வியாழக்கிழமை 21 மார்ச் 2019

இம்ரான் கானின் வெற்றி!

By ஆசிரியர்| Published: 28th July 2018 02:06 AM

பாகிஸ்தானில் எதிர்பார்த்தது போலவே முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பிடிஐ என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் தெஹ்ரீஃப்-ஏ-இன்சாஃப் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருக்கிறது. பாகிஸ்தான் தேசியப் பேரவையில் உள்ள 342 உறுப்பினர்களில் 272 பேர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 172 உறுப்பினர்கள் கிடைத்தால் மட்டுமே எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியும். இந்த நிலையில் தேர்தல் நடந்த 270 இடங்களில் 114 இடங்களை மட்டுமே இம்ரான் கானின் பிடிஐ கட்சி வென்றிருந்தாலும் ஏனைய கட்சிகளின் உதவியுடன் பெரும்பான்மையை அந்தக் கட்சி ஏற்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் ராணுவம் உதவக் கூடும்.
பிடிஐக்கு அடுத்தபடியாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 62 இடங்களையும், பேநசீர் புட்டோவின் கணவரும் முன்னாள் பாகிஸ்தான் அதிபருமான ஆசிப் அலி ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களையும் வென்றிருக்கின்றன. சுயேச்சைகள் 12 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பெரும்பான்மை பலம் இல்லாமல் போனாலும் இம்ரான் கானின் தலைமையில் விரைவிலேயே ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டிருக்கிறது.
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக வரலாறு படைத்த இம்ரான் கான், 88 டெஸ்ட் பந்தயங்களில் 3,807 ரன்களை எடுத்து 372 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமைக்குரியவர். பாகிஸ்தானின் தலைசிறந்த கிரிக்கெட் கேப்டனாக திகழ்ந்த இம்ரான் கான், ஓய்விலிருந்து திரும்பி, 39-ஆவது வயதில் மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாகி 1992-இல் உலகக் கோப்பையை வென்றது இன்றுவரை வரலாற்று நிகழ்வாகப் பாகிஸ்தானில் போற்றப்படுகிறது. 
இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 48 டெஸ்ட் பந்தயங்களை எதிர்கொண்டு 14 பந்தயங்களில் வெற்றியும் 8 பந்தயங்களில் தோல்வியும், 26 பந்தயங்களில் வெற்றி - தோல்வி இல்லாமல் டிராவிலும் முடிந்திருக்கிறது. இந்தியாவுடனான 15 கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றில்கூட அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி தோற்றதில்லை என்பதுதான் தேர்தல் களத்தில் அவர் குறித்து செய்யப்பட்ட பிரசாரங்களில் குறிப்பிடத்தக்கது. 
1992-இல் பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பையை வென்று தேசிய அளவிலான ஆளுமையாக உருவாகிய இம்ரான் கான், அடுத்த இரண்டு ஆண்டுகளில் லாகூரில் லாப - நோக்கமில்லாமல் புற்று நோய் மருத்துவமனை ஒன்றை நிறுவியபோது அவரது மரியாதை பாகிஸ்தானில் விண்ணைத் தொட்டது. 1996-இல் இம்ரான் கான் பாகிஸ்தான் தெஹ்ரீஃப்-ஏ-இன்சாஃப் என்கிற கட்சியை துவக்கி அரசியல் களத்தில் குதித்தபோது அவர் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பைப் பெறவில்லை. 2002 பொதுத்தேர்தலில் அவரது கட்சி ஒரேயொரு இடத்தில் மட்டும்தான் வெற்றி பெற்றது. பலரும் அவரை விட்டுப் பிரிந்தனர். ஆனாலும் தொடர்ந்து தனது அரசியல் பயணத்தை மேற்கொண்ட இம்ரான் கான், இப்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் பதவி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.
பாகிஸ்தானில் நடந்த தேசியப் பேரவைக்கான தேர்தலில் இஸ்லாமை முன்னிறுத்திய காஷ்மீர், இந்திய எதிர்ப்பு, அமெரிக்க எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்திய தீவிரவாதக் கட்சிகள் அனைத்தும் படுதோல்வி அடைந்திருப்பது சற்று ஆறுதல். குறிப்பாக, மும்பை தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய ஹபீஸ் சயீதின் ஜமாத் உத்-தாவா கட்சி 150-க்கும் அதிகமான வேட்பாளர்களை நிறுத்தியும் அந்த வேட்பாளர்களில் ஒருவர் கூட மூன்று இலக்க வாக்குகள்கூட பெறவில்லை என்பது, தீவிரவாதம் பாகிஸ்தான் வாக்காளர்களால் ஒதுக்கப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 
தனது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இம்ரான் கான் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளும் அறிவிப்புகளும் நம்பிக்கையூட்டுவதாக அமைகிறது. இந்தியாவுடனான நட்புறவை மேம்படுத்துவது குறித்து அவர் வலியுறுத்தியிருக்கிறார். இந்தியா ஓரடி எடுத்து வைத்தால், நாங்கள் இரண்டு அடி எடுத்து வைத்து இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவுக்குக் கை கொடுப்போம் என்று தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தானில் எது நடந்தாலும் அதற்கு இந்தியாவும், இந்தியாவில் எந்தத் தாக்குதல் நடந்தாலும் அதற்கு பாகிஸ்தானும் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தால் இரண்டு நாடுகளும் வளர முடியாது என்றும், அது தெற்காசியாவுக்கு நன்மை பயக்காது என்றும் இம்ரான் கான் தெரிவித்திருப்பது பொறுப்புணர்வுடன் பேசும் அரசியல்வாதியின் குரலாக இருக்கிறது. பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை என்றும் தேர்தல் முறையீடுகள் குறித்து விசாரிப்பதில் தயக்கம் இல்லை என்றும் அறிவித்திருப்பது நல்ல தொடக்கமாகத்தான் தெரிகிறது.
பாகிஸ்தானின் இப்போதைய மிகப்பெரிய பிரச்னை, அதிகரித்துவிட்டிருக்கும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும், சர்வதேச அளவில் தர வேண்டிய கடன் பாக்கிகளும். மார்ச் 2018 அளவில் சுமார் 727 மில்லியன் டாலர் (ரூ. சுமார் 5 லட்சம் கோடி) அந்நியச் செலாவணி உடனடியாகக் கடனை அடைப்பதற்குத் தேவைப்படுகிறது. பாகிஸ்தான் சர்வதேச நிதியத்தையோ, சீனாவையோ அணுகி 10 பில்லியன் டாலர் (ரூ. சுமார் 70 ஆயிரம் கோடி) கடன் பெற்றால்தான் நிலைமையை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
பாகிஸ்தான் ராணுவம் எந்த அளவுக்கு இம்ரான் கானை ஆதரிக்கப்போகிறது, சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப் போகிறது என்பதைப் பொருத்துத்தான் பாகிஸ்தானில் எந்த அளவுக்கு ஜனநாயகம் தொடரப் போகிறது, இந்தியாவுடன் நெருக்கம் ஏற்படப்போகிறது என்பதை முடிவு கட்ட முடியும்.
 

More from the section

வாடிக்கை வேடிக்கைகள்!
பீதியில் உலகம்...!
ஆட்டம் தொடங்கிவிட்டது!
இந்தியாவில் மட்டுமே நடக்கும்!
தோல்வியல்ல... வாய்ப்பு!