செவ்வாய்க்கிழமை 19 மார்ச் 2019

உழவோர் - நுகர்வோர் உறவு

By ஆர்.எஸ். நாராயணன்| DIN | Published: 13th September 2018 01:24 AM

ஒரு காலத்தில் கொடுத்து வாழ்ந்த உழவர்கள் இன்று கேட்டு வாழ்ந்தும், கேட்பது மறுக்கப்படுகிறது. தான் உழைத்து உழவு செய்து விளைந்த பொருள்களுக்கு விலை இல்லை என்று வீதியில் போராடி பெற்ற பலன் அற்பமே. பண்டமாற்றுப் பொருளாதாரத்தில் பொருளுக்கு மதிப்பு இருந்தது. ஒரு பொருள் பணமதிப்பைப் பெற்ற போது விளைபொருள் விலை மலிந்தும், ஆடம்பரப் பொருள்களின் விலை உயர்ந்தும் போகிறது.
ஹேண்ட்வாஷ்' என்ற பெயரில் டூத் பேஸ்ட்' அளவில் உள்ள சோப்பு நுரை 100 ரூபாய். அதைவிடக் குறைவாக 1 கிலோ உளுந்து ரூ. 70 என்று விற்கப்படுகிறது. நுகர்வோர் விளம்பரக் கலாசாரத்தில் மதிமயங்கிய மத்யமர்கள் விளைபொருள் விலை கூடினால் மட்டும் குரல் எழுப்புகிறார்கள். கிருமி நாசினி என்ற பெயரில் விற்கப்படும் விஷங்களின் விலை ஏற்றத்திற்கு யாரும் குரல் கொடுப்பதில்லை.
கூசாமல் பத்தோடு பதினொன்று என்று சூப்பர் மார்க்கெட்டில் அந்த சோப்பு திரவத்தைக் கூடையில் போட்டு தள்ளிக்கொண்டு போவதுண்டு. விலையைக் கூட கவனிக்காமல் ரூ.10 மதிப்புள்ள சோப்பு நுரைக்கு ரூ. 100 கொடுப்பார்கள்.
வெங்காயம் விலை ஏறினால் சீறுவார்கள். பப்பாளி போட்டு லாபம், நெல்லிக்காயில் லாபம், எலுமிச்சையில் லாபம், கொய்யாவில் லாபம், சம்பங்கியில் லாபம் என்று விளம்பரப்படுத்தும் விவசாயிப் பத்திரிகைகளின் அக்கப்போர் தாங்க முடியவில்லை. தினை போட்டு லாபம், வரகு போட்டு லாபம், சாமையில் லாபம், இருங்கு சோளம் லாபம், கேப்பையில் லாபம், துவரையில் லாபம் என்றெல்லாம் செய்தி உண்டா?
இப்போது சில நுகர்வோருக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இயற்கை வழியில் சாகுபடி செய்யப்படும் உணவுகளுக்கு ஆதரவு பெருகியுள்ளது. மற்றுமொரு நல்ல விஷயம், ஊட்ட உணவு பற்றியது. அரிசியும் கோதுமையும் முக்கிய உணவாகக் கொண்டவர்கள் இது நாள்வரை புறக்கணிக்கப்பட்ட புஞ்சை தானியங்கள் மீது கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். தமிழ்நாட்டில் உள்ள நுகர்வோர் புஞ்சை தானியங்கள் மீது ஆர்வம் காட்டலாம். அங்காடி மூலம் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால், அவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுடன் நேரிடையாகத் தொடர்பு கொண்டு வாங்கும் வாய்ப்பு இருக்குமானால் புஞ்சை சாகுபடி விவசாயிகள் பயனுறுவார்கள்.
புஞ்சை தானியங்கள் மீது தோன்றிய அக்கறை எப்படி? விழிப்புணர்வுள்ள சில நுகர்வோர் நஞ்சில்லா உணவு தொடர்ந்து கிடைக்கவும், நல்ல சத்தான ஊட்ட உணவு பெறவும் ஒருங்கிணைந்து அப்படி உற்பத்தி செய்யும் உழவர்களுடன் நேரிடையாகத் தொடர்பு கொண்டு, சாகுபடி செலவையும் ஏற்கத் தயாரான செய்தி நம் புருவத்தை உயர்த்த வைக்கலாம். ஊட்டமுள்ள நல்லுணவைத் தொடர்ந்து பெற வேண்டுமானால் அவ்வாறு உற்பத்தி செய்வோரிடமிருந்து நேரிடையாகப் பெறுவதுதான் வழி என்று ஹைதராபாதைச் சேர்ந்த நுகர்வோர் அமைப்பான திஷா' முடிவு செய்தது. இந்த அமைப்பு சூழல் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் இலக்கோடு தொடங்கப்பட்டது. பரம்பரை பரம்பரையாக இயற்கை விவசாயமும் புஞ்சை தானிய விவசாயமும் செய்யும் விவசாயிகளை அடையாளம் கண்டு, அப்படிப்பட்ட விவசாயிகளுக்குப் போதிய நிதி உதவியை நேரிடையாக வழங்கி லாபகரமாக விலையையும் கொடுத்து விளை பொருள்களை வாங்க திஷா' முடிவு செய்து களத்தில் இறங்கியது. சூழல் சார்ந்த விவசாய விளைபொருள் நுகர்வோர் நூறு பேரைக் கொண்ட நுகர்வோர் மகளிர் அணியையும் உருவாக்கியது.
