புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

‘ஸ்கூப் மேன் ஆஃப் இந்தியா’ குல்தீப் நய்யார்!

By கார்த்திகா வாசுதேவன்| Published: 23rd August 2018 12:27 PM

 

இந்தியாவின் குறிப்பிடத்தக்க மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த குல்தீப் நய்யார் இன்று மறைந்தார். புது தில்லியில் தமது மனைவி மற்றும் இரு மகன்களுடன் வசித்துவந்த குல்தீப் நய்யாருக்கு  வயது  95. வயோதிகத்தின் காரணமான உடல்நலம் குன்றலால் காலமான  நய்யாரின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் 1 மணியளவில் புது தில்லி, லோதி மயானத்தில் நடைபெறவிருப்பதாகத் தகவல்.

பிறப்பும் கல்வியும்...

குல்தீப் நய்யார் 1923 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் நாள் சியால்கோட்டில் பிறந்தார். இவருடைய பெற்றோர் குர்பாஷ் சிங் மற்றும் பூரன் தேவி. துவக்கக் கல்வி மற்றும் சட்டக் கல்லூரிப் படிப்பை சியால்கோட்டிலேயே முடித்த நய்யார் இதழியல் மேற்படிப்பிற்காக அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழகம் சென்றார். கல்வியை முடித்து இந்தியா திரும்பிய நய்யார்,  ‘அஞ்சாம்’ எனும் உருதுப் பத்திரிகையொன்றில்... பத்திரிகையாளராக தமது பணியைத் துவக்கினார்.

பின் அங்கிருந்து விலகி டெல்லியைத் தலையிடமாகக் கொண்டு இயங்கிய பல்வேறு பிரபல இந்தியப் பத்திரிகைகளில் பணிபுரிந்த பெருமைக்குரியவராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் தமது இதழியல் பணிக்காக நய்யார் புது டெல்லியில் தங்கியிருந்த சமயங்களில் அப்போதைய மக்களவை உறுப்பினரான மெளலானா ஹஸ்ரத் மொஹானியைச் சந்திப்பது வழக்கம். மெளலானா ஹஸ்ரத் மொஹானியின் தூண்டுதலின் பேரில் ‘ஒரு உருதுப் பத்திரிகையாளராக மட்டுமே தாம் நீடித்தால்... தமது எழுத்துக்கான அங்கீகாரம் முழுவீச்சில் கிடைக்காது என்றுணர்ந்த நய்யார் விரைவில் ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். இதனால் நய்யாரின் எழுத்துக்கு சர்வதேச வாசகர்கள் கிடைத்தனர்.

நய்யார் வெகு விரைவில் ஊரறிந்த பத்தி எழுத்தாளராகவும், உலகறிந்த பத்திரிகையாளராகவும் அறியப்பட்டார். ஏனெனில் அவரது சிறந்த பத்திகள் சர்வ தேச அளவில் பிரபலமான சிறந்த பத்திரிகைகள் பலவற்றில் வெளியாகத் தொடங்கின.

இந்தியாவில் எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் நய்யார், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்திரா காந்தி அறிவித்த எமர்ஜென்ஸிக்கு எதிராக பத்திரிகை சுதந்திரத்தை உரக்க ஒலிக்கச் செய்தவர்களில் குல்தீப் நய்யார் குறிப்பிடத் தக்கவர்.

‘இந்திரா காந்தி மக்களாட்சியை இருளில் மூழ்கச் செய்து நம்மையெல்லாம் போலீஸ் ராஜ்யம் எனும் இருட்டறையில் அடைத்து விட்டார்’ என்று எழுதியதற்காகவும் தொடர்ந்து எமர்ஜென்ஸியை விமர்சித்துப் பேசியும், எழுதியும் வந்தமைக்காகவும் ‘மிசா’ சட்டத்தின் கீழ் கைதாகி சிறை சென்ற முதல் பத்திரிகையாளர் என்று பெயரெடுக்கக் கூட அவர் அஞ்சியதில்லை. துவக்கம் முதல் மரணம் வரையிலுமாக நீடித்த தமது இடைவிடாத பத்திரிகைப் பணியில் தவறெனப் பட்டதை அச்சமின்றி சுட்டிக் காட்டத் தவறாத நய்யாரின் இதழியல் திறனுக்காக அவருக்கு 2015 ஆம் ஆண்டில் ராம்நாத் கோயங்கா நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கெளரவித்தது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

