சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

பினராயி விஜயனின் விஷக்காமெடி: உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான புளுகு பட்டியல்!

By -சாது ஸ்ரீராம்| Published: 22nd January 2019 11:46 AM

 

சபரிமலை விவகாரத்தில் உலகமே கொதித்துப் போய் இருப்பது நமக்கெல்லாம் தெரியும். சமீபத்தில் கேரள அரசு ஒரு ‘விஷக்காமெடி' செய்துள்ளது. ‘இதுவரை 10லிருந்து 50வயதிற்குட்பட்ட 51 பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்திருக்கிறார்கள்', என்று ஒரு புளுகு பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. இதில் 24 பெண்கள் தமிழகத்திலிருந்தும், 21 பெண்கள் ஆந்திரத்திலிருந்தும், 3 பெண்கள் கோவாவிலிருந்தும், கர்நாடகா, பாண்டிச்சேரியிலிருந்து தலா ஒரு பெண்ணும் தரிசனம் செய்திருப்பதாக அந்த பட்டியல் சொல்கிறது. இப்போது எதற்கு இந்த பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது?

கடந்த ஜனவரி 2 அன்று, கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இரண்டு பெண்களும் கள்ளப்பயணம் செய்து ஐய்யப்ப தரிசனம் செய்தனர் என்பது நமக்குத் தெரியும். இவர்களின் தரிசனத்திற்காக சட்டங்களையெல்லாம் மீறி கேரள அரசு அவர்களுக்கு உதவியது என்பதும் நமக்குத் தெரியும்.

வெற்றிகரமாக கள்ளப் பயணம் செய்து தரிசனத்தை முடித்த இரண்டு பெண்களையும் பாதுகாப்பு கருதி வீட்டுக்கு அனுப்பாமல் போலீஸ் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் நுழைந்ததும், சபரிமலை சென்றது தொடர்பாக கனகதுர்காவுக்கும், அவர் மாமியாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். கனகதுர்காவை மாமியார் சுமதியம்மா தாக்கியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கனகதுர்காவும், பிந்துவும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் 24 மணி நேர பாதுகாப்பு வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சபரிமலையில் 10 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்ட 51 பெண்கள் இதுவரை தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு ஒரு பட்டியலை சமர்ப்பித்தது. இந்த பட்டியலே தற்போது பல தரப்பிலிருந்தும் விமர்சனங்களை பெற்று வருகிறது. நீதிமன்ற விசாரணையின் முடிவில், கடந்த 18ம் தேதி, பிந்து மற்றும் கனகதுர்காவிற்கு 24 மணி நேர பாதுகாப்பு அளிக்கும்படி உத்தரவிட்டது.

‘10லிருந்து 50வயதிற்குட்பட்ட 51 பெண்கள் எந்த பிரச்னையுமின்றி தரிசனம் செய்துள்ளனர். ஆகையால் இத்தகைய பெண்கள் தரிசனம் செய்வதை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று உச்ச நீதிமன்றத்தை நம்பவைப்பதே பட்டியலை சமர்ப்பித்ததின் நோக்கமாக இருக்குமோ என்று நமக்கு தோன்றுகிறது. ஆனால், அந்த பட்டியலின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் போதுதான் அந்த பட்டியல் ஒரு காமெடி என்று தெரியவந்தது. சாதாரண காமெடியல்ல, விஷக்காமெடி.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். பட்டியலில் முதலாவதாக இடம் பெற்ற பெயர் ‘பத்மாவதி'. இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் வயது 48 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அவருக்கு வயது 55.

24ம் வரிசை எண்ணிற்கு எதிராக குறிப்பிட்ட பெயர் ‘ஷீலா'. இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவருடைய வயது 48 என்று பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவருடைய உண்மையான வயது 52.

கோவாவைச் சேர்ந்த கலாவதி மனோகர் என்பவருக்கு வயது 51. தவறுதலாக 43 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பதிவின் போது தவறுதலாக குறிப்பிடப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

வரிசை எண். 42ல் தேவசிகாமணி, பெண், வயது 42 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் பெண்ணல்ல, ஆண்.

வரிசை எண். 49ல் கெளரி ஆறுமுகம், பெண், வயது 49 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட எண்ணுக்குச் சொந்தமானவர் ஒரு ஆண். அவர் பெயர் ராஜேஷ். அவர் பெங்களூரில் வசிக்கிறார்.

