செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

கூகுள் டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள இந்தியாவின் பெருமைக்குரிய டாக்டர் ‘வி’ க்கு இன்று வயது 100!

By கார்த்திகா வாசுதேவன்| Published: 01st October 2018 11:10 AM

 

டாக்டர் ‘வி’ என்றால் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்குத் தெரியும். தெரியவில்லை என்றால் நிச்சயம் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய மாமனிதர்களில் இவர் ஒருவர். ‘வி’ என்றால் தெரியாதவர்களுக்கு அரவிந்த் மருத்துவமனை என்றால் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். ஏனெனில் இன்று அம்மருத்துவமனை தமிழ்நாட்டின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்று. தென் தமிழகத்தில் வடமலாபுரம் எனும் சின்னஞ்சிறு கிராமத்திலிருந்து தான் இம்மாபெரும் கண் மருத்துவமனை சேவைக்கான விதை முளை விட்டிருக்கிறது. அதற்கு காரணகர்த்தாவாக அமைந்தவர் டாக்டர் ‘வி’ எனும் கோவிந்தப்ப வெங்கடசாமி. இவர் பிறந்த கிராமத்தில் இவர் தான் முதல் மருத்துவப் பட்டதாரி. ஆண்களும், பெண்களுமாக இவருடன் பிறந்தவர்கள் ஐவர். இந்த ஐவருமே தத்தமது வாழ்க்கைத்துணைகளுடன் இணைந்து டாக்டர் ‘வி’யின் அரவிந்த் கண்மருத்துவமனைக் கனவை நனவாக்கியவர்கள் என்றால் அது மிகையில்லை. 

1918 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி சிவகாசிக்கு அருகில் இருக்கும் வடமலாபுரம் கிராமத்தில் பிறந்தவரான சிறுவன் வெங்கடசாமிக்கு 10 வயதாக இருக்கையில் அவருடைய அம்மாவுக்கு பிரசவ காலச் சிக்கல்களால் மூன்று குழந்தைகள் கருவிலேயே இறந்து விட்டன. இதனால் மனம் துடித்துப் போன சிறுவன் வெங்கடசாமிக்கு மிக இளம் வயதிலிருந்தே டாக்டராக வேண்டும் என்ற வைராக்யம் மிகுந்திருந்தது. அந்த முனைப்புடன் தன் கிராமத்திலிருந்து தினமும் 2 கிமீ தூரம் நடந்தே சென்று அரசுப் பள்ளியொன்றில் பள்ளிப்படிப்பை முடித்தவர் கல்லூரிப் படிப்பிற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு இளநிலை வேதியியலில் பட்டம் பெற்று தேர்ந்து பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்காக இணைந்தார். ஸ்டான்லியில் மருத்துவப் படிப்பை முடித்ததும் இந்திய ராணுவத்தில் இணைந்து 1945 முதல் 48 வரை மருத்துவச் சேவையாற்றியவர் பின்பு தமக்கிருந்த அரிதான முடக்குவாதப் பிரச்னையின் காரணமாக 30 வயதில் அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆம், டாக்டர் வெங்கடசாமிக்கு ருமட்டாய்டு ஆர்த்த்ரைட்டிஸ் பிரச்னை இருந்த காரணத்தால் அவரது கை விரல்கள் நிரந்தரமாக ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டு இயல்பு மாறிப் போயின. இதனால் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பொருட்டு இரண்டு ஆண்டுகளைப் படுக்கையிலேயே கழித்தார்.

இதன் காரணமாக இவர் மீண்டும் மருத்துவப் பணிக்குத் திரும்புகையில் முதலில் இவர் பணிபுரிந்து கொண்டிருந்த மகப்பேறியல் துறையில் மீண்டும் பணிபுரிய தடை ஏற்பட்டது. அதன் காரணமாக தமது மருத்துவ சேவையை மகப்பேறியலில் இருந்து கண் மருத்துவ சிகிச்சைக்கு மடை மாற்றிக் கொண்டார் அவர். எனவே 1951 ஆம் ஆண்டில் மருத்துவ மேற்படிப்பிற்காக சென்னை அரசு கண் மருத்துவமனையில் இணைந்து பயிலத் தொடங்கினார். அங்கு இவர் பயின்று கொண்டிருக்கையில் இவரது தந்தையார் மரணமடைந்தார். தந்தையை அடுத்து குடும்பத்தின் மூத்த வாரிசு என்பதால் அடுத்தபடியாக குடும்ப பாரமும் பொறுப்புகளும் இவர் தோளுக்கு மாறின. இவரது ஐந்து சகோதர, சகோதரிகளுக்கும் இவர் சொல்வதே வேத வாக்காக இருந்தது.