நய்யாரின் திறமையை மதித்து கெளரவப் படுத்தும் விதத்தில் இந்திய அரசு அவரை ஐக்கிய நாடுகளுக்கான இந்திய உயர் ஆணையராகவும்,  ராஜ்ய சபா எம் பியாகவும் பொறுப்புகளைக் கொடுத்து சிறப்புச் செய்தது.

குல்தீப் நய்யார் படைப்புகள்...

தமது பத்திரிகைப் பணியின் ஊடே நய்யார் இதுவரை 15 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அனைத்தும் தேர்ந்த அரசியல் பார்வை கொண்டவை என்பதோடு மிகுந்த விமர்சனங்களுக்கும் உள்ளானவை. அந்தப் புத்தகங்கள் முறையே...

குல்தீப் நய்யாரின் அரசியல் பார்வை மற்றும் நிலைப்பாடு...

குல்தீப் நய்யார் இடது சாரி அரசியல் பார்வை கொண்டவராகக் கருதப்பட்ட போதும் அவருடைய அணுகுமுறைகள் அனைத்தும் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற் வேண்டும் என்பதாகவே இருந்தது. இருதரப்பு அரசியல் பார்வைகளும் ஒருங்கிணைந்த பத்திர்கையாளராக விளங்கிய  குல்தீப் மீது ‘இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டக் கோட்பாடுகளை’ ஆதரிப்பதான பலத்த குற்றச் சாட்டு இருந்தது. பாகிஸ்தானிய செய்தித்தாளான டான் பத்திரிகையின் 2010 பிப்ரவரி கட்டுரை ஒன்றில், தீவிரவாதிகளை அடக்க முயன்ற போராட்டத்தில் கொலையுண்ட அசிஸ்டண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் ஹேமந்த் கர்கரேவைக் கொன்றது பாக் தீவிரவாதிகள் அல்ல... இந்து வலதுசாரி ஆர்வலர்களால் தான் அவர் கொல்லப்பட்டதாக குல்தீப் நய்யார் எழுதினார்.  இந்தக் குற்றச்சாட்டுக்கு போதிய ஆவணமாக ஜூலை 2011 ல் சையது குலாம் நபி ஃபையால் அமெரிக்காவில் நடத்தப்பட்ட பல நிகழ்ச்சிகளில் குல்தீப் கலந்து கொண்டார் என்பதற்கான ஆதாரங்களை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப் படுத்தினர். அந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பாகிஸ்தான் நிதியுதவியால் நடத்தப்பட்டவை என்பதை குறிப்பிடத்தக்க ஆதாரமாகக் கருதியது இந்தியா.

அரசியல் தலைவர்களின் தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளான பத்திரிகையாளர்!

இந்தியா: தி கிரிட்டிகல் இயர்ஸ் எனும் தனது புத்தகத்தில் அப்போதைய மரியாதைக்குரிய இந்தியத் தலைவர்களான ‘ஜவஹர்லால் நேரு, டேனியல் ஸ்மித், பரி மனிலோ’ உள்ளிட்டோர் குறித்து அதுவரை வெளியில் தெரிய வந்திராத பல முக்கியமான ரகசியத் தகவல்கள் அனைத்தையும் புலனாய்ந்து அப்பட்டமாகப் புட்டுப் புட்டு வைத்ததில் குல்தீப் நய்யார் மீது அன்றைய அரசியல் தலைவர்கள் பலருக்கு கடுமையான ஒவ்வாமையும், கோபமும் இருந்தது தெள்ளத் தெளிவு. அதனால் அந்தக் காலகட்டங்களில் குல்தீப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசும், அவர் மீது கோபம் கொண்டிருந்த அரசியல் தலைவர்களும் மிகத்தீவிரமாகவும், நெருக்கமாகவும் கண்காணித்துக் கொண்டே இருந்தனர்.

