சனிக்கிழமை 20 ஜூலை 2019

பட்ஜெட்: அரசின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்...

By  எம்.ஆர்.சிவராமன்| DIN | Published: 08th July 2019 03:00 AM

கற்பனையில் பிச்சைக்காரர்கள்கூட குதிரை சவாரி செய்யலாம். டர்னிப் கிழங்கு கடிகாரம் என்றால் அதையும்கூட கையில் அணியலாம்' என இங்கிலாந்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மழலைக் கல்விப் பாடல் ஒன்று உண்டு. புதிய நிதிநிலை அறிக்கையை எதிர்பார்த்துக் காத்திருந்த அனைவரின் ஆசைகளை இந்தப் பாடலுடன் ஒப்பிடலாம்.
 இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரையில் முதல் 90 நிமிஷங்கள் முந்தைய ஐந்தாண்டுகளில் தனது அரசு சாதித்தது என்ன என்றும், அடுத்த ஐந்தாண்டுகளில் செய்யப்போவது என்ன என்றும் குறிப்பிட்டார். இந்த நிதி நிலை அறிக்கை அடுத்த ஐந்தாண்டுகளுக்கான செயல்திட்டமாகவே அமைந்திருந்தது என்பது உண்மை. அதிகார வர்க்கமும், அமைச்சர்களும் மாநில அரசுகளும் சிரத்தையாக இந்த நிதிநிலை அறிக்கையை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் வளர்ச்சி விகிதம் உயரும் என்பதில் சந்தேகமில்லை.
 முதலில், நிதிநிலை அறிக்கை குறித்த விமர்சனங்களைப் பார்க்கலாம். இதன் முக்கிய குறைபாடு, இதில் குறிப்பிட்டுள்ள பல புள்ளிவிவரங்கள் எந்த அடிப்படையில் உள்ளன என்ற தெளிவில்லாதிருப்பது. நிதிப் பற்றாக்குறை மிகவும் குறைவாகக் காட்டப்பட்டிருக்கிறது. வருவாய் இனங்கள் அதிகமாகத் தெரிகின்றன. உதாரணமாக, பெருநிறுவனங்களிடமிருந்து பெறும் கார்ப்பரேட் வரி ரூ. 7.60 லட்சம் கோடியிலிருந்து ரூ. 7.66 லட்சம் கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், ரூ.250 கோடி விற்றுமுதலைக் கொண்ட நிறுவனங்களுக்கான வரி விகித வரம்பு, தற்போது ரூ.400 கோடி விற்றுமுதலாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில் எவ்வாறு வரி வருவாய் உயரும் என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவில்லை. உற்பத்தித் துறையில் 14 சதவீத வளர்ச்சி மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் துறை மிகவும் மந்தகதியில் உள்ளது.
 இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 2018-19-ஆம் நிதியாண்டின் சிஜிஎஸ்டி வசூல் இலக்கு ரூ. 7,61,200 கோடியாக இருக்கும் என்று கூறப்பட்டது. அதை தற்போது ரூ. 6,63,343 கோடியாகக் குறைத்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்; இது முரண்பாடல்லவா?
 இதேபோல, "ஆயுஷ்மான்பாரத்' திட்டத்துக்கும், பிரதமரின் விவசாய மானியத் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. நமது பாதுகாப்புத் துறையை பலப்படுத்த வேண்டும் என பிரதமர் கூறி வருகிறார். ஆனால், பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்த இந்த முறை ரூ.19,000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அது ராணுவத்தின் அன்றாடச் செலவினங்களுக்கே கட்டுப்படியாகாது. இவை, நிதிநிலை அறிக்கையின் உத்தரவாதங்களுக்கும் நிதி ஒதுக்கீடு எதார்த்தத்துக்கும் உள்ள இடைவெளியைக் காட்டுகின்றன. இது குறித்த விரிவான ஆய்வு மேலும் பல தகவல்களை அளிக்கக் கூடும்.