ஒரே நாளில் திஷா' எடுத்த முடிவு அல்ல இது. கடந்த பல ஆண்டுகளாகவே சக உறுப்பினர்கள், இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுகூடி எடுத்த முடிவு இது. நஞ்சில்லா உணவை உண்ண வேண்டும் என்ற குறிக்கோளில் வெறும் பிரசாரமாக இல்லாமல் ஆக்கபூர்வமாக எவ்வாறு செயல்படுவது என்று ஆண்டாண்டு விவாதித்து முடிவு செய்யப்பட்டதாக அதன் தலைவர் சத்யநாராயண ராஜு குறிப்பிடுகிறார்.
புணேயிலும் ஹைதராபாதிலும் இயங்கி வரும் திஷா' இப்படிப்பட்ட யோசனையுடன் களத்தில் குதித்தால்தான் இயற்கை விவசாயத்தைக் காப்பாற்ற முடியும் என்று அவர் கூறுகிறார். மேலைநாடுகளில் இப்படிப்பட்ட உழுவோர் -நுகர்வோர் நேரடி உறவு இயற்கை விவசாயத்தில் செயல்படுகிறார்.
1970-களில் முதலாவதாக ஜப்பானில் இக்கருத்து வேர்விட்டதைத் தொடர்ந்து ஸ்விட்சர்லாந்து , ஸ்காண்டிநேவியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் பரவியது. மேற்படி குளிர்ப்பிரதேச நாடுகளில் பால்பதனப் பொருள், இறைச்சியுடன் காய்கறி, பழங்களில் கவனம் செலுத்தப்பட்டன.
திஷா' நிறுவனர் சத்யநாராயண ராஜு, ஒரு திரளான விவசாய அமைப்பைத் தேடித் கொண்டிருந்தபோது, டெக்கான் டெவலப்மெண்ட் சொசைட்டி' என்ற அமைப்பின் பணி அவரைக் கவர்ந்தது. மேற்படி அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டு வேலையை கவனித்தார். இந்த தக்காண வளர்ச்சிக் கூட்டமைப்பு என்ன சாதித்துள்ளது என்று உற்று நோக்கினால், வியப்பாக இருக்கும்.
டெக்கான் டெவலப்மெண்ட் சொசைட்டி என்ற தொண்டு நிறுவனம் கடந்த முப்பது ஆண்டுகளாக, புஞ்சை தானியம், பருப்பு வகை நீர் சிக்கனப் பயிர்களை மானாவாரி நிலங்களில் மீட்டெடுக்க தெலங்கானாவில் பாடுபட்டு வருகிறது. இன்று மகத்தான வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த அமைப்பின் உதவியால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் புஞ்சை தானியங்களில் பாரம்பரியத் தொழில்நுட்பங்கள் மீட்டுருவம் பெற்றுள்ளன.
தெலங்கானாவின் மேடக்' மாவட்டத்தில் பன்னிரண்டு பந்துலு' என்ற சாகுபடி முறை புத்துருவம் பெற்றுள்ளது. சிறிய அளவு என்றாலும் ஒரே நிலத்தைப் பன்னிரண்டால் வகுத்துப் பாத்தி எடுத்துப் பன்னிரண்டு வகையான தானிய விதைப்பு செய்வதுதான் பன்னிரண்டு பந்துலு.
ஒரு பாத்தியில் கம்பு, ஒரு பாத்தியில் சாமை, ஒரு பாத்தியில் உளுந்து, ஒரு பாத்தியில் துவரை, ஒரு பாத்தியில் பாசிப்பயறு , ஒரு பாத்தியில் இருங்கு சோளம், குதிரைவாலி, தினை, வரகு, கேழ்வரகு என்று சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரே நேரத்தில் பன்னிரண்டு பயிர்கள் சாகுபடி செய்யும்போது, பயிர்களின் வயது வித்தியாசம் காரணமாக அறுவடை தொடர்ந்து இருக்கும். ஒரு பயிர் சாவியானாலும் வேறு பயிர் பலன் தரும் வாய்ப்பும் உண்டு.
