வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

தாய்மையின் தடுமாற்றம்

By ப. இசக்கி| DIN | Published: 13th September 2018 01:23 AM

சென்னையில், திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண், வேறு ஓர் ஆணுடன் தகாத உறவை விரும்பி, தன் இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டார்' என்ற செய்தி அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
தகாத உறவுக்காக, பெற்ற பிள்ளைகளை தாய் கொல்வதும், கணவரை மனைவி கொல்வதும், மனைவியைக் கணவர் கொல்வதும் புதிதல்ல. ஆண்டாண்டு காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்போது அதிகமாகிவிட்டது என்றும் கூறமுடியாது. ஊடகங்களின் வீச்சு அதிகரித்துள்ளதால், எந்த மூலையில் என்ன நடந்தாலும் உடனே அது பொதுவெளிக்கு வந்து விடுகிகிறது. அப்படி எல்லாமும் நமது காதுகளை வந்து எட்டுவதால் இத்தகைய துன்பியல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டனபோலத் தோன்றலாம்.
நல்ல தங்காள், தனது ஏழு குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு, தானும் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். இப்போது பெண்களில் சிலர், குடிகாரக் கணவரது அழிச்சாட்டியம் தாங்க முடியாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலர், பெண் குழந்தை வேண்டாம் என்று பிறந்த உடனேயே கொன்றுவிடுகின்றனர்.
நல்ல தங்காள், குழந்தைகளைக் கொன்றதற்குக் காரணம் வறுமை என்றால், குடிகார அல்லது குடும்பப் பொறுப்பற்ற கணவரால் குழந்தைகளைக் கொல்லும் தாய்மார்களுக்கு பாசம் அதிகம். தான் இறந்த பிறகு குழந்தைகள் அநாதையாகிவிடக் கூடாது என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் குழந்தைகளையும் கொன்றுவிடுகின்றனர். சமூக-பொருளாதார காரணங்களால் பெண் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். ஆனால், இவர்கள் மீது பச்சாதாபம் கொள்ளும் சமூகம், சென்னை சம்பவத்துடன் தொடர்புடைய பெண் மீது கோபத்தைக் கொட்டுகிறது. அதற்குக் காரணம் அந்தப் பெண்ணின் தாய்மையைத் தடுமாறச் செய்த காமம் எனும் கயமைதான்.
இந்தச் சமுதாய சீரழிவுக்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவது, கூட்டுக் குடும்ப முறை சிதைவு. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் தகாத செயல்களில் ஈடுபட முயற்சி செய்யும்போது, மூத்தவர்கள் அவர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கி குடும்ப கட்டமைப்பு உடையாமல் பார்த்துக் கொள்வார்கள். இப்போது கூட்டுக் குடும்பம் அருகி, தனிக் குடும்பம் பெருகிவிட்டது. தனிக் குடும்பத்தில் நடப்பது வெளியில் தெரிவதில்லை. கட்டுப்படுத்தவோ, ஆலோசனை சொல்லவோ ஆள் இல்லை. இறுதியில் விபரீதத்தில் முடிகிறது.
அடுத்து திருமண முறை. பெரியவர்கள் பார்த்து திருமணம் செய்து கொள்பவர்கள் குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு கணவரும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், ஒருவரையொருவர் அனுசரித்து வாழவும் கற்றுக் கொள்கின்றனர்; குடும்ப உறவுகள் பிணைக்கின்றன; விபரீதங்கள் தடுக்கப்படுகின்றன.
