திங்கள்கிழமை 25 மார்ச் 2019

திமுக தலைமைக்கு ஒரு வேண்டுகோள்!

By - சாது ஸ்ரீராம்| Published: 22nd February 2019 05:49 PM


தேர்தல் களைகட்டத் துவங்கிவிட்டது. யார் யாருடன் கூட்டு சேர்வது, யாரெல்லாம் துரோகிகள், யாரெல்லாம் சந்தர்ப்பவாதிகள், யாரெல்லாம் ஏமாற்றுக்காரர்கள், யாரெல்லலம் சூடு சொரணைக்கு சொந்தக்காரர்கள், யாரிடம் இருப்பது உண்மையான திராவிடம்', என்று பல விஷயங்கள் அலசப்படுகின்றன. கூட்டணியை சூட்கேஸ், கோணிப்பை, சாக்கு முடிவு செய்கிறது என்று அடுத்தவரின் மீது சேற்றை வாரி இறைக்கும் செயலும் நடப்பதை பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகளை தலைவர்களின் அடிப்பொடியார்களும், தொண்டர்களுமே சொல்லி வந்தார்கள். இன்று பெரிய தலைவர்களே இத்தகைய குற்றச்சாட்டுகளை சொல்லும் அளவுக்கு அரசியல் களம் புழுதியை கிளப்பியிருக்கிறது. மிகத் தெளிவாக புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், எல்லாக் கட்சிகளுக்கும் தேர்தல் களத்தில் வெற்றிபெற வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஒரே கொள்கையைத் தவிர வேறு கொள்கைகள் இருப்பதாகத் தெரியவில்லை. இவர்களின் பேச்சை மக்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை. ஒருவரை மடக்க அவரிடம் காணப்படும் ஓட்டைகளை சுட்டிக்காட்டினால், அவர் இவரின் சல்லடை கண்களை சுட்டிக்காட்டுகிறார். மொத்தத்தில் வெற்று வார்த்தை ஜாலங்களால் தமிழக அரசியல் களம் நிரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஒருபுறம் கூட்டணி பேச்சுக்கள் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் தேர்தல் அறிக்கை தயாரித்தல் என்ற சம்பிரதாயத்திற்கு கட்சிகள் தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றன. திமுக இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக மக்களிடமே தேர்தல் அறிக்கை தயாரிக்க கருத்து கேட்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதற்காக ஒரு மின்னஞ்சல் முகவரியும் கொடுத்துள்ளது. மக்கள் நேரடியாக தங்கள் யோசனைகளை அந்த முகவரியில் தெரிவிக்கலாம். இது நல்ல முயற்சியா? உண்மையிலேயே மக்களின் கருத்துக்கள் அந்த அறிக்கையில் இடம் பிடிக்கிறதா? என்பது தேர்தல் அறிக்கை வெளிவரும்போது மட்டுமே தெரியும். இருந்தாலும், ஒரு சாமனியனின் மனக்குமுறலை இந்த தருணத்தில் வெளிப்படுத்தி, அதை திமுகவின் கவனத்துக்கு கொண்டு செல்வது அவசியம்.

நிறைய மாற்றங்களை திமுக தன்னிடம் கொண்டு வரவேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய மாற்றங்களை நடைமுறைப்படுத்த ஆட்சிக்கு வரவேண்டிய அவசியமில்லை. தலைமையின் மனமாற்றம் ஒன்றே போதும்.

மற்ற மதத்தவரை மதத்தின் பெயரால் ஏற்றுக்கொண்ட போது, இந்துக்களை மட்டும் எதிர்ப்பதை இந்துக்கள் விரும்புவதில்லை. ஆகையால் இந்து எதிர்ப்பு சிந்தனைகளை கைவிடுங்கள்.

எப்படி இஸ்லாமியர் மற்றும் கிருஸ்தவர் கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்பிக்கிறீர்களோ, அதே போல இந்துக்களின் விழாக்களிலும் கலந்துகொள்ளுங்கள். கொழுக்கட்டை சாப்பிடுங்கள்.

நாத்திகம் என்ற வார்த்தை இந்து மதத்திற்காக மட்டும் வடிவமைக்கப்பட்டதல்ல. நாத்திக கருத்துக்களை பகிர்வதை நிறுத்துங்கள். நாத்திகம் சார்ந்தவர்கள் தங்கள் கட்சி மேடைகளை அலங்கரிப்பதை தடுத்து நிறுத்துங்கள். கடவுள் இல்லை என்பது ஒருவகை, இது நாத்திகம். கடவுளை எனக்குப் பிடிக்காது என்ற கருத்து மற்றொரு வகை. ஆனால், இதையும் நாத்திகம் என்று சொல்பவர்களே அதிகம். நாத்திகம் ஒரு கொள்கையல்ல. அது ஒரு பழக்கம். எப்படி பலர் அசைவ உணவு சாப்பிடுவதில்லையோ, அப்படித்தான் நாத்திகமும். இது முழுக்க முழுக்க ஒரு பழக்கம். இதை கொள்கை என்று பேசி குழப்பத்தை ஏற்படுத்துவது அறியாமை.