 இப்போது, பொருளாதாரம் மீதான நிதிநிலை அறிக்கையின் உடனடித் தாக்கம் எப்படி இருக்கும் எனக் காணலாம். சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையை ("எம்எஸ்எம்இ') வலுப்படுத்தும் வகையில் பல அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் உள்ளன. அந்தத் துறைக்கு மானிய வட்டியில் வழங்கப்படும் கடன், பணப் பட்டுவாடாவை எளிமைப்படுத்தும் புதிய முறை, மத்திய தொழிலாளர் நலச் சட்டங்களை ஒருங்கிணைப்பது, அதன் கடுமைகளைக் குறைப்பது, ஊரகப் பகுதிகளில் புதிய சிறு தொழில் தொகுப்புத் திட்டங்களை நிறுவுவது போன்றவை அவற்றில் குறிப்பிடத் தக்கவை. இவை "எம்எஸ்எம்இ' துறைக்கு ஊக்கமளிப்பதாகவே இருக்கும். எனினும் இந்தத் துறையில் உள்ளோருக்கு நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய நிர்வாக, தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுவது அவசியம் அல்லவா?
 பலவிதமான தொழிலாளர் சட்டங்களை நான்கு பிரிவுகளுக்குள் உள்ளடக்கி புதிய சம்பள முறையை முன்வைக்க இருப்பது பாராட்டத்தக்க நடவடிக்கை. எனினும், பலவிதமான தொழிலாளர் சட்டங்கள் புழக்கத்திலுள்ள நமது மாநிலங்களில் இவற்றை மத்திய அரசு எவ்வாறு நடைமுறைப்படுத்துமாறு ஊக்குவிக்கப் போகிறது என்பது கேள்விக்குறியே.
 "எம்எஸ்எம்இ' துறையைப் பொருத்தவரை அவை எதிர்கொள்ளும் முக்கியத் தடை, மின் வசதிக்கும் தண்ணீருக்கும் அனுமதிக்காக பல மாதங்கள் காத்திருக்க நேர்வதே. இதைச் சீர்படுத்த வேண்டுமானால், ஜிஎஸ்டி கவுன்சில் போன்று, மாநிலங்களின் தொழில் துறை அமைச்சர்களின் கவுன்சிலை மத்திய அரசு அமைத்தாக வேண்டும். "எம்எஸ்எம்இ' தொழில் துறை வளர்ச்சிக்கு அத்தகைய கவுன்சில்
 மிகவும் உதவிகரமாக இருக்கும். அதை இப்போதும் அமைக்க முடியும்.நகர்ப்புறங்களிலும் ஊரகப் பகுதிகளிலும் ரூ.45 லட்சம் வரையிலான வீடு கட்டும் கடன் திட்டங்களில் வட்டிச் சலுகை ரூ. 7 லட்சம் வரை கிடைக்கும் வகையில் உயர்த்தப்பட்டிருப்பது தற்காலிகமாக வேலைவாய்ப்புகளை அதிகரிக்கக் கூடும்.
 அதே போன்று, தகுதியுள்ள 1.95 கோடி பயனாளிகளுக்கு கூடுதலாக வீடுகளைக் கட்டித் தர அரசு உத்தேசித்திருப்பது நல்ல அறிவிப்பு. 2024-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழி குடிநீர் இணைப்பை உறுதிப்படுத்துவதாக அறிவித்திருப்பதும் நல்ல திட்டம். இந்த திட்டங்களால் ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் நிச்சயமாக அதிகரிக்கும்.
 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான நிதியுதவி அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் ஒரு பெண்ணுக்கு முத்ரா திட்டத்தில் ரூ.1 லட்சம் வரை கடனுதவி கிடைக்கும். 10,000 விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளன. இந்தத் திட்டங்கள் அனைத்தும் ஊரகப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் வருவாயை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
 விமானப் போக்குவரத்து, ஊடகம் ("அனிமேஷன்'), காப்பீட்டுத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் வகையில் விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளன. அதேபோல, உயர்தொழில்நுட்பப் பிரிவுகளில் வருமான வரிச் சலுகை மூலம் அதிக அளவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. உயர் கல்வியிலும், ஆராய்ச்சியிலும் மேம்பாட்டுக்கான பல நடவடிக்கைகளை இந்த நிதிநிலை அறிக்கை முன்வைத்திருக்கிறது.
 வங்கித் துறையில், பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ. 70,000 கோடி கூடுதல் நிதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை ஊக்குவிக்க சர்வதேச கடன் சந்தையில் நுழையவும் அரசு முயற்சி மேற்கொள்கிறது. பொதுத் துறை வங்கிகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் தனது பங்குகளை 51 சதவீதத்துக்குக் கீழ் குறைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