வரிசை எண். 41ல் சந்திரா. எஸ். பெண். வயது 48 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். ஆனால், நிஜத்தில் இவருக்கு வயது 63.

புதுச்சேரியைச் சேர்ந்த சங்கர் என்ற டிரைவரின் எண்ணிற்கு எதிராக கலாவதி என்ற பெண் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மாயாண்டி கடந்த டிசம்பர் மாதம் சபரிமலை சென்றிருந்தார். அவருடைய எண்ணிற்கு எதிராக ‘கலா' என்ற பெண் பெயர் இடம் பெற்றுள்ளது.

மதுரையைச் சேர்ந்த புஷ்பம் என்ற பெண் பக்தர் கடந்த எட்டு ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வருகிறார். அவரது வயது 63. ஆனால், பட்டியலில் 43 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஆதார் அட்டையில் தவறாக வயது குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் என் அம்மாவின் வயது 63', என்று அவர் மகன் தற்போது தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 27 அன்று தரிசனம் செய்த பரஞ்சோதி என்ற ஆண், பதிவின் போது தவறுதலாக ‘பெண்' என்று குறிப்பிட்டுள்ளார். அவரும் தரிசனம் செய்து முடித்துவிட்டார்.

ஒரு ஆண் பக்தர் தனது பாலினத்தை பெண் என்று தவறுதலாக குறிப்பிட்டுள்ளார் என்று வைத்துக்கொள்வோம். கோவிலின் நுழை வாயிலில் இந்தத் தவறை எப்படி அனுமதிக்கிறார்கள்? இப்படிப்பட்ட செயல்கள் பாதுகாப்பு குறைபாடாக தெரியவில்லையா? பாதுகாப்பு விஷயங்களில் இத்தனை ஓட்டை உடைசலான அமைப்பாகவா சபரிமலை தரிசனம் இருக்கிறது? திருப்பதியில் இப்படி ஒருவர் தரிசனத்துக்குச் சென்றால், அவரை தரிசனத்திற்கு அனுமதிப்பார்களா?

ஒரு ஆணை, ‘பெண்' என்று குறிப்பிட்டு தரிசனத்திற்கு அனுப்பிவிட்டு பின்னாளில் இவ்வளவு பெண்கள் தரிசனம் செய்தார்கள் என்று அறிக்கை வெளியிட இத்தகைய ஏற்பாடுகளை கேரள அரசு செய்திருக்காது என்று எப்படி நம்புவது? அதற்கு ஒரு முன்னோட்டமாகக்கூட இந்த பட்டியல் இருந்திருக்கலாம்.

கேரள அரசின் செயல்பாடுகளிலிருந்து இரண்டு விஷயங்களை நாம் அனுமானிக்க முடிகிறது. ஒன்று, உச்ச நீதிமன்றத்தின் மீது அதற்கு மரியாதையோ, பயமோ இல்லை. அடுத்ததாக, அதன் இந்து எதிர்ப்பு கொள்கை.

உச்ச நீதிமன்றத்தின் மீது பயமோ, மரியாதையோ இருந்திருந்தால், சமர்ப்பிக்கும் ஆவணங்களில் இவ்வளவு தவறுகள் இருந்திருக்குமா? நாம் கொடுக்கும் ஆவணங்களை அப்படியே நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும் என்று நினைக்கிறதா கேரள அரசு? அல்லது மற்றவர்களும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறதா? இப்படிப்பட்ட தவறான தகவல்களை கொடுத்தால், அது தண்டிக்கப்படுவதில்லை என்ற தைரியமே இந்த புளுகு பட்டியலுக்கு காரணம். மிஞ்சிப்போனால் நீதிமன்றம் ஒரு கண்டனம் தெரிவிக்கும், அவ்வளவுதான். துடைத்தெறிந்துவிட்டு போய்விடுவோம் என்ற கேரள நினைக்கிறதோ!

அடுத்ததாக, கேரள அரசின் இந்து எதிர்ப்பு கொள்கை. எதையாவது செய்து இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்பதையே கேரள அரசு செய்து கொண்டிருக்கிறது. தொடக்க காலத்திலிருந்து இந்த வழக்கு தொடர்பான விவரங்களை படித்தால் இடதுசாரி அரசின் இந்து எதிர்ப்பை புரிந்துகொள்ள முடியும்.

