சனிக்கிழமை 20 ஜூலை 2019

இலவசம் என்கிற அபாயம்! 

By டி.எஸ். தியாகராசன்| DIN | Published: 09th July 2019 01:28 AM


தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மாநில அரசுக்கு மிகப் பெரிய பொருளாதார சுமையை ஏற்படுத்தும் ஒரு திட்டத்தை அண்மையில் அறிவித்துள்ளார். தலைநகரில் தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டி.டி.சி.) பேருந்துகள், சிற்றுந்துகள், தில்லி மெட்ரோ ரயில்கள் ஆகியவற்றில் சற்றேறக் குறைய 75 லட்சம் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டத்தை அடுத்த 2-3 மாதங்களில் கொண்டுவர இருப்பதாகக் கூறியுள்ளார். இதனால் தினம் 1 லட்சம் பயணிகள் கூடுதலாகப் பயணிப்பார்கள் என்றும், இந்த நிதியாண்டின் எஞ்சியுள்ள காலத்துக்கான செலவு ரூ.700-800 கோடியாக இருக்கும் என்றும் கூறுகிறார். 
2015-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவையின் மொத்த இடங்கள் 70-இல் 67 இடங்களைக் கைப்பற்றி உலகைத் தன்பக்கம் பார்க்க வைத்தவர். நன்கு படித்தவர். தனது நடவடிக்கைகளில் பரபரப்பான மோதல் போக்கை கொள்பவர் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது அவ்வப்போது அரசியல் விமர்சனங்கள் எழுவதுண்டு. 
முதல்வரான பின் தனது கருத்துக்கு இசைவாக இல்லை என்று தில்லி ஆளுநர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் மத்திய அரசுடன் கேஜரிவால் கருத்துமோதல் கொண்டார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை, அமித் ஷாவை வீட்டுக்கு அனுப்புவதே குறிக்கோள் என்று முழங்கினார். இதற்காக, தான் முன்பு எதிர்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க முயன்று தோல்வி அடைந்தார்; தேர்தலிலும் தோற்றார். 
இந்தத் திட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு தில்லி மெட்ரோ திட்டத்தின் முன்னாள் முதன்மை அலுவலரும், லக்னௌ மெட்ரோ ரயில் திட்டத்தின் இந் நாளைய அலுவலருமான ஈ.ஸ்ரீதரன் கடிதம் எழுதியுள்ளார். அதில், தில்லி முதலமைச்சரின் அறிவிப்பு ஓர் அபாயகரமானதொரு திட்டம். இதை அனுமதிக்காதீர்கள். இதை அனுமதித்தால் தவறான முன்மாதிரி ஆகிவிடும். பின்னர் மாணவர்கள், உடல் ஊனமுற்றோர் என்ற கோரிக்கை எழும். 
மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து தந்த நிதியால்தான் இந்தத் திட்டம் நிறைவேறியது. இதனால் ஒருதலைப்பட்சமாக மாநில அரசு முடிவு செய்யக் கூடாது.  இந்தத் திட்டம் தொடங்கிய முதல் நாளில்கூட அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கட்டணம் செலுத்தித்தான் பயணம் செய்தார். இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் தில்லி மெட்ரோ நிறுவனம் திவாலாகி விடும் என்று எச்சரித்துள்ளார். 
இதுபோன்ற இலவசத் திட்டங்களால் நாட்டின் அனைத்து மக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி போதுமானதாக இருக்காது. இயற்கைப் பேரிடர்களைச் சந்திக்க பொருளாதார பலம் இருக்காது.  தன்னலம் துறந்து, மக்கள் நலம் நினைந்து மக்களின் வாழ்க்கைத் தரம் உயர உணவு, உறைவிடம், குடிநீர், வேலைவாய்ப்பு, சமச்சீரான விலைவாசி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வழிமுறைகளைக் கண்டறிந்து செயலாற்றுவதுதான் முறை.
