வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

தினமணி வாசகர்களுக்கு ஒரு அறிவிப்பு! நவம்பர் 14-ஐ முன்னிட்டு ‘குரூப் ஃபோட்டோ’ போட்டி!

By கார்த்திகா வாசுதேவன்| Published: 07th November 2017 03:57 PM

 

நவம்பர் 14 - குழந்தைகள் தினவிழா... 

குழந்தைகள் தினவிழா என்றால் அது குழந்தைகளுக்கு மட்டுமேயான கொண்டாட்ட நாள் என்பது தான் நமது பொதுவான எண்ணம். ஆனால் இந்த ஆண்டின் குழந்தைகள் தினவிழாவை கடந்த காலத்தின் குழந்தைகளான நம்மைப் போன்ற பெரியவர்களுக்கான ஒரு கொண்டாட்டமாக மாற்றினால் என்ன?

ஏனெனில், தினமும் வீடு, வீடு விட்டால் ஆபீஸ், ஆபீஸ் விட்டால் ஸ்மார்ட் ஃபோனும், லேப் டாப்பும் மிஞ்சும் நேரத்தில் டி.வியும் மட்டுமே கதி என்றிருக்கும் மக்களுக்கு இது கூட மிகச்சிறந்த மன அழுத்த நிவாரணியாகத்தான் மாறக் கூடும். அடப்போங்கய்யா நீங்களும் உங்கள் கொண்டாட்டமும். அந்தக் காலமென்றால் அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் தின விழாவென்றால் பள்ளிக்கு வரச்சொல்லி நேரு மாமா படத்துக்குப் பூப்போட்டு வணங்கி, அவரது புகழ்பாடும் பாடல்களில் ஒன்றைப் பாடச்சொல்லி ஆரஞ்சு மிட்டாய் தந்து அனுப்புவார்கள்.

தனியார் பள்ளிகள் என்றால் எக்ஸ்ட்ராவாக ஆங்கிலப்பாட்டுப் பாடி லெமன் இன் ஸ்பூன், மியூசிக்கல் சேர், பாஸிங் பால் என்று ஏதாவது உப்புச் சப்பற்ற விளையாட்டுப் போட்டிகளை வைத்து ஜெயித்தவர்களுக்கு சோப்பு டப்பாவோ, டேபிள்ஸ் புக் (வாய்ப்பாட்டுப் புத்தகமோ) கொடுத்தனுப்புவார்கள். இந்தக் கொண்டாட்டங்களை மீட்டெடுப்பதில் அப்படி என்ன குதூகலம் வந்து விடப்போகிறது என்கிறீர்களா?

நன்றாக யோசித்துப் பாருங்கள்....

இவை மட்டுமே தான் உங்களது பள்ளிக்கால சந்தோஷங்களா?

குழந்தைகள் தினமென்றால் இவை மட்டும் தான் உங்கள் நினைவுக்கு வருமா? 

பள்ளிக்காலத்தில் ‘குரூப் ஃபோட்டோ’ என்று கூட்டமாய்ச் சேர்ந்து மலைப் பகுதிகளின் படிமுறை விவசாய சாயலில்   நெட்டையானவர்கள் பெஞ்சுகளின் மேல் ஏறி நின்று கொண்டும், குள்ளக் கத்தரிக்காய்கள் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டும், வகுப்பாசிரியைக்குப் பக்கத்தில் உட்கார போட்டா போட்டி போட்டுக்கொண்டு இடித்துப் பிடித்து தள்ளி, கிள்ளி அட்டென்ஷனில் நின்று ‘சீஸ்’ சொல்லிப் புன்னகைத்து ஊர் கூடித் தேர் இழுப்பது போல வருடம் முழுமைக்குமாக ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வோமே?

அது உங்களுக்கு நினைவுக்கு வரவில்லையா? 