பாகிஸ்தான் பாசம்...

குல்தீப் தனது வாழ்நாள் முழுமைக்கும் இந்தியா, பாகிஸ்தான் நட்புறவு நிலவ வேண்டும் என விரும்பிய, வலியுறுத்திய ஒரு பத்திரிகையாளர் என அறியப்பட்டார். அண்டை நாடான பாகிஸ்தானுடன் இந்தியா நட்புறவுடன் இணக்கமாக இருக்க இருநாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் எனும் கொள்கைக்கு நய்யார் எப்போதும் தமது ஆதரவை வலியுறுத்தி வந்தார். அவரது எழுத்துக்களூடான புதிய தெற்காசியப் பார்வையில் பாகிஸ்தானும், இந்தியாவும் எப்போதும் நட்புறவுடன் இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தவராகவும், உணர்த்திக் கொண்டே இருந்தவராகவும் அவர் தமது வாசகர்களிடையே அறியப்பட்டார்.

டான் பத்திரிகைக்கு நய்யார் அளித்த நேர்காணல்...

2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று பாகிஸ்தானின் டான் பத்திரிகைக்கு குல்தீப் நய்யார் அளித்த நேர்காணலொன்றில்;

சமீப காலங்களில் தாம், டேரன் அக்மொக்லு ஜேம்ஸ் எ.ராபின்ஸனின் “ நாடுகள் ஏன் தோற்கின்றன? (Why Nations Fail by Daron Acemoglu James A. Robinson.) எனும் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல, அப்போது கேட்கப்பட்ட மேலும் சில எளிய கேள்விகளுக்கும் ‘நச்’ சென்று அவரளித்த சுவாரஸ்யமான பதில்களைக் கீழே பாருங்கள்.

உங்களது படுக்கையறை வாசிப்பு மேஜையை அலங்கரிக்கும் புத்தகங்கள் எவை?

வி.வி. ரமண மூர்த்தி எழுதிய ‘ காந்தி குறித்த அத்யாவசியப் பதிவுகள், 1947 பஞ்சாப் பிரிவினை குறித்து ரகுவேந்திர தன்வார் மற்றும் ஜின்னா அளித்த அறிக்கைகள், பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய அடையாளம். அக்பர் எஸ். அஹமது எழுதிய ‘சலாதீனின் தேடல்கள்’. உள்ளிட்ட புத்தகங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்து வாசிப்பதற்குத் தோதாக என் படுக்கையறை மேஜையை அலங்கரிக்கின்றன.

எல்லோரும் படிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு புத்தகம்/எழுத்தாளர் எது அல்லது யார்? 

கவிஞர் இக்பால். அவரது சிக்வா, மிக நேரிடையான, தன்னிச்சையான ஆய்வு நூலாகும், இது வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

நீங்கள் மீண்டும் வாசிக்க விரும்பும் புத்தகம்?
ஃபைஸ் அஹமது ஃபைஸ்

உங்களை புத்திசாலித்தனமாக உணர வைக்கும் என்று நம்பி நீங்கள் வாசித்த ஏதாவதொரு முக்கியமான புத்தகம் குறித்து சொல்லுங்கள்?

அப்படி குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் இல்லை. அனைத்துப் புத்தகங்களுமே தனித்துவம் கொண்டவை தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வாசகனை புத்திசாலித்தனமானவனாக மாற்றக்கூடும்.

வாசிக்கத் தொடங்கி உங்களால் முடிக்க முடியாத புத்தகமாக நீங்கள் கருதுவது?

