சனிக்கிழமை 20 ஜூலை 2019

மறுவாழ்வுக்கு ஏங்கும் மதுராந்தகம் ஏரி! 

By முனைவர் என். பத்ரி| DIN | Published: 12th July 2019 01:30 AM

கடந்த 1985-ஆம் ஆண்டு நவம்பரில் பெய்த பெருமழை பலருக்கு நினைவில் இருக்கலாம். மதுராந்தகம் நகரவாசிகளுக்கு அது ஒரு திகில் நிறைந்த அனுபவமாக இருந்தது. தமிழகத்தின் முக்கியமான  ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியின் கரை எப்போது வேண்டுமானாலும் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்து விடும் ஆபத்து இருந்தது. பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு தங்களது வாரிசுகளுடன் மதுராந்தகம் நகரப் பள்ளிகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். 
ஒருபுறம் பெருமழையால் நிரம்பிக் கொண்டிருந்த மதுராந்தகம் பெரிய ஏரியை நோக்கி, அருகில் இருந்த சிறிய ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் வந்தது. ஒவ்வொரு விநாடியும் ஏரியின் நீர் அளவு  அதிகரித்துக் கொண்டே வந்தது. வரலாறு அறியாத அந்த வெள்ளத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் எந்த நேரமும் ஏரி உடையக்கூடிய ஆபத்து இருந்தது. 
பொதுப்பணித் துறை உள்ளிட்ட அரசுத் துறை நிர்வாகங்கள் செய்வதறியாமல் திகைத்தன.  சுமார் 24 மணி நேரம் போக்குக் காட்டிய வெள்ளம், பெரும் கருணையுடன்  மதுராந்தகம் நகருக்கு வெளியே வடக்கில் சுமார் அரை கி.மீ. தொலைவில் அந்த ஏரியின் கரையை உடைத்துக் கொண்டு பாய்ந்து ஓடியது. 
ஊரும் மக்களும் பிழைத்தனர். ஆனால், வெள்ளம் பாய்ந்த திசையில் உள்ள கிளியாறு போக்குவரத்துப் பாலம், ரயில்வே பாலம் ஆகிய இரண்டும் அப்போது சிதிலமடைந்தன. ஆடுகள், மாடுகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கின.
ஏறக்குறைய ஏரிக்கு வந்த நீர் முழுவதுமே வெளியேறியது. எனினும், அதைத் தொடர்ந்து தண்ணீர்ப்பஞ்சம் எதுவும் ஏற்படவில்லை. அடுத்தடுத்த போகங்களில் நெல்லும் கரும்பும் விளையத்தான் செய்தன.  பலநூற்றாண்டுகளைக் கண்ட அந்த மாபெரும் மதுராந்தகம் ஏரி, நீரைத் தேக்கிவைக்கும் அபாரத் திறனைக் கொண்டுள்ளதே இதற்குக் காரணம். 
சுமார் 2,846 ஏக்கர் பரப்பளவுள்ள  மாபெரும் மதுராந்தகம் ஏரியின்  இப்போதைய நிலை பெருமை கொள்ளத்தக்க வகையில் இல்லை. ஏரியின் எல்லைகள் குறித்த சரியான வரையறைகள் இல்லாத நிலையில், ஏரிக்குள்ளேயே பலர் பயிர்களை விளைவிப்பதும், வீடுகளைக் கட்டிக் கொள்வதுமாக, அதன் நிலப்பரப்பு நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது.
 தேசிய நெடுஞ்சாலை எண் 45 விரிவாக்கத்தை ஒட்டி, இந்த ஏரியின் கரைகளைப் பலப்படுத்தி அமைக்கப்பட்ட அகலமான பை-பாஸ் சாலை, அதன் பங்குக்கு இதன் பரப்பளவைக் குறைத்தது. மேலும், நீண்டகாலமாக ஏரியின் உட்பகுதிகள் தூர்வாரப்படாததால் அதன் கொள்ளளவும் கணிசமாகக் குறைந்துகொண்டு வருகிறது. 
மேலும், வெளியூர்களுக்கு லாரிகளில் தண்ணீர் எடுத்துச் சென்று பணம் சம்பாதிப்பவர்களும்,  மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த ஏரியின் நீர்வளத்தைச் சுரண்டி வருகின்றனர். நீர்நிலைகளை இரக்கமின்றிச் சுரண்டும் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் இன்றைய போக்குக்கு மதுராந்தகம் மட்டும் விதிவிலக்கா என்ன?
