வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

அதிர்ச்சி தரும் அச்சுறுத்தல்!

By ஆசிரியர்| Published: 10th July 2018 01:38 AM

இந்த ஆண்டு கோடையில் தில்லி, சிம்லா, பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டன. ஹரியாணா மாநிலத்தின் சில பகுதிகளில் குடி தண்ணீருக்காகக் கலவரமே நடந்திருக்கிறது. தமிழகத்தில் பெரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும், குறித்த பருவத்தில் பாசனத்திற்கு நீர் கிடைக்காத அவலம் பல பகுதிகளில் காணப்பட்டது.
இமயமலையில் பனிச்சிகரங்கள் உருகுவதால் கங்கை, யமுனை, சிந்து உள்ளிட்ட பல ஜீவ நதிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த காலம் இப்போது மாறி வருகிறது. பருவ மழை மாற்றத்தாலும் அதிகரித்து வரும் வெப்பத்தாலும் இமயமலைச் சிகரங்களில் பனி படர்வது கடந்த சில ஆண்டுகளாகவே குறையத் தொடங்கி விட்டிருக்கிறது. இதன் தொடர் விளைவாக, ஒட்டுமொத்த இந்தியாவிலும் நிலத்தடி நீரின் அளவு குறையும் என்பதை நாம் உணர வேண்டும்.
இந்தியாவில் உள்ள எல்லா நதிகளிலும் தண்ணீரின் அளவு குறையத் தொடங்கியிருக்கிறது. அதிகரித்த வன அழிப்பு, நில அரிப்பு ஆகியவை மட்டுமல்லாமல், நதிகளிலிருந்து அளவுக்கு அதிகமாக ஆற்று மணல் எடுக்கப்படுவதும் பேராபத்தை நோக்கி நம்மை நகர்த்திக் கொண்டிருக்கிறது. இவற்றால் நிலத்தடி நீர் கணிசமாக குறையத் தொடங்கியிருக்கிறது. போதாக்குறைக்கு ரசாயனக் கழிவுகளும், நெகிழிக் கழிவுகளும் ஆறுகளையும் கடலையும்கூட மாசுபடுத்தி இருக்கின்றன. 
இன்னொரு அபாயகரமான பிரச்னை இந்தியாவில் உருவாகியிருப்பது இன்னும் பரவலான ஊடக வெளிச்சம் பெறாததும், அரசின் கவனத்தை ஈர்க்காததும் வியப்பளிக்கிறது. இந்தியா முழுவதும் நடத்தப்பட்டிருக்கின்ற பல்வேறு ஆய்வு முடிவுகளின்படி, அளவுக்கு அதிகமாக கால்ஷியம், மக்னீஷியம், சோடியம், நைட்ரேட், புளோரின் ஆகிய தாதுப் பொருள்கள் கலந்து, தண்ணீர் குடிப்பதற்குப் பாதுகாப்பற்றதாக மாறியிருக்கிறது. 16 மாநிலங்களில் தண்ணீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது அவற்றில் அளவுக்கு அதிகமாக யுரேனியம் கலந்திருப்பது தெரியவந்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மிகவும் ஆபத்தான ஆர்சினிக் சில பகுதிகளில் கலந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இவை மிகப்பெரிய ஆபத்துக்கான அறிகுறி.
சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையின்படி, வடமேற்கு, தெற்கு, தென்கிழக்கு இந்தியப் பகுதிகளில் எடுக்கப்பட்ட தண்ணீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது ஒரு லிட்டர் தண்ணீரில் 30 மைக்ரோ கிராம் அளவிலான உலோகம் மற்றும் தாதுப் பொருள்கள் காணப்பட்டன. உலக சுகாதார நிறுவனம் ஒரு லிட்டருக்கு 30 மைக்ரோ கிராம் என்பதுதான் மிக அதிகபட்ச அளவில் குடிநீரில் அனுமதிக்கப்பட்ட உலோக அளவு என்று கூறியிருப்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய தர நிர்ணய ஆணையம், தண்ணீரின் தரத்தை நிர்ணயிப்பதில் யுரேனியம் அளவு கணக்கிடப்படுவதில்லை. அதனால் அது குறித்து நாம் கவலைப்படாமலே இருந்து வந்திருக்கிறோம். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தண்ணீரில் யுரேனியம் கலந்திருப்பதால் இந்தியா முழுவதும் தண்ணீரில் அதிகரித்த யுரேனியம் இப்போது காணப்படுகிறது. சமீபத்தில் தென்னிந்தியாவில் நடத்திய பல்வேறு ஆய்வுகளில் குறைந்த அளவு லிட்டருக்கு 500 மைக்ரோ கிராமும், சில இடங்களில் அதிக அளவு லிட்டருக்கு 2,000 மைக்ரோ கிராமும் யுரேனியம் தண்ணீரில் காணப்பட்டது தெரியவந்திருக்கிறது. 
யுரேனியம் கலந்த தண்ணீர் சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இது குறித்து நாம் அவசர நடவடிக்கை மேற்கொண்டாக வேண்டும். யுரேனியமோ, வேறு உலோகங்களோ தண்ணீரில் அளவுக்கு அதிகமாக கலந்திருந்தால் அவை சிறுநீரகத்தை பாதிக்கும். இதற்கு யுரேனியத்தின் கதிர்வீச்சு மட்டும் காரணமல்ல, அதன் வேதியியல் தாக்கமும்கூட காரணம் என்று கூறப்படுகிறது. யுரேனியம் அதிக அளவில் சேர்வதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னவெல்லாம் என்பது இதுவரை தெளிவாகக் கண்டறியப்படவில்லை என்றாலும்கூட, அதிக அளவில் தண்ணீரில் யுரேனியம் இருக்கும் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் சில அதிர்ச்சித் தகவல்களை வெளிப்படுத்துகின்றன.
கடந்த 2005-க்கும், 2010-க்கும் இடையே நடத்தப்பட்ட ஆய்வில் 8,385 நோயாளிகளின் சிறுநீரக பாதிப்புக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் வசிக்கும் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, குடிநீரில் யுரேனியத்தின் அளவு மிக அதிகமாக இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே, அதிகரித்த தாதுமாசு குடிநீரில் கலப்பது சிறுநீரகம் உள்ளிட்ட பல உறுப்புகளை பாதிக்கக்கூடும் என்று கருத இடமிருக்கிறது.
சுற்றுச்சூழல் குறித்த ஆய்வு ஒன்று யுரேனியம் நிலத்தடி நீரில் எவ்வாறு கலக்கிறது என்பது குறித்து விரிவான சோதனைகள் நடத்தியது. அதில் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்
படும்போது, மிக ஆழத்தில் உள்ள யுரேனியம் காற்று மண்டலத் தொடர்பால் வெளியேறி தண்ணீரில் கலக்கத் தொடங்குகிறது என்பது உறுதிப்படுத்தப்படாத ஓர் ஆய்வு. 
ஆர்சினிக், யுரேனியம் உள்ளிட்டவற்றின் அளவு குடிநீரில் மேலும் அதிகரிக்கத் தொடங்கினால் அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து நாம் கவலைப்பட்டாக வேண்டும். அரசு மட்டுமல்லாமல், தனிப்பட்ட அளவிலும் பொது வெளியிலும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி காற்றுமாசைப் போலவே, நீர் மாசுபடுவதையும் குறைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளாவிட்டால், நமது வருங்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
 

More from the section

இளவரசரின் இந்திய விஜயம்!
கண்டனத்தால் ஆயிற்றா?
சுடவில்லையே தீ, ஏன்? 
புல்வாமா விடுக்கும் செய்தி...
நிறைவு தரவில்லை!