கேரள அரசே! உங்களுக்கு பாஜகவை பிடிக்கவில்லை அதற்காக அவர்களை வெறுப்பேற்றுவதாக நினைத்துக்கொண்டு இந்துக்களின் நம்பிக்கைகளில் விளையாடிக்கொண்டிருக்கிறீர்கள்.

தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதையை படிப்போம்.

ஒரு அரசன். சாப்பிடும் போது கீரையுடன் சேர்த்து விஷச் செடியையும் சாப்பிட்டுவிட்டான். வாயில் நுரைதள்ள மயங்கிவிழுந்தான். விரைந்து வந்த சாது அவனுக்கு விஷமுறிவு மூளிகையை கொடுத்தார். அரசன் பிழைத்துக் கொண்டான். அரசியை அழைத்து பேசினார் சாது.

‘அரசியே! அரசன் பிழைத்துக் கொண்டான். ஆனால் இனிமேல்தான் பிரச்னையே! விஷத்திலிருந்து அரசன் உயிரை மட்டுமே காப்பாற்றினேன். விஷம் அவனுடைய சிந்தனை, செயல், மூளை ஆகியவற்றில் கலந்துவிட்டது. இனி அவன் ஏட்டிக்குப்போட்டியாக நடந்துகொள்வான்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

சாது சொல்லியபடி அரசன் தாறுமாறாக சிந்திக்கத் தொடங்கினான். அதன் ஒரு பகுதியாக பசுக்களை வெறுத்தான். அரண்மனை வைத்தியர்களை அழைத்தான்.

‘வைத்தியர்களே! பசுக்களை மக்கள் வெறுக்க வேண்டும். அதற்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். அதன்படி, நான் சாப்பிட்ட விஷச் செடியை நாட்டில் உள்ள எல்லா பசுக்களுக்கும் கொடுங்கள். பிறகு, என்னை பிழைக்கச் செய்த மூலிகையையும் கொடுங்கள். முதலில் பசுவின் உடலில் விஷம் கலக்கும். அதே நேரத்தில் மூலிகை அவற்றை சாகாமல் காப்பாற்றும். ஆனால், அதன் பால் விஷமாகிவிடும். அதன் சிந்தனை, செயல் ஆகிய எல்லாம் விஷமாகிவிடும். அதன் பாலை சாப்பிடும் மக்கள் இறந்துவிடுவார்கள். இதனால் பசுக்களை மக்கள் வெறுப்பார்கள். கொல்வார்கள். நாளடைவில் பசுக்களின் இனமே அழிந்துவிடும்', என்றான் அரசன்.

வைத்தியர்கள் அமைதியாக கேட்டனர். மீண்டும் அரசன் பேசினான்.

‘ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். பசுக்களை நான் கொல்லவில்லை. பசுக்களுக்கு விஷமுறிவு மூளிகையை கொடுத்து அவற்றை காப்பாற்றியே இருக்கிறேன். அதனால் எனக்கும் எந்த பாவமும் சேராது, உங்களுக்கும் பாவம் சேராது. இது பரமரகசியம். ஜாக்கிரதை', என்று எச்சரித்தான் அரசன்.

அரசனின் ஆணைப்படி நாட்டில் உள்ள பசுக்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டது. அதோடு விஷமுறிவு மூளிகையும் கொடுக்கப்பட்டது. அரசன் எதிர்பார்த்தது போலவே பசுக்களுக்கு உயிர் போகவில்லை. ஆனால், விஷத்தின் வீரியத்தால் பசுக்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகின.

எதுவும் தெரியாத மக்கள் வழக்கம் போல பசுக்களிடமிருந்து பாலை கறந்து குடித்தனர். அடுத்த நாள் விடிந்தது. மக்கள் பலர் இறந்த செய்திக்காக காத்திருந்தான் அரசன். ஆனால், அவன் எதிர்பார்த்தது நடக்கவில்லை. பாலைக் குடித்த யாரும் இறக்கவில்லை. அரசனுக்கு எதுவும் புரியவில்லை. சாது அங்கு வந்தார்.