அனைவருக்கும் கண் சிகிச்சை என்பதே டாக்டர் வெங்கடசாமியின் தாரக மந்திரம். அந்த மந்திரத்தை பலிதமாக்க 1956 ஆம் ஆண்டு மதுரை மருத்துவக் கல்லூரியின் கண் சிகிச்சைப் பிரிவின் தலைவரானபோது, அவருக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாகின. கண் மருத்துவப் பிரிவைத் தனது லட்சியங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றக் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். அரசு மருத்துவமனைகளில் புதிய முயற்சிகள் செய்வது மிகக் கடினம். ஆனால் அதற்காகவெல்லாம் டாகடர் வெங்கடசாமி அசரவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக கண் மருத்துவத் துறையை தமது சிந்தனைகளுக்கு ஏற்றவாறு மாற்றத்தொடங்கினார். மருத்துவமனைகளுக்கு வரும் கண் நோயாளிகளுக்குச் சிகிச்சை தருவதில் அவருக்கு திருப்தி கிட்டவில்லை. ஆயிரமாயிரம் கண் நோயாளிகள், கிராமங்களில் வழி அறியாது தவித்து வந்ததை உணர்ந்தார். அவர்களைத் தேடி கண் மருத்துவர்கள் ஏன் அவர்கள் இருக்கும் இடத்திற்கே செல்லக்கூடாது என யோசித்தார்.

மருத்துவச் சேவை தேவைப்படுவோரைத் தேடிச் சென்று பணி செய்வதே டாக்டர் வெங்கடசாமி ஸ்பெஷல். அந்த வகையில் 1961-ம் ஆண்டு கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில் தனது முதல் கிராமியக் கண் மருத்துவ முகாமை நடத்தினார். அவரது கண் மருத்துவ வரலாற்றில் அது பிரதான மைல்கல்லாக அமைந்தது. மருத்துவமனைக்கு வர வாய்ப்பில்லாத ஆயிரக்கணக்கான மக்கள் அந்த முகாமுக்கு வந்து அவரது மருத்துவச் சேவையால் பயன்பெற்றனர். சுமார் 350 கண் மருத்துவ அறுவைசிகிச்சைகள் அந்த முகாமில் வெற்றிகரமாக நடைபெற்றன. அன்றைய காலகட்டத்தில் அது மிகப் பெரிய சாதனை.

அடுத்த 15 ஆண்டுகளில், கிராமியக் கண் மருத்துவ சேவையில் பல பரிசோதனை முயற்சிகளையும் தலைகீழ் மாற்றங்களையும் டாக்டர் வெங்கடசாமி நிகழ்த்தினார். தேசிய அளவிலும், உலக அளவிலும் அறியப்பட்ட கண் மருத்துவரானார். தனது சேவைக்காக 1973 ஆம் ஆண்டு இந்திய அரசின் பெருமைக்குரிய பத்மஸ்ரீ விருதையும் பெற்றார்.

டாக்டர் வெங்கடசாமியின் பணிகளின் தாக்கம் இந்தியாவுடன் நின்றுவிடவில்லை. உலகெங்கும் அது பரவியுள்ளது. 1992-ம் ஆண்டு அவர் தொடங்கிய லயன் அரவிந்த் சர்வதேச சமூகக் கண் மருத்துவ நிறுவனம் (LAICO) ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் புதிய கண் மருத்துவமனைகளைத் தொடங்குவதற்குப் பெரும் உதவிகளைச் செய்துவருகிறது. சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இங்கு பயிற்சிபெற்றுள்ளனர். லைகோ-வின் உதவியுடன் சுமார் 400 கண் மருத்துவமனைகள் முப்பது நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளன. மூன்றாம் உலக நாடுகளின் மருத்துவமனைகள், முதல் உலக நாடுகளின் மருத்துவமனைகளை விஞ்ச முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் கூடிய தகுதியை லைகோ வழங்கிவருகிறது.

டாக்டர் வெங்கடசாமி தொடங்கிய ‘ஆரோ லேப்’ மூன்றாம் உலக நாடுகளுக்குச் செய்த பணி வியக்கத்தக்கது. கண் அறுவைசிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் உள்விழி லென்ஸ்களை சர்வதேச வணிக நிறுவனங்கள் எட்டாத விலையில் விற்றுவந்தன. ‘ஆரோ லேப்’ அதை மிகக் குறைந்த விலையில் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. எல்லோருக்கும் கட்டுப்படியாகும் விலையில் மிகச் சிறந்த லென்ஸ்களை ‘ஆரோ லேப்’ தயார் செய்து உலகெங்கும் அனுப்பிவருகிறது.