 வரி விதிப்பைப் பொருத்தவரை, தனி நபர் வருமான வரி விதிப்பில் உயர் வருவாய்ப் பிரிவினருக்கு கூடுதல் வரி விதிப்பை அறிவித்து, சோஷலிச அணுகுமுறையை அரசு வெளிப்படுத்தியிருக்கிறது. ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது மட்டுமல்ல, இது ஒரு துணிச்சலான நடவடிக்கையும்கூட.
 மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை அரசு ஊக்குவிப்பதால் ஆட்டோமொபைல் துறையில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துறையில் பேட்டரி மின்னேற்ற வசதி உள்ளிட்ட பல அடிப்படைத் தேவைகள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளன. பேட்டரி உற்பத்தி தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். இது குறித்து நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
 நாட்டின் உள்நாட்டு வளர்ச்சி விகிதத்தில் (ஜிடிபி) 7 சதவீத பங்களிப்பு நல்கும் ஆட்டோமொபைல் துறை பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பையும் உறுதிப்படுத்துகிறது. இந்த நிலையில் அரசின் கொள்கை முடிவு மாற்றத்தால் இந்தத் துறை தள்ளாடக் கூடாது. இந்த விஷயத்தில் அரசு தெளிவான முடிவுகளை அறிவித்தாக வேண்டும். மின்சார வாகனத் தயாரிப்புக்கு மாற போதுமான கால அவகாசம் தொழில்துறைக்கு அளிக்கப்படுவது அவசியம்.
 உள்நாட்டுத் தொழில்களைக் காக்க இறக்குமதிப் பொருள்களின் மீது சுங்க வரியை அரசு உயர்த்தியிருக்கிறது. இது சரியானதா என்பதை காலம்தான் சொல்லும்.
 பொதுவாக நிதியிழப்பின் அளவையும் அதற்கான காரணங்களையும் நிதியமைச்சர்கள் நிதிநிலை அறிக்கையில் தெரிவிப்பது வழக்கம். ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில் அந்தக் காரணங்களை ஊடகங்களின் கற்பனைக்கே விட்டுச் சென்றிருக்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
 இந்த அரசின் கொள்கைகள் இந்தியாவை 5 டிரில்லியன் பொருளாதார நாடாக கொண்டு செல்லுமா? ஆண்டுக்கு 8 சதவீத பொருளாதார வளர்ச்சியிருந்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனால், நடப்பு நிதியாண்டிலேயே பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஏற்றுமதி அபிவிருத்தியை நம்பியே நமது பொருளாதார வளர்ச்சி உள்ளது. ஜிஎஸ்டியால் பாதிப்பு, மூலதனப் பொருள்களின் விலை உயர்வு, மாநில அரசுகளின் பாராமுகம் போன்ற நெருக்கடிகளால் ஏற்றுமதித் துறை பலவீனமடைந்திருக்கும் நிலையில் வளர்ச்சி சாத்தியமாக வேண்டுமானால், அரசின் கொள்கைகளில் மாற்றங்கள் வர வேண்டும். அநேகமாக அரசின் ஏற்றுமதி- இறக்குமதி கொள்கை அறிவிப்பில் புதிய சலுகைகள் அறிவிக்கப்படலாம்.
 அரசின் உள்ளார்ந்த நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. அரசின் குறுக்கீடுகளைக் குறைப்பதும், அரசு நிர்வாகத்தில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பதும், உயர்ந்தபட்ச பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அளிக்கும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு. அரசு- தனியார் துறை- பொதுமக்களின் ஈடுபாடு மூன்றும் இணையும்போது அதிகபட்ச பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும் என்பதே அரசின் நம்பிக்கையாக உள்ளது.
 கட்டுரையாளர்:
 மத்திய வருவாய்த் துறை
 முன்னாள் செயலர்.
 
 

More from the section

இந்தியாவின் ‘உயிர்நாடி’ காக்க...
பொதுநலச் சிந்தனையே சிறப்பு
சிக்கனம், சேமிப்பு...வாழ்வின் ஆதாரங்கள்!
நிதிச் சேவையின் பிதாமகன்!
"சூப்பர் ஓவரில்' சிக்கிய கோப்பை!