விளைவு, வற்றாத கிணறுகளைக் கொண்ட மதுராந்தகம் நகரில், கிணறுகள் என்ற பெயரில் செங்குத்தாக புதைக்கப் பட்ட குகைகளையே பார்க்க முடிகிறது. ஆழ்துளைக் கிணறு (போர்வெல்) கலாசாரம்  இந்த நகரிலும் பரவி விட்டது. காலை, மாலை என்று ஒவ்வொரு நாளும் இரண்டுமுறை நகராட்சிக் குழாய்களில் குடிநீர் கிடைத்து வந்தது கனவாகிவிட்டது. முறையான குடிதண்ணீர் விநியோகம் இன்றி மக்கள் தவிக்கும் நிலை.     
ஏரிப் பாசனத்துக்குப் பெயர்போன மாநிலம் தமிழகம்.  இங்கு ஓடும் ஆறுகள் (தாமிரவருணியைத் தவிர),  அண்டை மாநிலங்களில் உற்பத்தியாவதன் காரணமாக, அவற்றில் நீர் வருவதும் அந்த மாநில நிர்வாகங்களின் ஒத்துழைப்பைப் பொருத்தே அமைகிறது.  நதிநீர்ப் பாசனத்தை முழுவதும் நம்ப முடியாத இந்தக் காலகட்டத்தில், பெருமளவு விவசாய நிலங்கள் ஏரிப் பாசனத்தையே நம்பியுள்ளன. 
முற்கால அரசர்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆங்காங்கே ஏரிகளை உருவாக்கி அவற்றைத் திறம்பட நிர்வகிக்கவும் செய்தனர். 
மழைக் காலங்களில் நீர் நிரம்பிக் கடல்போல் காட்சி அளிக்கும் ஏரிகள் கோடை காலங்களில் ஆங்காங்கே சிறு குட்டைகள் போன்று நீரைத் தேக்கி வைத்துக் கால்நடைகளின் தாகத்தையாவது தணித்து வந்திருக்கின்றன.
சென்னையின் குடிநீர்த் தேவையை  புழல், செம்பரம்பாக்கம், பூண்டி போன்ற ஏரிகள் பூர்த்தி செய்து வருகின்றன. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள ஏரிகள், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்குப் பாசன வசதி அளிப்பதுடன், மக்களின் குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்து வருகின்றன. கடலூர் அருகிலுள்ள வீராணம் ஏரி அந்த மாவட்டத்துக்கு உதவுவது மட்டுமின்றி, சென்னை நகரின் தாகத்தையும் தணிக்கிறது.
இதே போன்று   மதுராந்தகம் ஏரியும் காலம் காலமாக மதுராந்தகம் நகரம், அதைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களின் பாசனம் மற்றும் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்கிறது. ஆனால், மழை என்னும் இயற்கையின் கொடையைத் தொடர்ந்து அலட்சியம் செய்துவரும் நமதுபோக்கிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மாபெரும் மதுராந்தகம் ஏரி தற்போது உள்ளது.
 மதுராந்தகம் ஏரியில் எதிர்காலத்தில் மழை நீரைச் சேகரிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்ய வேண்டும் என்று கோரி சமூக அக்கறை கொண்ட வழக்குரைஞர் நிர்மல் குமார் பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்தப் பிரச்னையின் தீவிரத் தன்மையை உணர்ந்து, ஆய்வறிக்கை அனுப்புமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் அண்மையில் உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம் வாழ்வாதாரமான மதுராந்தகம் ஏரிக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

More from the section

இந்தியாவின் ‘உயிர்நாடி’ காக்க...
பொதுநலச் சிந்தனையே சிறப்பு
சிக்கனம், சேமிப்பு...வாழ்வின் ஆதாரங்கள்!
நிதிச் சேவையின் பிதாமகன்!
"சூப்பர் ஓவரில்' சிக்கிய கோப்பை!