புதன்கிழமை 19 டிசம்பர் 2018

இன்னொரு அணைக்கு என்ன அவசியம்?

By ஆசிரியர்| Published: 16th November 2018 02:37 AM

கேரள அரசு முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொள்ளத் தொடங்கியிருப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பெரியாறு அணையிலிருந்து தமிழகம் தண்ணீர் பெறுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் கேரள அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் நீட்சியாகத்தான் இப்போது மீண்டும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் புதிய அணை கட்டுவதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை மேற்கொள்ள அனுமதி கோரியிருக்கிறது. அதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் பரிந்துரைத்திருக்கிறது. 
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள 123 ஆண்டுகள் பழைமையான முல்லைப் பெரியாறு அணையைப் பராமரித்து, நிர்வகிக்கும் பொறுப்பு தமிழகத்திடம் இருக்கிறது. பெரியாறு ஆற்றின் நடுவில் கட்டப்பட்டிருக்கும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளிவரும் வெள்ளம், தமிழகத்தின் ஐந்து தென் மாவட்டங்களின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்கிறது. 
இந்திய சுதந்திரத்துக்கு முன்பே அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் பிரிட்டிஷ் நிர்வாகத்திலிருந்த சென்னை ராஜதானிக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில்தான் பெரியாறு அணை கட்டப்பட்டு, இத்தனை ஆண்டுகாலம் நதிநீர் பங்கீடு நடைபெற்று வருகிறது.
முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை அமைத்து முல்லைப் பெரியாறு அணையை செயலிழக்க வைப்பதுதான் கேரள அரசின் நீண்டகாலத் திட்டமாக இருந்து வருகிறது. இதற்குக் கேரள அரசு பல்வேறு காரணங்களை முன்வைக்கிறது. 123 ஆண்டுகள் பழைமையான முல்லைப் பெரியாறு அணை பலவீனமடைந்துவிட்டது என்றும், அதனுடைய பயன்பாட்டுக் காலம் முடிந்துவிட்டது என்றும் கூறுகிறது கேரளம். அணைக்கு ஏதாவது நேர்ந்தால், அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்றும், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்றும் கூறுகிறது. ஆகவே, முல்லைப் பெரியாறு அணையை உடனடியாக செயலிழக்கச் செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கடந்த சில ஆண்டுகளாகவே தெரிவித்து வருகிறது. 
கேரள அரசின் இந்த வாதங்கள் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது. நீதிபதி ஏ.எஸ்.ஆனந்தின் தலைமையில் உச்சநீதிமன்றமே ஒரு குழுவை அமைத்து, முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத் தன்மை குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டது. பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. அதன் முடிவில் கடந்த 2014, மே மாதம் நீர்க்கொள்ளளவு, நிலநடுக்க பாதிப்பு, கட்டுமான உறுதி ஆகிய எல்லா அம்சங்களிலும் 123 ஆண்டு பழைமையான முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. 
இப்போது திடீர் திருப்பமாக மத்திய அரசு கேரள அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை முயற்சிக்கு அனுமதி வழங்க முற்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் பிரச்னைகளை எல்லாம் நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முழுமையாக ஆராய்ந்து, அதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இப்படியொரு முயற்சிக்கான அவசியம்தான் என்ன?
இப்போதிருக்கும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 366 மீட்டர் கீழே புதிய அணை கட்டத் திட்டமிடப்படுகிறது. இந்த அணை பெரியாறு புலிகள் காப்பகத்தின் நடுவில் அமைகிறது என்பதையும், எந்தவிதமான சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லாத வனப்பகுதிக்கு நடுவே இது திட்டமிடப்படுகிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த அணை கட்டப்பட்டால், தமிழகம் பெறும் தண்ணீர் கேரளத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதும், முல்லைப் பெரியாறு அணையைப் போல அணையின் பராமரிப்பும் நிர்வாகமும் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 
ஏற்கெனவே உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையை மேலும் பலப்படுத்தி, அதன் உயரத்தை 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று அனுமதித்திருக்கிறது. கேரளத்தில் பெய்த பெருமழையின்போது முல்லைப் பெரியாறு அணை நிரம்பி வழிந்தும் கூட, எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதே அந்த அணையின் ஸ்திரத் தன்மைக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்தியிருந்தால், அந்த மழையின்போது, கேரளத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பெருமளவு குறைந்திருக்கும் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். 
152 அடியிலிருந்து 142 அடியாக முல்லைப் பெரியாறு அணையின் உயரம் குறைக்கப்பட்டதால், அணையின் நீர்ப்பிடிப்பு பரப்பளவு 8,000 ஏக்கரிலிருந்து 4,000 ஏக்கராகக் குறைந்தது. அதனால், அங்கே பல ரப்பர் தோட்டங்களும், சுற்றுலா விடுதிகளும் அணையைச் சுற்றி கட்டப்பட்டிருக்கின்றன. அதன் உரிமையாளர்கள்தான் முல்லைப் பெரியாறு அணையை நிரந்தரமாக செயலிழக்க வைப்பதில் குறியாக இருக்கிறார்கள். 
சபரிமலை பிரச்னைக்குப் பிறகு கேரள ஆளும் இடதுசாரிக் கூட்டணி மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கேரள அரசியலில் காலூன்ற மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தனக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரளத்துக்கு சாதகமாக மத்திய ஆட்சியில் உள்ள பாஜக செயல்படுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. காவிரிப் பிரச்னையானாலும், முல்லைப் பெரியாறு பிரச்னையானாலும் தேசியக் கட்சிகள் தமிழகத்தைப் புறக்கணிப்பதன் பின்னணியில் அரசியல் இருப்பது வேதனை அளிக்கிறது.
 

More from the section

தகர்ந்தது மனத்தடை!
இடைவேளைதான், முடிவல்ல!
முள் கிரீடம்!
வெற்றி இனிக்கப் போவதில்லை!
பிரச்னைக்குரிய பதவி விலகல்!