காதல் திருமணம் செய்துகொண்டு தனிக் குடித்தனம் நடத்துவோரை கண்காணிப்போரும், கட்டுப்படுத்துவோரும் இல்லை. எனவே, கருத்து வேறுபாடு ஏற்பட்ட உடனே பிரிவு தொடங்கிவிடுகிறது. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்; குடும்பம் உருக்குலைந்து போகிறது.
மனித வாழ்வில் உறவுக்கு இணையான முக்கியத்துவம் நட்புக்கும் உண்டு. உறவுகள் செய்யாததைக் கூட நண்பர்கள் செய்வார்கள். உறவுகளுக்கிடையே சில வேளைகளில் பொறாமை இருக்கும். உண்மையான நட்புக்குப் பொறாமை இருக்காது. ஆலோசனை சொல்வார்கள்; நல்வழிப்படுத்துவார்கள். எனவே, தரமான நட்பு அவசியம். தரமான நட்பு என்பது இப்போது அரிதாகி, ஆதாய நோக்குடனான நட்புதான் அதிகமாகி இருக்கிறது. ஆண்-பெண் தகாத உறவு கூட முதலில் நட்பில்தான் தொடங்குகிறது. வீட்டுச் சுவரில் முளைக்கும் சிறு செடி வளர்ந்து கிளைவிட்டு சுவரை உடைப்பது போல, சில நட்பு கணவன்-மனைவி உறவில் விரிசலை ஏற்படுத்தி விடுகிறது. எனவே, நட்பிலும் கவனம் தேவை.
அடுத்து, நமது கல்வி முறை. பள்ளிக் கூடங்களில் அறிவை வளர்க்கும் கல்வி போதிக்கப்படுகிறது. அறத்தை வளர்க்கும் கல்வி இல்லை. நல்லொழுக்க போதனை வகுப்புகள் கிடையாது. சமுதாயத்தில் ஒழுக்கமாகவும், சக மனிதர்களுடன் இணக்கமாகவும், அனுசரித்தும் வாழ வேண்டியதன் அவசியத்தை சொல்லிக் கொடுப்பார் இல்லை. பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரிக்குச் சென்றால், கல்வி பற்றிக் கேட்கவே வேண்டாம்.
இறுதியாக, பெண்களின் இயல்பான தாய்மைப் பண்பின் அவசியம் குறித்து அடுத்தடுத்த தலைமுறைக்கு நாம் தவறாமல் போதிக்கிறோமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. பெண் குழந்தை பூப்பெய்தியதும் 16 நாள் சடங்கின்போது அவர்கள் கையில் மரப்பாச்சி பொம்மை ஒன்றைக் கொடுப்பார்கள். அந்தப் பொம்மையை குழந்தை போன்று மடியில் வைத்து விளையாடுவாள் அந்தச் சிறுமி. இது சிறுமிக்கு உடல் அளவிலும், உணர்வு நிலையிலும் தாய்மையை ஊட்டும். இப்போது நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, கிராமங்களில் கூட மரப்பாச்சி பொம்மையைக் காண்பது அரிது.
தமிழ்ச் சமுதாயம் என்பது அடிப்படையில் தாவரச் செழிப்பால் மனிதச் செழிப்பையும், மனிதச் செழிப்பால் தாவர செழிப்பையும் உண்டாக்கி அதன் மூலம் நீடித்து, நிலைத்து வாழும் விருப்பம் கொண்டது. அதாவது, விருத்தி'தான் அடிப்படை. அதனால்தான், மங்கள காரியமாக இருந்தாலும், அமங்கள காரியமாக இருந்தாலும் அங்கு தாவரச் செழிப்பை உண்டாக்கும் தானியங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. திருமணத்தின்போது வீடுகளில் முளைப்பாரி வளர்ப்பதும், மணமக்கள் மீது அட்சதையாக அரிசி தூவுவதும், ஈமக்காரியங்களின்போது சுடுகாட்டில் தானியங்களை விதைப்பதன் தாத்பரியம் இதுதான். மனித விருத்திக்கான மண் பெண்தான். அவள் அழிவு சக்தி அல்ல; ஆக்க சக்தி. இவற்றையெல்லாம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.

 

More from the section

இளைய சமுதாயம் எழுக!
இதில் வேண்டாம் அரசியல்!
குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு என்ன?
உத்தரமேரூர் ஜனநாயகம்?
முலாயம் சிங் தந்த அதிர்ச்சி!