ஹார்வர்டு, ஸ்டான்ஃபோர்டு போன்ற பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சிக் களமாகவும், ஆய்வுக் களமாகவும் அரவிந்த் திகழ்கிறது. அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் பயிற்சிபெறுவதற்காக அரவிந்த் மருத்துவ நிறுவனத்துக்கு மருத்துவர்கள் வருகின்றனர். சமீபத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மேலாண்மை இதழ், அரவிந்த் மருத்துவமனையின் சேவையை 21-வது நூற்றாண்டின் மிகச் சிறந்த சாதனைகளில் ஒன்று எனக் குறிப்பிட்டிருக்கிறது.

2006 ஆம் ஆண்டில் டாக்டர் வெங்கடசாமி மறைந்தபோதிலும், அவரது அரிய உழைப்பால் அவர் நிறுவிய அரவிந்த் கண்மருத்துவமனை குழுமங்கள் வாயிலாக உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான ஏழை எளியவர்கள் இன்றும் தொடர்ந்து பயன்பெற்றுவருகின்றனர். உலகக் கண் மருத்துவத் துறைக்கே வெளிச்சம் பாய்ச்சும் ஒளிவிளக்காக டாக்டர் வெங்கடசாமி திகழ்கிறார்!

இளமை முதலே மிகச்சிறந்த காந்தியப் பற்றாளராகவும், பாண்டிச்சேரி அரவிந்தர் மற்றும் அன்னையின் சீடராகவும் திகழ்ந்து வந்த டாக்டர் வெங்கடசாமிக்கு சுவாமி விவேகானந்தரின் செயலூக்கக் கருத்துக்களின் பால் மிகச்சிறந்த தாக்கம் உண்டு. எனவே தான் அவர் தாம் நிறுவிய சமூகக் கண் மருத்துவமனைக் குழுமத்துக்கு அரவிந்த் என்று பெயரிட்டு அச்சேவையை இன்று வரை தொடரும் வகையில் வழிவகை செய்திருக்கிறார். இன்று டாக்டர் வெங்கடசாமி விட்டுச் சென்ற நற்பணியை அவரது சகோதர சகோதரிகள் சிரமேற்கொண்டு நடத்தி வருகின்றனர்.

டாக்டர் வெங்கடசாமியை இந்தியக் கண்மருத்துவ உலகம் மட்டுமல்ல, உலக கண்மருத்துவ சிகிச்சைத் துறையும் கூட டாக்டர் ‘வி’  இஸ் மை ஹீரோ என்கிற ரீதியில் கொண்டாடுகிறது. சர்வ தேச அளவில் புகழீட்டுபவர்களுக்கு டூடுல் வெளியிட்டுச் சிறப்பிக்கும் பழக்கம் கொண்ட கூகுள்... அந்த வரிசையில் இன்று டாக்டர் வி க்கும் கூகுள் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

டாக்டர் வி யின் பொன்மொழிகள்...

நன்றி
விக்கிபீடியா
முனைவர் ரகுபதி
மை ஹீரோ ஸ்டோரீஸ் டேவிட் கெம்கேர்
 

Tags : கூகுள் டூடுல் பத்மஸ்ரீ DOCTOR 'V'. ARAVINDH EYE HOSPITALS AUROLAB LAICO DOCTOR KOVINDAPPA VENKATASWAMY 100TH BIRTHDAY GOOGLE TOODLE டாக்டர் ‘வி’ டாக்டர் கோவிந்தப்ப வெங்கடசாமி அரவிந்த் கண்மருத்துவமனை 100 வது பிறந்தநாள் GOOGLE DOODL

More from the section

கேது - சனி சேர்க்கை நல்லதா கெட்டதா? மீள்வது எப்படி? 
சிக்கராயபுரம் கல்குவாரிகளில் குடிநீர் எடுக்கும் பணி தொடக்கம் : சென்னைக்கு ஓரிரு நாளில் விநியோகம்
ராகங்களை பாடலாக பாட முடியும்; புத்தகங்களாக வெளியிட முடியாது
மருந்து தரக் கட்டுப்பாட்டு வரம்புக்குள் எம்ஆர்ஐ, சி.டி.ஸ்கேன்: மத்திய அரசு திட்டம்
இன்னும் 100 நாள்கள்: ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 2019