வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

தன்னம்பிக்கையின் வெற்றி!

By ஆசிரியர்| Published: 12th July 2018 01:23 AM

உலகம் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறது. கடந்த 17 நாள்களாக நாடு, மதம், மொழி, இனம், நிறம், பொருளாதார ஏற்றத்தாழ்வு அனைத்தையும் கடந்து தாய்லாந்தின் மலைக்குகைக்குள் சிக்கிக்கொண்ட சிறுவர்களுக்காக உலகெங்கிலும் காணப்பட்ட பரிதவிப்பும் அக்கறையும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. உண்மையான உலகமயம் என்பது வர்த்தகப் பரிமாற்றம் அல்ல, உணர்வுப் பரிமாற்றம்தான் என்பதை எடுத்துரைத்திருக்கிறது தாய்லாந்து சம்பவம்.
தாய்லாந்தின் மியான்மர் எல்லையையொட்டி அமைந்திருக்கின்றன தாம் லூவாங் குகைகள். வட தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் அமைந்துள்ள இந்த மலைக்குகைகள், மலையேற்றத்தில் ஈடுபடும் வினோத சாகச ஆர்வலர்களை ஈர்ப்பவை. தாம் லூவாங் குகையில் 80 மீட்டர் நீளமுள்ள முக்கிய வாயில் வழியாக நுழைந்தால், உள்ளே சுமார் 10 கி.மீ.க்கும் அதிகமான நீளத்தில் பல்வேறு சிறிய சிறிய குகைப் பாதைகள் காணப்படும். 
கடந்த ஜூன் 23-ஆம் தேதி 25 வயது எக்கப்போல் சன்தாங்வாங் என்கிற பயிற்சியாளருடன் வைல்டு போர்ஸ்' என்கிற சிறுவர்கள் கால்பந்தாட்டக் குழு அந்த குகையை பார்வையிடச் சென்றது. கால்பந்து பயிற்சி முடிந்து 11 முதல் 16 வயதுக்குள்பட்ட 12 சிறுவர்களும் பயிற்சியாளருடன் சைக்கிளில் தாம் லூவாங் குகையை அடைகிறார்கள். வேடிக்கையுடனும் உற்சாகத்துடனும் அந்த குகைக்குள் நுழைந்த அந்த சிறுவர்களும் பயிற்சியாளரும் அங்கே தங்களுக்கு விபரீதம் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை உணரவில்லை. அவர்கள் உள்ளே நுழைந்த சில நிமிடங்களில் பெருமழை பொழியத் தொடங்குகிறது. மழை வெள்ளம் அந்த குகையின் பல்வேறு பகுதிகளுக்குள் நுழைந்துவிடுகிறது.
சிறுவர்கள் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை தொடங்குகிறது. மீட்புக் குழுவுடன் குகை வாயிலை அடைந்த காவல் துறையினருக்கு அதிர்ச்சி. சிறுவர்களின் சைக்கிள்களும் கால்பந்து குழுவின் பைகளும் அங்கே இருப்பதைப் பார்த்தவுடன், அந்தச் சிறுவர்கள் குகைக்குள் நுழைந்து விட்டார்கள் என உணர்கிறார்கள். தேடுதல் வேட்டை தொடங்குகிறது.
குகைக்குள் மீட்புக் குழுவினர் சென்று பார்த்தபோது அந்த 12 சிறுவர்களும் பயிற்சியாளரும் ஆழ் குகைக்குள் சென்றுவிட்டது தெரியவந்தது. குகைக்குள் மழை நீரும் சகதியும் புகுந்துவிட்டதால் உள்ளே மாட்டிக்கொண்ட அந்த சிறுவர்களும் பயிற்சியாளரும் செய்வதறியாது, குகைக்குள் இருக்கும் ஒரு பாறையின் மீது ஏறி திகைத்துப்போய் அமர்ந்துவிட்டிருக்கின்றனர். சிறப்பு கடல் அதிரடிப்படையினர் வரவழைக்கப்படுகின்றனர். இதற்குள் தாய்லாந்து குகைக்குள் சிறுவர் கால்பந்தாட்ட அணி மாட்டிக் கொண்டிருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