இந்து மதத்தின் ஒரு பிரிவினரான “பிராமணர்களை” சாதியின் பெயரால் இழிவுபடுத்துவதை தடுத்து நிறுத்துங்கள். எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய கதைகளை இன்றும் பேசுவதில் அர்த்தமில்லை. பிராமண எதிர்ப்பு காலாவதியான ஆயுதம். உங்களைப் போன்ற தலைவர்கள் பிராமணர்களை இழிவுபடுத்தி பேசுவதால், உங்களை மகிழ்விக்க தொண்டர்களும் இந்த இழிவு நிலையைத் தொடர்கிறார்கள். திமுக தலைவர் அவர்களே! நீங்கள் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியிருக்கிறீர்கள். துணை முதல்வராகவும் இருந்திருக்கிறீர்கள். நாளை முதல்வராக ஆகலாம், ஏன் இந்த நாட்டு பிரதமராகக்கூட ஆகலாம். காலம் யாரை எந்த இடத்தில் அமரவைக்கும் என்பதை யாரும் இன்றே சொல்லிவிட முடியாது. அப்படிப்பட்ட ஒருவர், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தொடர்ந்து அசிங்கப்படுத்துவது சரியா? அவர்களுக்கும் சேர்த்துத்தானே நீங்கள் ஆட்சி நடத்த முடியும்?

தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதை.

ஒரு அரசன். இரவு நேரத்தில் மாடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஆந்தை அவனருகே வந்தது.

‘அரசே! நலமா', என்றது ஆந்தை.

‘நான் நலமாகத்தான் இருக்கிறேன்! என்னுடைய ஆட்சியும் சிறப்பாக நடைபெறுகிறது. என்னுடைய நலத்திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்', என்றான் அரசன்.

அரசே! மன்னிக்க வேண்டும். நீங்கள் பல திட்டங்களை மக்களுக்கு செய்கிறீர்கள். ஆனால், அவை உண்மையிலேயே மக்களுக்கு நன்மையளிக்கிறதா? என்று கேட்டால் ‘இல்லை' என்றுதான் பதில் கிடைக்கும். உங்களுக்கு நல்லது என்று தோன்றும் திட்டங்களை விட, மக்கள் தங்களுக்கு நல்லது என்று நினைக்கும் திட்டங்களை செயல்படுத்துங்கள்', என்றது ஆந்தை.

‘அப்படியென்றால், என் திட்டங்கள் பயனளிக்கவில்லை என்று சொல்கிறாயா?'

‘அரசே! இதற்கு பதில் எனக்கு தெரியாது, உங்களுக்கும் தெரியாது. உண்மை நிலையை அறிய மக்களிடமே கருத்துக்களை கேட்டு அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுங்கள்', என்று சொல்லிவிட்டு பறந்தது ஆந்தை.

உடனே சாதுவை அழைத்தார். ஆந்தை சொன்ன விஷயத்தை சொன்னார். இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். அதன்படி, கழுதைகளின் முதுகில் சாக்குப்பைகளை தொங்கவிட்டனர். அதை நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் அனுப்பினார். மக்களுக்கு மகிழ்ச்சி. தங்களது குறைகளை ஓலைச் சுவடியில் எழுதி கழுதை மேல் போர்த்தப்பட்ட சாக்குப் பையில் போட்டனர். இனி நம் பிரச்னைகளை அரசன் தீர்த்துவைப்பான் என்ற நம்பிக்கையோடு புறப்பட்டனர். சாக்குப் பைகள் நிரம்பி வழிந்தன. அன்றிரவு மீண்டும் அரசனை சந்தித்தது ஆந்தை.

‘ஆந்தையே! உன்னைப் போலவே சாதுவும் நல்லவர். அவர் யோசனைப் படி சாக்குப் பை திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறேன். இனி மக்களுக்கு எது நல்லதோ அது அவர்களை சென்றடையும்', என்று சொன்னான் அரசன். மகிழ்ச்சியோடு பறந்தது ஆந்தை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு கழுதைகள் அரண்மனை வந்து சேர்ந்தன. அரசனின் முன்பாக சாக்குப் பைகள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு பைகளாக சோதித்தான் அரசன். எல்லாப் பைகளும் காலியாக இருந்தன. அரசனுக்கு எதுவும் புரியவில்லை. பக்கத்தில் இருந்த மந்திரியை பார்த்தார்.

‘அரசே! மக்களுக்கு எந்த குறையுமில்லை. நமது திட்டங்களை அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இதைத்தான் இந்தக் காலி பைகள் நமக்கு உணர்த்துகின்றன', என்றார் மந்திரி.

அப்போது பக்கத்தில் இருந்த சாது பேசினார்.