உள்ளுர் உற்பத்தித் திறன்வளர்ந்து ஏற்றுமதி அதிகரித்து வளர்ந்தால் ஜி.டி.பி. உயரும். ஆண்டுதோறும் ரூ.1,500 கோடிக்கும் மேலாக செலவழிக்கும் திட்டத்தால் அரசின் வருவாய் பெருகாது குறையுமெனில் அது நல்ல திட்டமாக இருக்காது என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்து. 
ஒவ்வொரு மாநிலமும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் அக்கறை காட்டி முதலீடுகளை ஈர்த்தால் நாட்டின் நிதி பன்மடங்கு பெருக வாய்ப்புகள் உள்ளன. 2018-ஆம் நிதியாண்டில் இந்தியாவுக்கு 1.5 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இவர்கள் மூலம் நம் நாடு ஈட்டிய அந்நியச் செலாவணி 2017-ஆம் ஆண்டில் மட்டும் ரூ.27,310 கோடி. 
ஆனால், நம் நாட்டிலிருந்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 2017-ஆம் ஆண்டில் மட்டும் 2.4 கோடி மக்கள் வெளிநாடு சென்றுள்ளனர். 2010-ஆம் ஆண்டில் வெளிநாடு சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 1.10 கோடிதான். இந்த ஏழு ஆண்டுகளில் வெளிநாடு சென்றவர்கள் எண்ணிக்கை, இந்தியா வரும் வெளிநாடு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைவிட அதிகரித்திருப்பதுதான் ஆச்சரியம்.
இதற்குக் காரணம், நம் நாட்டு சுற்றுலாத்தலங்களை உலகில் எல்லா நாடுகளின் பார்வைக்குப் படும் விதத்தில் செயலாற்றவில்லை. 
அமெரிக்க ஓர்லன்டோ மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற டிஸ்னி வேர்ல்டு அமைந்துள்ள சுற்றுலாத் தலத்தில் சீன நாட்டு சுற்றுலாத் துறையின் நிரந்தர அரங்கு உள்ளது. அதை ஒலி, ஒளிப்படமாகக் காட்டுகிறார்கள். 
சீனாவின் ஷாங்காய், பெய்ஜிங், ஜியான் போன்ற நகரங்களின் அழகும், வரலாற்றுச் சிறப்பை விளக்கும் பாணிகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. சின்னஞ்சிறு நாடான டென்மார்க்கில் கோபன்ஹேகன் நகரில் உள்ள டிவோலி பார்க்கில் உள்ள சீன அரங்கின் நிகழ்ச்சியைக் கண்டவர்கள் ஒருமுறையேனும் சீனா செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். வெளிநாட்டவர்களைக் கவர வேண்டும் என்று எல்லா நாடுகளும் முனைப்புடன் செயல்படுகின்றன.
ஆனால், பல ஆயிரம் ஆண்டு வரலாற்றுடன் கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க நமது நாட்டின் கோபுரங்கள், கோட்டைகள், குடைவரைக் கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள், புனித மலைகள், ஆறுகள் என்று பல இந்தியாவில் உண்டு. 
இந்தியாவின் வட பகுதிக்கு வரும் பெரும்பாலான பயணிகள் தென்னகம் வருவதில்லை. தாஜ்மஹாலைப் பார்க்க வரும் உலகம் தழுவிய பயணிகளில் 10 சதவீத பயணிகள்கூட 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கற்கோயிலான தஞ்சைப் பெருவுடையார் கோயிலையோ, பொறியியல் அற்புதமான கல்லணையையோ காண வருவதில்லை. சிற்பக்கலையின் உச்சம் தொட்ட மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தைப் பார்வையிடுவோர், தமிழகத்தின் விண்முட்டும் கோபுரங்களையும் தரிசிப்பது இல்லை. 
வடக்கே, இராஜபுத்திர, மொகலாய அரண்மனை, கோட்டை இவற்றைக் காண்போர் பல்லவ, சேர, சோழ, பாண்டிய படைப்புகளைக் காண்பதில்லை;  இதற்கு வெளிநாட்டார் காரணம் அல்ல. அவற்றின் அருமை, பெருமைகளை உலகிற்கு முறையாக நமது மாநில ஆட்சியாளர்கள் காட்சிப்படுத்தாமைதான் காரணம். 
