வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

சும்மா சும்மா ஆன்லைன்ல ஃபுட் ஆர்டர் பண்ணி சாப்பிடறீங்களா? அதான வேணாங்கறது, முதல்ல இதைப் படிங்க!

By கார்த்திகா வாசுதேவன்| Published: 19th July 2018 01:06 PM

 

இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் டிராஃபிக்கில் சக பயணிகளாய் நம்மோடு வலம் வருபவர்களில் கணிசமானோர் ஸ்விக்கி, ஜூமேட்டா, ஃபுட் பாண்டா டெலிவரி பாய்களாக இருக்கிறார்கள். பயணத்தில் எங்கு திரும்பினாலும் அங்கே ஒன்றிரண்டு ஸ்விக்கி பாய்கள் அல்லது ஜுமேட்டோக்காரர்களைக் காண முடிகிறது. நகரத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் புகுந்து புறப்பட்டு நாம் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவு வகைகளை எப்பாடு பட்டாவது கொண்டு வந்து சேர்த்து விடுகிறார்கள். அதனால் என்ன ஆயிற்று என்றால். ஆன்லைன் ஆர்டர்கள் பெருகிப் பெருகி ஒரு கட்டத்தில் உணவகங்களில் நேரடியாகச் சென்று சாப்பிட மனிதர்களே அற்றுப் போய்விடுவார்களோ என்று கொஞ்சம் பயமாகக் கூட இருக்கிறது. அந்தப் பயத்தையும் தாண்டி பீதியளிக்கிறது ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடும் உணவுகளினால் நம் பற்களுக்கு விளையக்கூடிய கேடுகள். இனி ஆன்லைனில் இந்த உணவுகளை எல்லாம் ஆர்டர் செய்து சாப்பிடுவதாக இருந்தால் இந்தக் கட்டுரையில் சொல்லப்போகும் விஷயங்களைப் பற்றியும் ஒருமுறை யோசியுங்கள்.

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடக் கூடியவர்களில் பெரும்பாலானோர் ஆர்டர் செய்வது மசாலா நிறைந்த சைவ மற்றும் அசைவ உணவு வகைகளைத்தான். அதிக மசாலாவை விரும்பாதவர்களும் கூட சாஸ்கள் நிறைந்த இத்தாலியன் மற்றும் சைனீஸ் உணவு வகைகளையே ஆர்டர் செய்து சாப்பிட விரும்புவதாகத் தகவல். அந்த உணவுகளால் பற்களின் ஆரோக்யத்துக்கு என்ன நேர்கிறது என்று பாருங்கள்.

இத்தாலியன் உணவு வகைகள்...  (பற்களில் அமில அரிப்பு)

 

பாஸ்தாவும், பீட்ஸாவும் பிடிக்காதவர்கள் யார்? இவை இரண்டும் பற்சிதைவை உண்டாக எப்போதாவது தான் காரணமாகின்றன. ஆனால், பல் இனாமல் மற்றும் ஈறுகளில் அரிப்பு ஏற்படுத்துவதில் முதலிடம் வகிக்கின்றன என்று சொன்னால் நீங்கள் நம்பித்தானாக வேண்டும். ஏனென்றால் வெள்ளை நிற பீட்ஸா பேஸ்கள் மற்றும் பாஸ்தாக்களில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைத் தன்னகத்தே கொண்டவை. இவற்றில் இருக்கும் எளிய சர்க்கரை மூலக்கூறுகள் விரைவில் கரையக்கூடியவை. அவை கரைந்து பற்களில் ஒரு படிமமாம ஒட்டிக் கொள்ள அவற்றுடன் இணையும் தக்காளி சாஸ் மிக அருமையாகவும், எளிதாகவும் பல் ஈறு மற்றும் இனாமலில் அரிப்பை உண்டாக்குகிறது. அதனால் பற்கூச்சம் அதிகரித்து நாளடைவில் நம்மால் அதிக சூடான மற்றும் குளிர்ச்சியான உணவுகளை நிரந்தரமாக உட்கொள்ள முடியாத அளவுக்கு பற்கள் சென்சிடிவ்வாக மாறி விடுகின்றன. இந்த நிலைக்கு காரணம் பாஸ்தா, பீட்ஸாக்களில் இருக்கும் அபிரிமிதமான சர்க்கரை என்றால் நம்பித்தானாக வேண்டும். 

இந்திய மற்றும் சைனீஸ் உணவுவகைகள்... (பற்காரை) 

பற்களில் கரை வேருமே காஃபி, டீ, குளிர்பானங்கள் சாப்பிடுவதால் மட்டுமே வருவதில்லை. நாம் உணவுகளில் கலக்கும் மசாலாப் பொடிகள் மற்றும் செயற்கை நிறமூட்டிகளாலும் கூட பற்காரை ஏற்படுவதுண்டு. இந்திய மற்றும் சைனீஸ் உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் அதிக மசாலாப் பொடி கலந்து சமைக்கப்படும் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தீர்களென்றால் அதிலுள்ள அழுத்தமான நிறமிகள் உங்கள் பற்களில் படிந்து நாளடைவில் பற்கள் தங்கள் சுய நிறத்தை இழந்து மஞ்சளாகவே மாறி விடக்கூடும். உதாரணத்துக்கு சைனீஸ் ஸ்பெஷல் உணவான சுஷியைச் சாப்பிட வேண்டுமானால் நீங்கள் சோயா சாஸ் தொட்டுக் கொள்ளாமல் முடியாது. இப்படித்தான் பலருக்கும் பற்களில் கரை படிகின்றன.