ஜார்ஜ் கென்னான் மெமைர்ஸ் 1925 - 1950

உங்களுக்கு மிகப் பிடித்த குழந்த இலக்கியப் புத்தகம் அல்லது கதைப் புத்தகம்?

மகாபாரதம்

நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக ஆவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு குல்தீப் நய்யார் சென்னை வந்திருந்தார். அப்போது பிரபல தமிழ் புலனாய்வு இதழொன்றுக்கு அளித்த நேர்காணலொன்றில்;

பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டது குறித்த கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கையில்;

குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவங்களுக்கு காரணகர்த்தாவான மோடி மாதிரியான ஒரு அரசியல் தலைமை இந்தியாவின் பிரதம மந்திரியானால் உலக அரங்கில் இந்தியாவைக் காப்பாற்ற யாரும் இல்லை. வன்முறையின் கரங்களிலிருந்து பிறகு இந்தியர்களையும், இந்தியாவையும் யாராலும் காப்பாற்ற முடியாது. இந்தியா தானே நசியும் எனும் ரீதியில் பதில் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தாம் வாழ்ந்த காலம் முழுமையிலும் அரசியல் தலைமைகளால் நெருக்கமான கண்காணிப்புக்கு உட்படுத்தப் பட்ட ஒரு நபராகவே வாழ்ந்து முடித்த குல்தீப் நய்யாரை ‘இந்தியாவின் ஸ்கூப் மனிதர்’ என்று சொன்னால் மிகையில்லை!

ஒரு பத்திரிகையாளராகத் தமது பணியைத் துவக்கிய நாள் முதலாக... தமக்கு நியாயம் எனப்பட்ட அத்தனை விவகாரங்களையும், அரசியல் தலைமைகள் குறித்த எவ்வித அச்சமும் இன்றி  தெளிவுடனும், தீர்க்கமாகவும் முன்வைக்கத் தவறாத சீரிய பத்திரிகையாளராக விளங்கியவர் குல்தீப் நய்யார். சர்வதேச அளவில் அவரைப் போன்ற அச்சமற்ற பத்திரிகையாளர்கள் வெகு சொற்பமானவர்களே!

குல்தீப் நய்யாரின் வாழ்க்கை ‘இன் ஹிஸ் இன்னர் வாய்ஸ்: குல்தீப் நய்யார்’ என்ற பெயரில் மிரா திவான் என்பவரால் திரைப்படமாக்கப் பட்டிருக்கிறது. திரைப்படம் குறித்துப் பேசுகையில் மீரா, ‘விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் பிரிவினையின்  பலிகடாவாக்கப்பட்ட மனிதர்களின் சுய அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டுமென ஆசைப்பட்டேன். அதற்கு இந்தியாவின் மனசாட்சியாகச் செயல்பட்ட குல்தீப் நய்யாரைக் காட்டிலும் சிறந்த மனிதர் கிடைக்க மாட்டார் என்பதால் அவரது அனுவங்களையே திரைப்படமாக்கினேன் என்று குறிப்பிட்டது முக்கியமானது.

Image Courtesy: jansatta.com

Tags : குல்தீப் நய்யார் ஸ்கூப் ஸ்கூப் மேன் ஆஃப் இந்தியா இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் அரசியல் கட்டுரையாளர் kuldip nayar died political journalist scoop scoop man of india

More from the section

கேது - சனி சேர்க்கை நல்லதா கெட்டதா? மீள்வது எப்படி? 
சிக்கராயபுரம் கல்குவாரிகளில் குடிநீர் எடுக்கும் பணி தொடக்கம் : சென்னைக்கு ஓரிரு நாளில் விநியோகம்
ராகங்களை பாடலாக பாட முடியும்; புத்தகங்களாக வெளியிட முடியாது
மருந்து தரக் கட்டுப்பாட்டு வரம்புக்குள் எம்ஆர்ஐ, சி.டி.ஸ்கேன்: மத்திய அரசு திட்டம்
இன்னும் 100 நாள்கள்: ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 2019