வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

இயலாமை அல்ல, முயலாமை!

By ஆசிரியர்| Published: 07th July 2018 02:28 AM

ரஷியாவில் நடக்கும் கால்பந்துக்கான உலகக் கோப்பை போட்டிகள் கால் இறுதிச்சுற்றை அடைந்துவிட்டிருக்கும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் இல்லாமல் இல்லை. காட்சி ஊடகங்களின் பங்களிப்பால், இதுவரையில் கிரிக்கெட்டை மட்டுமே விளையாட்டாகக் கருதிவந்த இளைய தலைமுறையினர் பலர் கால் பந்தாட்டத்திலும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 
வெறும் 85 லட்சம் மக்கள்தொகையுள்ள நாடு ஸ்விட்சர்லாந்து. அந்த நாடு 10-ஆவது முறையாக உலக கால்பந்துக்கான போட்டியில் பங்கு பெறுகிறது. அதுமட்டுமல்ல, இந்த முறை சில வெற்றிகளையும் அடைந்திருக்கிறது. அதற்கு நேர்மாறாக 130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியா உலகக் கால்பந்து போட்டிக்கு தகுதி பெறவில்லை என்பது மட்டுமல்ல, உலக 
அளவில் கால்பந்து விளையாட்டில் 97-ஆவது இடத்தில்தான் இருக்கிறோம்.
இந்தியா கடைசி முறையாக உலகக் கோப்பை விளையாட்டுகளில் பங்கு பெற அழைக்கப்பட்டது 1950-இல். அப்போது பிரேஸிலில் நடந்த உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய அணி அழைக்கப்பட்டும்கூட, போட்டியில் பங்கு பெறச் செல்ல பண வசதியோ, அரசு நிதி ஒதுக்கீடோ இல்லாத காரணத்தால் இந்திய அணி அதில் கலந்துகொள்ளவில்லை. 
1948-இல் லண்டனில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில், காலில் அணிந்து கொள்ள ஷூ கூட இல்லாமல் வெறும் காலுடன் இந்திய கால்பந்தாட்ட அணியினர் கலந்து கொண்டனர். அவர்களுடைய ஆட்டத்தைப் பார்த்து இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் பிரமித்துப் போய்விட்டார். அந்தக் குழுவில் இடம்பெற்ற இந்திய வீரர் சைலேன் மன்னாவை அழைத்து அவரது கால்கள் இரும்பால் செய்யப்பட்டவையா என்று சோதித்துப் பார்த்ததாகக் கூறுவார்கள். 
1950-களிலும், 1960-களிலும் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் கண்காணிப்பில் இந்திய கால்பந்து அணி வலுவான ஆசிய அணியாகத் திகழ்ந்தது. சி.கே. பானர்ஜி, சுனில் கோஸ்வாமி, ஜர்னைல் சிங் ஆகிய கால்பந்தாட்ட வீரர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. அன்றைய ஆசிய கால்பந்து சாம்பியன்களான ஜப்பானையும் கொரியாவையும் வீழ்த்தி 1962 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. ஆனாலும்கூட, உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியை இந்தியா இன்று வரை பெறாமலேயே இருக்கிறது என்பதுதான் மிகப்பெரிய சோகம்.
இந்தியா ஏன் இந்த அளவுக்குக் கால்பந்து விளையாட்டில் பின்தங்கி இருக்கிறது என்பதற்கு, போதுமான கட்டமைப்பு வசதி உள்ள அரங்கங்கள், பயிற்சியாளர்கள் இல்லாமல் இருப்பது முக்கியமான காரணம். கிரிக்கெட் விளையாட்டுக்குத் தரப்படும் அளவுக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் இதர விளையாட்டுகளுக்கு கிடைக்காததும் முக்கியமான காரணம். பள்ளி அளவிலிருந்து இந்தப் புறக்கணிப்பு தொடங்குகிறது என்பதும், கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய அளவில் பணமும் ஊடக வெளிச்சமும் கிடைப்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.
சீனாவும் கால்பந்தாட்டத்தைப் பொருத்தவரை பின்தங்கிய நிலையில்தான் காணப்படுகிறது. நாம் 97-ஆவது இடத்தில் இருக்கிறோம் என்றால், அவர்கள் 75-ஆவது இடத்தில் இருக்கிறார்கள், அவ்வளவே. ஷட்டில், டேபிள் டென்னிஸ், தடகளம் உள்ளிட்ட தனி நபர் விளையாட்டுகளில் முன்னிலை வகிப்பதுபோல, பலர் கலந்துகொள்ளும் அணி விளையாட்டுகளில் சீனா எப்போதுமே முன்னிலை வகித்தது இல்லை. அந்த நிலையை மாற்றுவதற்கும் சர்வதேச அளவில் கால்பந்தாட்டத்திலும் சீனா முக்கியப் பங்கு வகிப்பதற்கும் இப்போதே அந்த நாடு முனைப்புடன் இறங்கியிருக்கிறது. 
2050-இல் உலகக் கோப்பைக்கான கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற இலக்குடன் சீனா அதற்கான வேலைகளைத் தொடங்கி விட்டிருக்கிறது. சீன அதிபர் ஷீ ஜின்பிங், 20,000 கால்பந்தாட்ட மையங்களையும், 70,000 கால் பந்தாட்ட மைதானங்களையும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்குவதற்கு ஆணையிட்டிருக்கிறார். உருகுவே உள்ளிட்ட நாடுகளைப் போல சீனாவிலும் பள்ளிக்கூட அளவிலிருந்து ஆயிரக்கணக்கான கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கும் முயற்சியில் சீனா ஏற்கெனவே இறங்கிவிட்டிருக்கிறது.
வெறும் மூன்றரை லட்சம் மக்கள்தொகை கொண்ட ஐஸ்லாந்து, சீனாவைப் போலவே அடிமட்ட அளவிலிருந்து கால்பந்தாட்டக் குழுக்களை உருவாக்கி உலகக் கோப்பையை இலக்காகக் கொண்டு 600 பயிற்சியாளர்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நாடுகள் எல்லாம் உலகக் கோப்பையைக் குறிவைத்து கால்பந்தாட்டத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த முற்படும்போது, நாம் மட்டும் இதில் கவனம் செலுத்தாமல் இருக்கிறோம் என்பது வேதனை அளிக்கிறது. 
2018 உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி தேசிய அளவில் இளைஞர் மத்தியில் கால்பந்தாட்டம் குறித்த ஆர்வத்தை தூண்டிவிட்டிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சிப் பெட்டிகளில் சர்வதேச வீரர்கள் விளையாடுவதை கண்டு களிக்கும் இளைஞர்கள், மைதானங்களில் கால்பந்தை உதைத்துக் களிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டிய தருணம் இது. சீனாவைப் போல இல்லாவிட்டாலும்கூட, மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் கால்பந்தாட்ட வீரர்களுக்கு ஊக்கமளித்து, அடுத்த உலகக் கோப்பையின்போதாவது அதில் பங்கு பெறும் அளவுக்கு இந்திய அணி தயாராகுமேயானால், அதுவே மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்!
 

More from the section

இளவரசரின் இந்திய விஜயம்!
கண்டனத்தால் ஆயிற்றா?
சுடவில்லையே தீ, ஏன்? 
புல்வாமா விடுக்கும் செய்தி...
நிறைவு தரவில்லை!