வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

வரவேற்கிறோம்!

By ஆசிரியர்| Published: 11th July 2018 01:59 AM

தமிழக சட்டப்பேரவை லோக் ஆயுக்த சட்ட மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் காரணமாக லோக் ஆயுக்த சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் நிறைவு நாளன்று, மீன் வளம், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயகுமாரால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றாலும்கூட, இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்பதை நாம் உணர வேண்டும். 
நாடாளுமன்றத்தில் லோக் பால் சட்டம் என்று பரவலாக அறியப்படும் ஊழலுக்கு எதிரான லோக் பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டம் 2013-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 2014-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதுவரை தமிழகம் உள்பட 16 மாநிலங்களில் மட்டும்தான் லோக் ஆயுக்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் லோக் பால் சட்டம் 2013-இல் நிறைவேற்றப்பட்டும்கூட, இதுநாள் வரையில் லோக் பால் நியமிக்கப்படாமல் முடக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 
ஊழலுக்கு எதிரான போராட்டம் இன்று நேற்று அல்ல, 1960 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1963-இல் நாடாளுமன்ற விவாதத்தின்போது லட்சுமி மால் சிங்வி என்பவரால் முன்மொழியப்பட்ட வார்த்தைதான் லோக் பால் என்பது. லோக் பால் என்றால் மக்களின் பாதுகாப்பாளர் என்று பொருள். 
1966-இல் மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த நிர்வாக சீர்திருத்தக் குழு, மக்களின் குறைகளையும், நிர்வாகத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் களைவது குறித்து ஓர் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், லோக் பால்', லோக் ஆயுக்த' என்று இரண்டு அமைப்புகளை மக்களின் குறைகளை விசாரிப்பதற்காக அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. 
நாடு தழுவிய அளவில் உயர் பதவி வகிப்போரின் ஊழலைத் தட்டிக்கேட்க ஓர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுவதற்கு முன்னரே, 1971-இல் மகாராஷ்டிர மாநிலத்தில் லோக் ஆயுக்த நிறுவப்பட்டுவிட்டது. 1968-இலேயே நாடாளுமன்றத்தின் மக்களவையில் லோக் பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்றாலும்கூட, ஏதாவது காரணத்தால் அந்த மசோதா சட்டமாக்கப்படாமல் தள்ளிப்போடப்பட்டது. 1969-இல் மக்களவை லோக் பால் மசோதாவை நிறைவேற்றியது. அதன் பிறகு மாநிலங்களவைக்கு எடுத்துச்செல்லப்பட்டபோது மசோதா நிறைவேற்றப்படாமல் காலாவதியானது. 
இந்த மசோதாவின் பல்வேறு பதிப்புகள் 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2005, 2008 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படாமல் தள்ளிப்போடப்பட்டு வந்தன. அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கம் நாடு தழுவிய அளவில் பரவலான பின்னணியில்தான் வேறு வழியில்லாமல் 2013-இல் லோக் பால், லோக் ஆயுக்த சட்டம் நிறைவேற்றப்பட்டு, 2014-இல் அமலுக்கு வந்தது.
அரசியல்வாதிகளும் சரி, அரசு உயரதிகாரிகளும் சரி தங்களது ஊழலையும் முறைகேடுகளையும் தட்டிக்கேட்க ஒரு வலுவான அமைப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாகவே இருந்து வந்திருக்கின்றனர். அதனால், இப்படியொரு அமைப்பு ஏற்படுத்தப்படுவதாலேயே ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது என்றாலும்கூட, ஊழலுக்கு எதிராக எடுக்கப்படும் முயற்சியின் முதல் அடியாக இந்த சட்டம் அமையும்.
இந்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சியினர் சில விமர்சனங்களை முன்வைத்து வெளிநடப்பு செய்திருக்கின்றனர். லோக் ஆயுக்த தலைவரை தேர்ந்தெடுக்கும் முறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும், நீதிபதி ஒருவரும் அந்தக் குழுவில் இருக்க வேண்டும் என்றும், லோக் ஆயுக்த வரம்புக்குள் அரசு ஒப்பந்தப்புள்ளிகள் விசாரிக்க முடியாது என்பது குறை என்றும், ஊழல் குறித்த இடித்துரைப்பாளர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது குறித்து எதுவும் இல்லை என்றும் தெரிவித்து, அவை குறித்த சட்டத்திருத்தங்களுக்குப் பிறகுதான் நிறைவேற்ற வேண்டும் என்பது அவர்கள் வாதம்.
எப்படி லோக் பால் சட்டம் நிறைவேற்றப்பட்டும் இன்னும்கூட மத்திய அரசு, லோக் பால் ஒருவரை நியமிக்காமல் அந்தச் சட்டத்தை முடக்கி வைத்திருக்கிறதோ, அதேபோல லோக் ஆயுக்த சட்டம் நிறைவேற்றப்பட்டவுடனேயே அது நடைமுறைப்படுத்தப்பட்டுவிடாது. அமைச்சர் ஜெயகுமார் சொல்வதைப்போல, லோக் ஆயுக்த சட்டத்தை நிறைவேற்றிவிட்டு எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்களைக் கொண்டுவர முடியும். அதைவிட்டுவிட்டு சட்டமும் நிறைவேற்றப்படாமல் மீண்டும் முடக்க நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 
லோக் ஆயுக்த சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றி ஊழலுக்கு எதிரான வலுவான அமைப்பு ஒன்றை உருவாக்குவதை உறுதிப்படுத்துவது அல்லவா எதிர்க்கட்சிகளின் முனைப்பாக இருக்க வேண்டும்? நாம் ஆட்சிக்கு வருவோம், அப்போது சட்டத்திருத்தம் கொண்டுவரலாம் என்கிற தன்னம்பிக்கையை திமுக இழந்துவிட்டதோ என்கிற தோற்றத்தைத்தான் எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பு ஏற்படுத்துகிறது. 
லோக் ஆயுக்த இப்போது வலுவில்லாத அமைப்பாக இருக்கலாம். வருங்காலத்தில் அதை வலுப்படுத்தும் அதிகாரம் மக்கள் மன்றமான சட்டப்பேரவைக்கு உண்டு. பெயரளவிலாகவோ, நிர்பந்தத்திற்காகவோ இருந்தாலும்கூட, லோக் ஆயுக்த சட்டத்தை நிறைவேற்றிய பெருமை எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உண்டு. அதற்காக முதல்வரை நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
 

More from the section

இளவரசரின் இந்திய விஜயம்!
கண்டனத்தால் ஆயிற்றா?
சுடவில்லையே தீ, ஏன்? 
புல்வாமா விடுக்கும் செய்தி...
நிறைவு தரவில்லை!