‘அரசே! நீ நினைத்தது போல பசுக்களின் பாலில் விஷம் கலக்கவில்லை. விஷத்தையே உணவாகக் கொடுத்தாலும், விஷத்தை தான் கிரஹித்துக் கொண்டு சுத்தமான பாலை கொடுக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. விஷத்தினால் உயிரை விட்டாலும் விடுமே தவிர, ஒரு போதும் தன்னுடைய பாலை விஷமாக அது மாற்றாது. அதனால் தான் அவை புனிதமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் மற்றொரு உண்மையையும் தெரிந்துகொள். உன் உடலில் விஷம் கலந்தது, அதை மூளிகையால் சரி செய்தேன். ஆனால், உன் சிந்தனை, செயல் ஆகியவற்றில் விஷம் கலந்துவிட்டது என்று நான் சொன்னது பொய். அந்தப் பொய் உன்னிடம் ஒளிந்திருந்த கெட்ட எண்ணத்தை வெளியே கொண்டுவந்துள்ளது. விஷம் ஒரு உயிரை மட்டுமே அழிக்கும். விஷ சிந்தனை உலகத்தையே அழிக்கும். இதற்கு விஷமுறிவை மக்களே அளிப்பார்கள்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

இந்தக் கதையில் நாம் பார்க்கும் விஷ சிந்தனை கேரளத்தை ஆளும் இடதுசாரிகளுக்கு வந்துள்ளது. மதச்சார்பின்மை என்ற போர்வையில் இந்துக்களுக்கு எதிராக அரசையும், அரசு இயந்திரங்களையும் பயன்படுத்துகிறது. இந்துக்கள் பசுக்களைப் போன்றவர்கள். இவ்வளவு காலமாக விஷத்தை தாங்கினோமே தவிர அதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கவில்லை. அந்த குணமும் எங்களிடமில்லை. நீங்கள் எத்தனை முறை விஷத்தை விதைத்தாலும் அவை எங்கள் சிந்தனையை விஷமாக்கப் போவதில்லை.

கேரள முதல்வர் அவர்களே! இந்த ஐம்பத்தியோறு பேர் கொண்ட பட்டியலில் உங்கள் வீட்டு பெண்கள் யாருமே இல்லையே! ஐய்யப்பன் மீது பயமா? அல்லது பக்தர்கள் மீது பயமா? அல்லது ஆழம் பார்க்க ஊரார் பிள்ளைகளை ஆற்றில் இறக்கிவிடுவோம் என்று கணக்குப்போடுகிறீர்களா?

இது புளுகு பட்டியல். இடதுசாரிகளின் பொய் மூட்டையிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பிள்கள்தான். இரண்டு பெண்களின் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகளை செய்யும் மாநில அரசு, இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு அதே பாதுகாப்பை அளிக்குமா? கேரள அரசின் தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன், '51 பெண்கள் அல்ல நிறைய பெண்கள் தரிசனம் செய்துள்ளனர்', என்று தன் பங்கிற்கு பெருமிதத்தோடு சொன்னார். அவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க முடியுமா?

ஒரு விஷயத்தை கேரள அரசு புரிந்துகொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அது தொடர்பாக ஒருமித்த கருத்தை எட்டும்வரை பிரச்னையை பொறுமையாக கையாளாமல் இந்துக்களின் மீது இருந்த வெறுப்பில் முரட்டுத்தனத்தனமாக சில யுக்திகளை கையாண்டுவிட்டீர்கள். இது சாதாரண சிக்கலை இடியாப்ப சிக்கலாக மாற்றிவிட்டது. தற்போது உங்களது இந்து எதிர்ப்பு கொள்கைகளுக்கு நீதிமன்றத்தை பகடைக்காயாக்க நினைக்கிறீர்கள். கேரள முதல்வர் திரு. பினராயி விஜயன் அவர்களே! கோவில்கள் பக்திக்கான இடம். புரட்சிக்கான இடமல்ல. உங்களுக்கு இந்துக்களை பிடிக்காமல் இருக்கலாம், இந்துக் கடவுள்களின் மீது நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். ஆனால் உச்ச நீதிமன்றத்திற்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தையும், மரியாதையை கொடுங்கள்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com

More from the section

மக்களவைத் தேர்தல் நேரத்தில் கொஞ்சம் இதைப் பற்றியும் பேசலாமா?
திமுக தலைமைக்கு ஒரு வேண்டுகோள்!
திஹேக் சர்வதேச நீதிமன்றம்... ஒரு அலசல்!
கடல் பசுக்களைப் பாதுகாக்க கடல் புற்கள் வளர்க்கத் திட்டம்
உதவி கோரி கைகளை நான் நீட்டியபோது, கை பிடித்து தூக்கிவிட்ட அவர்கள் !