உலகமே அந்த சிறுவர்களுக்காகப் பிரார்த்திக்கத் தொடங்கிவிட்டது என்பது மட்டுமல்ல, பல்வேறு நாடுகள் தாய்லாந்து அரசுடன் இணைந்து மீட்புப் பணியில் உதவ முன்வருகின்றன. பிரிட்டனிலிருந்து தண்ணீரில் மூழ்கி மீட்புப் பணியில் ஈடுபடும் வல்லுநர்கள், அமெரிக்க ராணுவத்தின் மீட்புப் பணியினர், ஆஸ்திரேலிய ராணுவத்தினர், ஜப்பான், சீனா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து வல்லுநர்கள் குழு என உலகெங்கிலும் இருந்து பலரும் அந்தச் சிறுவர்களை எப்படியும் மீட்டாக வேண்டும் என்கிற முனைப்புடன் தாய்லாந்திற்கு விரைகிறார்கள்.
குகைக்குள் பெருமளவில் வெள்ள நீர் புகுந்துவிட்ட நிலையில், அந்த சிறுவர்களை மீட்பது எளிதாக இல்லை. அவர்கள் பத்திரமாக இருக்கிறார்களா இல்லையா என்பதுகூடத் தெரியவில்லை. குகையின் அனைத்து வாயில்கள் வழியாகவும் தேடுதல் வேட்டை விரிவுபடுத்தப்பட்டும்கூட அந்த சிறுவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உலகமே அதிர்ச்சியிலும் பரிதவிப்பிலும் ஆழ்ந்துகிடந்தது. 9-ஆவது நாள் இருளில் மின்னல் கீற்று தெரிவதுபோல இரண்டு பிரிட்டிஷ் நீச்சல் வீரர்கள், காணாமல் போன 13 பேரும் ஒரு பாறையில் உயிருடன் பதுங்கியிருப்பதைக் கண்டறிந்தபோது ஓரளவுக்கு ஆறுதல் பிறந்தது.
கடும் இருட்டுக்குள் அந்த சிறுவர்களும் சரி, பயிற்சியாளரும் சரி மனம் தளராமல் சுற்றிலும் வெள்ளத்திற்கு நடுவில் ஏறத்தாழ 9 நாள்கள் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல், உணவும் இல்லாமல் எப்படி இருந்தார்கள் என்பது மிகப்பெரிய வியப்பாகத்தான் இருக்கிறது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு முதலில் 4 சிறுவர்கள் மட்டும்தான் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்க முடியுமா, முடியாதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகத் தொடர்ந்தது. நான்கு நான்கு பேராக மீதமுள்ள சிறுவர்களும் ஒவ்வொரு நாளும் மீட்கப்பட்டனர். கடைசியாக 17-ஆவது நாள், பயிற்சியாளரும் நான்கு சிறுவர்களும் மீட்கப்பட்டபோது உலகமே நிம்மதி பெருமூச்சு விட்டது. 
இந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட கடல் அதிரடிப்படை வீரர் ஒருவர் ஆக்ஸிசன் பற்றாக்குறையால் இறந்து உயிர்த்தியாகம் செய்ததுதான் மிகப்பெரிய சோகம்.
தாய்லாந்தில் நடந்தேறிய அந்த மிகப்பெரிய மீட்புப் பணி உலகத்தில் இன்னும் மனிதாபிமானம் மறைந்துவிடவில்லை என்பதை உணர்த்துகிறது. அந்த சிறுவர்களின் தன்னம்பிக்கை குறைந்துவிடாமல் அவர்களைப் பாதுகாத்த பயிற்சியாளரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சற்றும் மனம் தளராமல் தாங்கள் எப்படியும் தப்பித்து வெளியேறி விடலாம் என்கிற தன்னம்பிக்கையுடன் இருந்த சிறுவர்கள்தான் உண்மையான விளையாட்டு வீரர்கள்.
கால்பந்துக்கான உலகக் கோப்பைக்கான போட்டியில் வெற்றி பெறப்போகும் நாட்டின் விளையாட்டு வீரர்களைவிட, தாய்லாந்தைச் சேர்ந்த சிறுவர்களின் வைல்டு போர்ஸ் கால்பந்தாட்ட அணியும் அதன் பயிற்சியாளரும்தான் நிஜமான வெற்றியாளர்கள், விளையாட்டு வீரர்கள். என்ன ஒரு தன்னம்பிக்கை! 

More from the section

இளவரசரின் இந்திய விஜயம்!
கண்டனத்தால் ஆயிற்றா?
சுடவில்லையே தீ, ஏன்? 
புல்வாமா விடுக்கும் செய்தி...
நிறைவு தரவில்லை!