குறிப்பாக, அந்த அமைப்பு விவசாயத்தில் பெண்களின் பங்கேற்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்கி, கூட்டுறவு முறையில் புஞ்சை சாகுபடி வளர்ச்சியில் கூடுதல் முனைப்புக் காட்டி வந்துள்ளது. இதன் நோக்கமே கிராமங்களில் உள்ள விவசாயப் பெருங்குடிகளின் ஊட்ட உணவுப் பாதுகாப்புடன் நுகர்வோர்க்கும் ஊட்ட உணவு வழங்குதல் ஆகும்.
நுகர்வோர் உடல் நலம் பேண வேண்டும் என, உழுவோரைத் தேடி கிராமங்களுக்கே வந்து விளைபொருளைப் பெறும் உந்துதல் ஏற்பட்டுள்ளது. அதற்கு உற்ற துணையாக திஷா ஏற்படுத்திய திட்டத்துக்கு கன்ஃபார்ம்' செயல்திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் கன்' என்பது கன்ஸ்யூமர்- நுகர்வோரையும், ஃபார்ம் என்பது ஃபார்மர்ஸ் -உழவரையும் குறிக்கிறது. விழிப்புணர்வுள்ள நுகர்வோர் நஞ்சில்லா உணவை உண்பவர். உழவன் என்பவர் தொடர்ந்து இயற்கை வழியில் சாகுபடி செய்பவர். இதுவே கன்ஃபார்ம்' குறிக்கோள்.
இந்த அமைப்பு செயலாற்றும் 55 கிராமங்களிலிருந்து சுமார் 250 ஏக்கர் நிலத்தில் இயற்கை சாகுபடி செய்யும் விவசாய மகளிர் சங்கம் உருவாக்கப்பட்டது.
அந்த விவசாய மகளிர் சங்கத்துடன் திஷா' உறுப்பினர்களில் உள்ள நூறு நுகர்வோர் அணிப் பெண்களும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். உற்பத்தியாளர் அணியில் உள்ள விவசாயிகளில் பலர் சராசரி 1 ஏக்கர் நிலமுள்ளவர்களே. அவர்கள் இயற்கை முறையில் சோளம், கம்பு, சாமை, உளுந்து, துவரை போன்ற நவதானியப் புஞ்சை சாகுபடி செய்பவர்கள். அதுவும் மழையை நம்பித்தான். ஆழ்துளைக் கிணறு, பம்புசெட் எதுவும் இல்லை. கடந்த பருவத்தில் காலம் தாழ்த்திப் பெய்த மழையாலும், பறவைகளாலும் நஷ்டம் ஏற்பட்டது. இந்தக் கன்ஃபார்ம்' ஒப்பந்தப்படி நஷ்டத்திலும் நுகர்வோர் பங்கு ஏற்பார்கள். நுகர்வோர் அணிப் பெண்கள் நூறு நபர்கள் தலைக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை நிதி திரட்டி, அந்த நிதியத்திலிருந்து புஞ்சை உழவர் மகளிர் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 முதலீடு வழங்கி அதற்கு ஈடாக உழவர்களின் லாப விலை அடிப்படையில் தானியங்களைப் பெறுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, விவசாயமும் தொடங்கப்பட்டுள்ளது.
உழவர் மகளிர் அணியும், நுகர்வோர் மகளிர் அணியும் அர்ச்சுன நாயக் தண்டம் என்ற கிராமத்தில் ஒன்றுகூடிப் பேசி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, உழவர் அணி சார்பில் பேசிய ஷக்ரிபாய் என்ற விவசாயி, உழவனைத் தேடி நுகர்வோர்கள் நேரிடையாக வந்து பண உதவி செய்வதற்கு நன்றி தெரிவித்தார். திஷா'நாட்டுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் என்றும், இந்தக் கன்ஃபார்ம்-நுகர் உழவன்' இயக்கம் மேலும் விரிவு பெற்று நஞ்சில்லா உணவு உண்டு, எல்லோரும் உடல்நலம் போற்றவும், இந்தியக் குழந்தைகள் எதிர்காலத்தில் ஊட்ட உணவுக் குறைபாடு இல்லாமல் வாழவும் ஆண்டவன் அருள்புரிய வேண்டும் என்றும் அவர் பேசியது அனைவரையும் கவர்ந்தது. ஊட்ட உணவு பெற புஞ்சை தானிய உற்பத்தி மறுமலர்ச்சி பெற வேண்டும். இது ஒரு மக்கள் இயக்கமாக மாறி வருவதும் ஆரோக்கியமே.

 

More from the section

தொல்காப்பியரைத் தொழுவோம்!
ஏன் வாக்களிக்க வேண்டும்?
இல்ல இடர்களைத் தவிர்க்கலாமே!
வேலை தேடும் இளைஞர்களே...
பிரித்தலும் பேணிக் கொளலும்!