குழந்தைகள் தின விழாவுக்கும், குரூப் ஃபோட்டோவுக்கும் என்னய்யா சம்மந்தம் என்று யாரேனும் கேட்கக் கூடும். சம்மபந்தம் இல்லாமலென்ன அதெல்லாம் இருக்கத்தான் செய்கிறது. இன்றைய அவசர உலகில் 40 கடந்தும் தமது பால்யக் கனவுகளை பசுமை மாறாது ஆழ்மனதில் பூட்டி வைத்திருக்கும் வளர்ந்த குழந்தைகளின்!!! ஆதர்சங்களை, விருப்பங்களை, ரசனைகளை வெளிப்படுத்த அவர்களுக்குப் பல நேரங்களில் போதிய சந்தர்பங்களே கிடைப்பதில்லை. இப்படித்தான் சிலருக்குப் பல்லாண்டுகள் கடந்தும் வெளிப்படுத்த இயலாமல் பொக்கிஷமான பல பசுமையான நிகழ்வுகள் அப்படியே ஆழ்மனதில் அமிழ்ந்து மூழ்கிவிடுகின்றன. ஏனென்றால் அந்தப் பூட்டைத் திறக்கும் சாவியைத்தான் நாம் முன்னெப்போதோ நமது பால்யத்தின் வீதிகளில் எங்கோ ஓரிடத்தில் விளையாட்டுத்தனமாக வீசித் தொலைத்துவிட்டோமே! இப்போது வந்து திடீரென அதை மீட்டெடுக்க வேண்டுமெனில் நாம் அந்தக் காலத்திற்கே மீண்டும் சென்றாலொழிய அது நடக்காத காரியம்.

அப்படி கடந்த காலங்களை மீட்டெடுக்க நமக்குப் பல விஷயங்கள் இருக்கலாம். ஆனால் அவை அத்தனையையும் நாம் நிகழ்வுகளாக்கி ஒரு கட்டுரைக்குள் அடைத்து விட முடியாது. சிலவற்றை மட்டுமே நம்மால் அப்படியாக்க முடியும். அவற்றிலொன்று தான் இந்த ‘குரூப் ஃபோட்டோ’ நினைவுகள்.

அதை முன்னிட்டே இப்படி ஒரு போட்டி வைத்தால் பலரது குழந்தைப் பருவ ஞாபகங்களை மீட்டிப் பார்க்க முடிவதோடு டைம் மெஷின் இல்லாமலே அவர்களை கடந்த காலங்களுக்கு பயணப்படவும் வைக்கலாமே என்றும் தோன்றியது. அதன் காரணமாக உருப்பெற்றதே இந்த ‘குரூப் ஃபோட்டோ’ போட்டி!

இந்தப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்க விரும்பும் வாசகர்கள் செய்யவேண்டியவை;

நீங்கள் உங்களது பள்ளிக்காலத்தில் யூனிஃபார்முடன் உங்களது வகுப்பாசிரியை, வகுப்புத் தோழர்கள், தோழிகள், தலைமையாசிரியர் என குரூப் ஃபோட்டோவுக்கு உரித்தான முழுமையான அம்சங்களுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோக்களை,  பீரோவின் அடித்தட்டில் இருந்தோ, பரணில் இருந்தோ, அல்லது எங்கே வைத்தோம் என்பதே மறந்து போன இடங்களிலிருந்தோ எப்படியேனும் சிரமப்பட்டாவது அவற்றை மீட்டெடுத்து, புகைப்படத்தைப் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றும் நினைவுகளை சில வார்த்தைகளில் ஞாபகப் பகிர்வுகளாக்கி எங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வையுங்கள். 

போட்டிக்கான விதிகளில் முக்கியமானவை...

