்ந்தபோது, மாந்தர் அனைவரையும் சகோதரர்களாக அரவணைக்கும் பாரத ஞானத்தை உலகம் அறிந்தது.
யார் என்னை எந்த வழியில் அடைய முயன்றாலும் அவர்களை நான் அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை அனைத்தும் இறுதியில் என்னையே அடைகின்றன' என்ற பகவத் கீதை சுலோகத்தைச் சொல்லி அவர் அமர்ந்தபோது, பேரவையில் கரவொலி அடங்க வெகுநேரமாயிற்று.
மறுநாள் அமெரிக்க செய்தித்தாள்களில் சுவாமி விவேகானந்தர் கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். கீழ்த்திசை ஞானிகளில் தலைசிறந்தவர் அவர் என்று போற்றப்பட்டார். அடுத்து வந்த நாள்களில் சர்வ சமயப் பேரவையில் அலுப்புத் தட்டிய போதெல்லாம், அவைக்குப் புத்துயிரூட்ட உரையாற்றுமாறு சுவாமி விவேகானந்தர் அழைக்கப்பட்டார்.
அந்தப் பேரவையில் பங்கேற்பதற்கு முன் அவர் அடைந்த இடர்கள் பல. அவை அனைத்தையும் குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் மீதான பக்தியால் கடந்தார் சுவாமி விவேகானந்தர். அப்போது அவருக்கு வயது 30 மட்டுமே. காவியுடை தவிர வேறெதுவும் சொத்தாக இல்லாத அந்த சந்நியாசியை அமெரிக்கா துவக்கத்தில் ஆதுரத்துடன் வரவேற்கவில்லை. ஆயினும், தனது தன்னம்பிக்கையாலும், வைராக்கியத்தாலும், கடுமையான பிரம்மச்சரிய விரதத்தாலும், அனைத்துத் தடைகளையும் அவர் கடந்தார். தனது தவ வாழ்வால் அடைந்த தேஜஸ் அவரது வழிகளைத் தெளிவாக்கியது. முன்பின் தெரியாத அவரை சர்வ சமயப் பேரவையில் பேச வைக்க அமெரிக்க அறிஞர்களே பரிந்துரைத்ததை வேறெவ்வாறு நாம் புரிந்துகொள்வது?
அமெரிக்கா செல்வதற்கு முன் பாரதம் முழுவதும் அவர் நிகழ்த்திய யாத்திரை, அவரை புடம் போட்டிருந்தது. குமரிமுனையில் மூன்று நாள்கள் செய்த தவத்தின் பயனாக அவருக்கு உலகை உய்விக்கும் ஞானம் கிட்டிற்று. அமெரிக்காவில் நிகழும் சர்வ சமயப் பேரவையில் இந்து சமயப் பிரதிநிதியாக சுவாமி விவேகானந்தர் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆணையிடும் பாக்கியம் தமிழக இளைஞர்களுக்குக் கிடைத்தது. அதன் விளைவே, அந்த வங்க இளைஞர் நாடு திரும்பியவுடன் ராமேஸ்வரக் கடற்கரை மண்ணில் புரண்டு நெக்குருகி நெகிழ்ந்த நிகழ்வு.
1893 செப்டம்பர் 11 முதல் 27 வரை நடைபெற்ற சிகாகோ சர்வ சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரைகளில் வரவேற்புக்கு மறுமொழி', நாம் ஏன் ஒத்துப் போவதில்லை?', இந்து மதம்', மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று', புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு', நிறைவு நாள் உரை' என ஆறு தலைப்புகளில் பேசியவை நமக்குக் கிடைத்துள்ளன.அந்த உரைகள் தொகுக்கப்பட்டு சிகாகோ சொற்பொழிவுகள்' என்ற தலைப்பில் சிறு நூலாக ராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அளவில் சிறிதெனினும் அதன் கீர்த்தி மிகப் பெரிது. உதவி செய், சண்டை போடாதே; ஒன்றுபடுத்து, அழிக்காதே; சமரசமும் சாந்தமும் வேண்டும், வேறுபாடு வேண்டாம்' என்று தனது நிறைவுரையில் அவர் குறிப்பிட்டது, உலக சர்வ சமயப் பேரவையின் இலக்காக ஒலித்தது. அனைத்து மதங்களும் உபதேசிப்பது ஒன்றே என்று அவர் கூறி இன்றுடன் 125 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
அன்றைய உலகம் இன்றில்லை. விஞ்ஞான வளர்ச்சியால் உலகம் இன்று உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது. ஆனால் சமயத்தின் உட்பொருளை உணராத மதவெறியாளர்களால் உலகம் இன்னல்படுவது தொடர்கிறது. ஒவ்வொரு சமயத்தவரும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டது போல கிணற்றுத் தவளைகளாகவே இருக்கத் தலைப்படுகின்றனர். அவர்கள் சமய சாகரத்தின் பேராற்றலை உணரும் நாளில் உலகில் அன்பு தவழும்; அமைதி திகழும். 
யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றுரைத்த தமிழ்ப்புலவனின் வழிநின்று, வசுதைவ குடும்பகம்' என முழங்கிய வேதவழி சென்று, சிகாகோவில் சர்வ சமய ஒற்றுமைக்குக் குரல் கொடுத்த சுவாமி விவேகானந்தரை நினைவில் கொள்ள வேண்டிய நாள் இன்று. அவரது சிகாகோ பேருரையை நினைவில் கொள்வதன் வாயிலாக மானுட மாண்பை நம்மால் உயர்த்த முடியும்.
 

More from the section

நெகிழிக்கு விடை, மாசுக்கு தடை!
செந்தமிழின் புதிய மகள் சிந்தி!
முத்தலாக் மாயப் புனைவுகள்..!
இடஒதுக்கீடு சலுகை: விட்டுக் கொடுக்கத் தயாரா?
புதிய இந்தியா: வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்கு!