இலவசமாக ரூ.1,500 கோடிகளைச் செலவிட தில்லி அரசு முன்வருவதைத் தவிர்த்து தலைநகரின் உள்கட்டமைப்புகளைப் மேம்படுத்தலாம். புது தில்லியில் காற்றின் மாசினைக் குறைக்க போக்குவரத்துத் துறையில் மின்மயத்தைப் புகுத்தலாம். 
 யமுனையில் மேற்கத்திய நாடுகளைப்போல சொகுசுப் படகுப் போக்குவரத்தினை செம்மையாகச் செய்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கலாம். தென்கிழக்கு ஆசியாவின் சின்னஞ்சிறு நாடான கம்போடியா வெளி உலகத்தின் பார்வைக்கு வந்தவுடன், இப்போது பல்லாயிரம் கோடி சுற்றுலாப் பயணிகளை கவரத் தொடங்கியுள்ளது.
பெளத்த சமய கோயில்களைப் புனரமைக்க ஜப்பானும், பாரம்பரிய நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க யுனெஸ்கோவும் உதவுகின்றன.  நம் நாட்டு ஆட்சியாளர்கள் வரி வருவாயை எல்லாம் மக்கள் நலத் திட்டங்கள் என்று சொல்லி வாக்குகளுக்காகக் கவர்ச்சித் தீயில் வீணாக்குகிறார்கள்.
மாஸ்கோவில் சாதாரண பேருந்து, மின்சார பேருந்து, டிராம், ரயில், மெட்ரோ ரயில் இருக்கிறது. மெட்ரோ போக்குவரத்து வழித்தடத்தில் 300 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. நாள் ஒன்றுக்கு 11 ஆயிரம் தடவைகள் சுற்றுவட்டப் பாதையில் ஓடுகின்றன. பல லட்சம் மக்கள் பயணிக்கின்றனர். 
பொதுவுடைமை பூத்துக் குலுங்கிய அன்றைய நாளிலும் சரி, இன்றும் சரி எல்லாம் கட்டணம்தான். காலம் தவறாமை, தூய்மை, அழகு, ஒழுங்கு இவைதான் ரஷிய அரசு தரும் இலவசங்கள். 
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கையின் சில அம்சங்கள் மனதைக் கவருவதாக இருக்கவில்லை.  மானியங்கள் என்ற பெயரில் ஆண்டுதோறும் 17,028 ஆயிரம் கோடி செலவிடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ஆண்டுதோறும் அரசின் மது விற்பனை ரூ.23,000 கோடியிலும் அதிகம். மானுடத்தின் விலை மதிப்பற்ற உயிர்களைக் கொள்ளைகொள்ளும் மது விற்பனை மூலம் பல ஆயிரங்களை வருமானமாக அரசு ஈட்டுகிறது.  
உழைத்து உண், உடலை உறுதி செய், ஏற்பது இகழ்ச்சி என்ற வழியில் மக்களை அரசு பழக்க வேண்டும். இலவசம் என்ற அபாயத்தை நீக்க வேண்டும். மீன் பிடித்துக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுகொடுப்பதே மேல். ஏழ்மையை விரட்டுகிறேன் என்று சொல்லி வாக்கு வங்கி அரசியலுக்காக ஏழைகளை வளர்க்கக் கூடாது.
அது தமிழகமானாலும், தில்லி ஆனாலும், மத்திய அரசானாலும் இலவசங்களுக்கும், மானியங்களுக்கும் விடை கொடுத்துவிட்டு, குறைந்த கட்டணத்தில் சிறப்பான சேவையையும், குடிமக்களின் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, செய்யத் தொழில், இருக்க வீடு, தரமான சாலைகள், பயணிக்கப் பொதுப் போக்குவரத்து என்று வளர்ச்சிப் பாதையில் தேசத்தை வழிநடத்த வேண்டும். தமிழகம்  காட்டிய தவறான முன்னுதாரணத்தை இப்போது ஒட்டுமொத்த தேசமே பின்பற்றத் தொடங்கி இருப்பது நமக்குப் பெருமை சேர்க்காது.
கட்டுரையாளர்:
தலைவர், 
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்
 

More from the section

இந்தியாவின் ‘உயிர்நாடி’ காக்க...
பொதுநலச் சிந்தனையே சிறப்பு
சிக்கனம், சேமிப்பு...வாழ்வின் ஆதாரங்கள்!
நிதிச் சேவையின் பிதாமகன்!
"சூப்பர் ஓவரில்' சிக்கிய கோப்பை!