மீன் மற்றும் சிப்ஸ் உணவு வகைகள்! (பற்சிதைவு)

ஸ்டார்ச் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வதில் எப்போதும் ஒரு சிக்கல் உண்டு. அது நிச்சயம் பற்களின் மேலும் பல் இடுக்குகளில் மிக நன்றாகச் சிக்கிக் கொண்டு நீங்கள் எத்தனை முறை வாய் கொப்பளித்தாலும் கூட அத்தனை எளிதில் அகலவே அகலாது ஒட்டிக் கொள்ளும். அவற்றின் ஸ்டிக்கியான தன்மை தான் இதற்கு காரணமாகிறது. ஸ்டார்ச் அதிகமிருக்கும் உணவுப் பொருட்கள் இனிப்பாக இருக்க வேண்டுமென்பது கூட அவசியமில்லை. நம்மில் பெரும்பாலானோர் இனிப்புகளால் தான் பற்சிதைவு ஏற்படுகிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறோமில்லையா? பற்சிதைவுக்கு அப்படி நாம் உண்ணும் பொருள் இனிப்பாக மட்டுமே இருக்கவேண்டும் என்பதில்லை. ஸ்டார்ச் நிறைந்த உணவுப் பொருளாக இருந்தாலும் கூட இனிப்புகளால் உண்டாகக் கூடிய அதே விதமான பாதிப்புகளை இவையும் ஏற்படுத்தும். ஏனெனில் மீன், உருளை சிப்ஸ் போன்ற உணவுப் பொருட்களில் இருக்கும் ஸ்டார்ச்சானது செரித்தலுக்கு முன்னான நிலையில் சர்க்கரை மூலக்கூறாக மாற்றமடைந்து விடுவதால் அவற்றால் பற்சிதைவு உண்டாக 100% வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

இவை மட்டுமல்ல, பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்திலுமே அவை நீண்ட நாள் கெடாமல் இருக்க சர்க்கரை உள்ளிட்ட பிரிசர்வேட்டிவ்கள் சேர்க்கப்படுவதால் அவற்றால் பற்களுக்கு எப்போதுமே பேராபத்து காத்திருக்கிறது.

கபாப்கள்... (தாடைகளுக்குப் பேராபத்து)

 

ககோரி கபாப்
கலாட்டி கபாப்...


ஹரியாலி கபாப்...


கைரோஸ் டோனர் கபாப்...

ஆஹா! இந்தப் பெயர்களை அடுக்க அடுக்க கபாப் ப்ரியர்களுக்கு நாவில் நீரூறும்.

சிக்கன் கபாப், மட்டன் கபாப் என்றால் அசைவப்ப்ரியர்களுக்கு ஏக கொண்டாட்டம். ஆனால், யோசித்துப் பாருங்கள். இந்த கபாப்களை நாம் எப்படி உண்கிறோம் என. எந்தவொரு கபாப் வகையையுமே நீங்கள் பற்களால் கடுமையாக அரைக்காமலோ அல்லது தாடைகளுக்கு கடுமையான அசைவைக் கொடுக்காமலோ உண்ணவே முடியாது. ஒரு துண்டு கபாப் சாப்பிடுபவர்களுக்கு இப்படிச் சாப்பிடுவதால் பிரச்னை ஏதுமில்லை. ஆனால், அதன் சுவையில் ஈர்க்கப்பட்டு நீங்கள் அதிகமாக கபாப் சாப்பிடுகிறீர்கள் என்றால் உங்களது தாடைகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகும். கபாப்களுக்காக ஓவர் டூட்டி பார்த்து தாடைகள் தொய்ந்து நொந்து போனால் அப்புறம் உங்களால் வாயைக் கூட திறக்க முடியாது. தாடைகள் பற்களோடு வெகு நெருக்கமான தொடர்பிலிருப்பவை. தாடைகளில் வலி எழுந்தால் பற்களிலும் அதன் பாதிப்பு எதிரொலிக்கும்.

ஆன்லைனில் மேற்கண்ட உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட வரவழைப்பது இன்றெல்லாம் வெகு எளிது. நகரத்தின் எந்த மூலையில் இருக்கும் உணவகமாகக் கூட இருக்கட்டும். நீங்கள் ஃபுட் பாண்டாவிலோ, ஸ்விக்கியிலோ, ஜுமேட்டோவிலோ ஆர்டர் செய்து எளிதில் அவற்றைத் தருவித்து ருசி பார்த்து விட முடியும். ஆனால், அதன் பின்விளைவுகளைப் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்காகத் தான் இந்தக் கட்டுரை.

கொஞ்சம் யோசிங்க பாஸ்!

Tags : online order for food frequently order food online online ordered food lovers ஆன்லைன் ஃபுட் ஆர்டர்கள் டெலிவரி பாய்கள் பற்களின் ஆரோக்யம் ஆரோக்ய வாழ்வு dental health healthy lifestyle

More from the section

அலுவலக ஆண்களை, பெண்கள் நெருங்கிய உறவுகளாகப் பாவிக்க வேண்டிய அவசியமில்லை: திலகவதி ஐபிஎஸ்! 
பொள்ளாச்சி சம்பவத்துக்கு காரணம் என்ன? திலகவதி ஐபிஎஸ் அதிர்ச்சித் தகவல்
கோடை காலத்துக்காக இல்லை என்றால் கூட தேர்தலுக்காகவாவது இதை செய்யுமா மாநில அரசு?
மட்டன் பிரியாணி ரூ.200, சிக்கன் பிரியாணி ரூ.180: இது தேர்தல் ஆணையத்தின் விலைப்பட்டியல்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் தி கிராண்ட் 3.0 பிரம்மாண்ட 3 இன் 1 கண்காட்சி!