வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

இதற்கும் தேவை மருத்துவம்!

By ஆசிரியர்| Published: 28th June 2018 01:28 AM

சென்னை உயர்நீதிமன்றம் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவப் படிப்புக்கு நிர்ணயித்திருந்த ஆண்டுக் கட்டணமான ரூ.13 லட்சத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. கடந்த ஆண்டைப்போல் ஆண்டொன்றுக்கு ரூ.22 லட்சம் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்றும், பல்கலைக்கழக மானியக்குழு அறிவிக்கும் கட்டணத்துக்கு ஏற்றாற்போல இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. 
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் சாமானியர்களுக்கு எட்டாக்கனி என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக வெளிமாநிலங்களிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ரூ.30 முதல் ரூ.35 லட்சம் வசூலிக்கப்படுகிறது. சில கல்லூரிகளில் ரூ.50 லட்சம் வரை கட்டணம் கோரப்படுகிறது. பல நிகர்நிலைப் பல்கலைக்
கழகங்கள் ஐந்தாண்டு மருத்துவக் கல்விக்கு ரூ.1.2 கோடி வரை வசூலிக்கின்றன. அதே நேரத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஐந்தாண்டு கல்விக் கட்டணம் ரூ.70,000-க்குள் அடங்கி விடுகிறது.
ஆண்டுதோறும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற முனைப்புடன் நீட் எனப்படும் தகுதி காண் தேர்வு எழுதுகிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெறும் 15,000 இடங்கள்தான் இருக்கின்றன. இந்தியாவில் தனியார், அரசு என்று மொத்தமாக 67,352 மருத்துவ இடங்கள் இருந்தாலும்கூட கடந்த நான்கு ஆண்டுகளில் வெறும் 13,000 கூடுதல் இடங்கள்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. 
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிகமாக கல்விக் கட்டணம் வசூலிப்பதற்கு அவர்களால் பல காரணங்கள் கூறப்படுகின்றன. மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு அனுமதி பெறுவதற்கே அமைச்சர்களில் தொடங்கி, அடி மட்டம் வரை பல்வேறு அனுமதிகள் பெறப் பல நூறு கோடி செலவழிக்க வேண்டியிருக்கிறது 
என்கிற தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களின் புலம்பலில் நியாயம் இல்லாமல் இல்லை. சாதாரண கல்லூரிகளைப் போலல்லாமல் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்வி நிறுவனங்களுக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கே மிக அதிகமான முதலீடு தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தாங்கள் மிக அதிகமான நன்கொடையையும் கல்விக் கட்டணத்தையும் மாணவர்களிடமிருந்து வசூலித்தாக வேண்டும் என்பது தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினரின் வாதம்.
உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயப்படுத்தியதன் அடிப்படைக் காரணம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக நன்கொடையும், பல மடங்கு கல்விக் கட்டணமும் வசூலித்து அதிக மதிப்பெண் பெறாத மாணவர்களை மருத்துவப் படிப்புக்கு சேர்த்துக் கொள்கின்றன என்பதுதான். நீட் தேர்வு அடிப்படைத் தகுதியை உறுதிப்படுத்துகிறது என்றாலும்கூட, சாமானியர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெறுவதற்கு கட்டண அடிப்படையில் எந்தவிதச் சலுகையும் ஏற்படுத்தித் தருவதில்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். 
மத்திய அரசு 2021-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலுள்ள மொத்த மருத்துவப் படிப்புக்கான இடங்களை 85,525-ஆக உயர்த்த முடிவெடுத்திருக்கிறது. அதாவது, இப்போது இருக்கும் 67,352 இடங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சாதாரணமான அதிகரிப்பு என்றுதான் கூற வேண்டும். புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் இப்போதிருக்கும் இடங்கள் இரட்டிப்பாக்கப்பட்டால்தான் நமது தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். 
அதற்கு மிக அதிகமான முதலீடும், கட்டமைப்பு வசதிகளும், ஆசிரியர்களும் தேவைப்படுகின்றனர். முதலீடும், கட்டமைப்பு வசதிகளும் இருந்தாலும்கூட மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரிய வரும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய சவாலாகக் காணப்படுகிறது. மிக அதிகமான கல்விக் கட்டணம் கொடுத்து மருத்துவப் படிப்பு படிக்கும் ஒருவர், அதிலும் மிகவும் திறமைசாலியான மாணவர் மருத்துவத் துறையில் பயிற்சி பெற்று, அதிக ஊதியத்தில் வெளிநாடுகளில் பணி புரிய விரும்புகிறாரே தவிர, மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணிபுரியத் தயாராக இல்லை. 
மருத்துவர் சுதா சேஷய்யனைப் போல அர்ப்பணிப்பு உணர்வுடன் பல மருத்துவர்களை உருவாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முன்வரும் புதிய தலைமுறை மருத்துவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மேலும் மருத்துவப் பேராசிரியர்களுக்கு போதிய மரியாதையும், ஊதியமும் இல்லாதநிலையில் மருத்துவக் கல்லூரிகள் அதிகரித்தாலும்கூட அதில் பணிபுரிய பேராசிரியர்கள் இல்லை என்கிற நிலைதான் காணப்படுகிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் மாணவர்கள் சீனா, ரஷியா, உக்ரைன், பிலிப்பின்ஸ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் குறைந்த கட்டணத்தில் மருத்துவப் படிப்புக்கு ஆயிரக்கணக்கில் சேர்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். இன்றைய நிலையில் 11,082 நோயாளிகளுக்கு ஒரு அரசு அலோபதி மருத்துவர் என்கிற நிலை காணப்படுகிறது. இது உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையைவிட 11 மடங்கு அதிகம். 
முந்தைய ஜெயலலிதா அரசு, தொலைநோக்குப் பார்வையுடன் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்று இலக்கு வைத்து செயல்பட்டதுபோல, இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அரசுத் தரப்பில் உருவாக்கப்பட்டு குறைந்த கட்டணத்தில் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடத்தப்பட்டால் மட்டுமே, மோடி அரசின் ஆயுஷ்மான் பாரத்' திட்டம் தன் இலக்கை எட்ட முடியும்.
 

More from the section

இளவரசரின் இந்திய விஜயம்!
கண்டனத்தால் ஆயிற்றா?
சுடவில்லையே தீ, ஏன்? 
புல்வாமா விடுக்கும் செய்தி...
நிறைவு தரவில்லை!