  • புகைப்படங்களை அனுப்புபவர்கள் அதில் இடம்பெறும் தமது தோழர்கள், வகுப்பாசிரியர், தலைமை ஆசிரியர், உள்ளிட்டோரின் பெயர்களோடு, தாங்கள் படித்த பள்ளியின் பெயர், புகைப்படங்களை எடுத்துக்கொண்ட ஆண்டு உள்ளிட்ட முக்கியமான விஷயங்களையும் மறவாமல் குறிப்பிடவும்.
  • சிறந்த புகைப்படங்கள் மற்றும் ஞாபகப் பகிர்வுகளுக்கு தினமணி.காமின் சிறப்புப் பரிசுகள் உங்களுக்காகக் காத்திருக்கிறது.
  • அது மட்டுமல்ல, சிறந்த குரூப் ஃபோட்டோக்கள் தினமணி.காம் சிறப்பு கட்டுரைப் பிரிவு மற்றும் லைஃப்ஸ்டைல் 'ஸ்பெஷல்’ பக்கங்களில் வெளியிடப்படும். 
  • பள்ளி குரூப் ஃபோட்டோக்கள் எங்களுக்கு வந்து சேர்வதற்கான கடைசித் தேதி - 20.11.17
  • காலக்கெடு குறைவாக இருக்கிறதே என்ற கவலை வேண்டாம். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஈ.மெயில் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த யுகத்தில் வாழ்கிறோம் நாம்.
  • கையில் ஸ்மார்ட் ஃபோன்கள் இல்லாதவர்கள் யார்? உங்களுடைய குரூப் ஃபோட்டோக்களைத் தேடி எடுக்க ஓரிரு நாட்கள் போதுமே. தேடுங்கள், தேடியது கிட்டியதும் அப்படியே தூசி தட்டி ஸ்மார்ட் ஃபோனில் சிறைப்பிடித்து, புகைப்படம் குறித்த உங்களது அன்பான நினைவுகளை ஓரிரு வரிகளில் டைப் செய்து மின்னஞ்சலில் எங்களுக்கு அனுப்புங்கள். 

தினமணி வாசகர்களுக்கு தங்களது பள்ளிக்காலத்திய குரூப் ஃபோட்டோக்களைத் தேடி எடுக்கவும், அவற்றை மீண்டும் லேமினேட் செய்து பத்திரப்படுத்தவும், அப்போதைய பொக்கிஷமான நினைவுகளை அந்தப் புகைப்படங்களில் இருப்போருடன் பகிர்ந்து கொள்ளவும் இது ஒரு அருமையான வாய்ப்பு. தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதன்மூலம், விட்டுப்போன பல நட்புக் கண்ணிகள் மீண்டும் இணைக்கப்படலாம்.

குரூப் ஃபோட்டோக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி

dinamani.readers@gmail.com

குரூப் ஃபோட்டோக்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி 

20.11.17

Image courtesy: google

Image represents - TVS Lakshmi school, Madurai.

Tags : Dinamani Group Photo Competition 14.11.2017 CHILDREN'S DAY Group photo Competiton தினமணி குரூப் ஃபோட்டோ போட்டி குழந்தைகள் தினவிழா குரூப் ஃபோட்டோ பள்ளி குரூப் ஃபோட்டோ போட்டி

More from the section

அலுவலக ஆண்களை, பெண்கள் நெருங்கிய உறவுகளாகப் பாவிக்க வேண்டிய அவசியமில்லை: திலகவதி ஐபிஎஸ்! 
பொள்ளாச்சி சம்பவத்துக்கு காரணம் என்ன? திலகவதி ஐபிஎஸ் அதிர்ச்சித் தகவல்
கோடை காலத்துக்காக இல்லை என்றால் கூட தேர்தலுக்காகவாவது இதை செய்யுமா மாநில அரசு?
மட்டன் பிரியாணி ரூ.200, சிக்கன் பிரியாணி ரூ.180: இது தேர்தல் ஆணையத்தின் விலைப்பட்டியல்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் தி கிராண்ட் 3.0 பிரம்மாண்ட 3 இன் 1 கண்காட்சி!