‘அரசே! இந்த பையில் ஒரே ஒரு தகடு மட்டுமே இருக்கிறது', என்று சொல்லி ஒரு தகட்டை அரசனிடம் நீட்டினார் சாது. அதில் ஏதோ சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. அதை படித்தான் அரசன். அதில், ‘இரும்புத் தகட்டை கழுதைகள் திண்பதில்லை', என்று எழுதப்பட்டிருந்தது.

‘இதற்கு என்ன அர்த்தம்', என்று கேட்டான் அரசன்.

‘இது மக்கள் பிரச்னையைப் பற்றியது அல்ல. கழுதையின் பிரச்னையைப் பற்றியது. பகல் குருடனான ஆந்தையின் பேச்சைக் கேட்டு நமது ஆட்சியையே சந்தேகப்பட்டுவிட்டீர்களே அரசே!', என்றார் மந்திரி.

எதுவும் பேசாமல் நகர்ந்தான் அரசன். அன்று இரவு அரசனை சந்தித்தது ஆந்தை.

‘ஆந்தையே! பகல் குருடனான உன் பேச்சைக்கேட்டு என் ஆட்சியை நானே சந்தேகப்பட்டுவிட்டேன். மக்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். இனி மீண்டும் என் கண் முன்னால் வராதே', என்று கோபத்தில் கத்தினான் அரசன்.

‘அரசே! உண்மையைச் சொல்ல நினைத்த நானும் நல்லவன். உண்மையை உணர்த்த நினைத்த சாதுவும் நல்லவர். உண்மையை தெரிந்துகொள்ள நினைத்த நீங்களும் நல்லவர். என்ன செய்வது! மக்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை எழுதுவார்கள் என்று நினைத்தேன். அவர்களோ, கழுதைக்கு பிடித்தமான ஓலைச்சுவடியில் எழுதிவிட்டார்கள். நீங்கள் சொன்னது போல நான் பகல் குருடன். ஆனால், நீங்களோ முழுநேரக் குருடர். தகட்டை படிக்க மட்டுமே கடவுள் உங்களுக்கு பார்வையை வழங்கியிருக்கிறார். பார்க்கும் பார்வைகள் குருட்டுத்தனத்தை நிர்ணயிப்பதில்லை. புரிதலும், செயல்களுமே நிர்ணயிக்கின்றது', என்று சொல்லிவிட்டு பறந்தது ஆந்தை.

இந்தக் கதை நமக்கு உணர்த்தும் ஒரே விஷயம், மக்களின் உண்மையான குறைகளையோ, எதிர்பார்ப்புகளையோ அரசியல் நடவடிக்கைகள் பூர்த்தி செய்வதில்லை. தகட்டில் எழுதி கண்முன்னே நீட்டினாலும், அதை புறக்கணிக்கும் அரசியல்வாதிகள் இருக்கும்வரை, தேர்தல் அறிக்கைகள் எல்லாம் ஒருபக்க காகிதங்களே!

திமுக தலைமைக்கு ஒரு வேண்டுகோள். இந்த நிலையை மாற்றுங்கள். உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.

உங்கள் தேர்தல் அறிக்கையில் கீழ்கண்ட கோரிக்கைகள் இடம் பெறவேண்டும் என்பது இந்துக்களின் எதிர்பார்ப்பு.

ஆட்சியாளர்களுக்கு நல்லது என்று தோன்றுவது மக்களுக்கு நல்லதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் எதை நல்லது என்று நினைக்கிறார்களோ, அதைச் செய்வதுதான் சிறந்த அரசனின் கடமை.

இந்த கோரிக்கைகளை திமுக தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும். இது திமுகவிற்கு மட்டுமல்ல நாத்திகத்தையும், இந்து எதிர்ப்பையும் ஆயுதமாகக்கொண்ட எல்லாக் கட்சிகளும் இந்த கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். இது கோரிக்கைகள் மட்டுமல்ல, தேர்தல் வெற்றி தோல்விகளைத் தாண்டி மனிதத்துக்கு கொடுக்கும் ஒரு மரியாதை. இதை அரசியல் கட்சிகள் விரைவில் புரிந்துகொள்ளும்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com

More from the section

பெண்களுக்கு எட்டாத உயரத்தில் தொடர்ந்து நீடிக்கும் தமிழக அரசியல் ஏணி!
Mr. ரஜினி, Mr. மு.க. அழகிரி எங்கே இருக்கீங்க.. களத்துல இறங்கி குரல் கொடுங்க!
அலுவலக ஆண்களை, பெண்கள் நெருங்கிய உறவுகளாகப் பாவிக்க வேண்டிய அவசியமில்லை: திலகவதி ஐபிஎஸ்! 
பொள்ளாச்சி சம்பவத்துக்கு காரணம் என்ன? திலகவதி ஐபிஎஸ் அதிர்ச்சித் தகவல்
கோடை காலத்துக்காக இல்லை என்றால் கூட தேர்தலுக்காகவாவது இதை செய்யுமா மாநில அரசு?