திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

டோக்கியோவுக்கான முன்னோட்டம்!

By ஆசிரியர்| Published: 04th September 2018 01:34 AM

ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டி முடிவுக்கு வந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நிறைவு விழா கண்ட ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவைப் பொருத்தவரை மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது என்று சொல்ல வேண்டும். கடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெற்றதைவிட இது சிறப்பு மிக்க வெற்றியாகும். ஆசிய விளையாட்டுப் போட்டியில் 1951-க்குப் பிறகு இந்தியாவின் சிறந்த பங்களிப்பு இதுதான். அதுபோல், ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதிகப் பதக்கங்களைக் குவித்த போட்டியும் இதுதான். முன்னதாக, 2010-இல் சீனாவில் குவாங் சௌவ் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 65 பதக்கங்களைக் குவித்தது சாதனையாக இருந்தது. 
இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 572 இந்திய விளையாட்டு வீரர்கள் பங்குபெற்றார்கள் என்பதல்ல முக்கியம். அவர்களில் ஏறத்தாழ 200 பேர் 23 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதுதான் சிறப்பு. இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அடைந்திராத பெரிய வெற்றியை இம்முறை இந்த இளைஞர்கள் இந்தியாவுக்குப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். இந்தியாவுக்குக் கிடைத்த 69 பதக்கங்களில் 15 தங்கப் பதக்கங்கள். பதக்கங்களில் சரிபாதி பதக்கங்களை 16 முதல் 23 வயதுக்கு இடைப்பட்ட இளைய தலைமுறை விளையாட்டு வீரர்கள் பெற்றுத் தந்திருக்கிறார்கள்.
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கடைசி 50 மீட்டர்களில் பிரமிக்கவைக்கும் விதத்தில் ஓடி வெள்ளிப்பதக்கத்தை வென்ற டூட்டி சந்த், துப்பாக்கி சுடுதலில் பதற்றமே இல்லாமல் தங்கப் பதக்கத்தை வென்ற சௌரவ் சௌத்ரி, மல்யுத்தத்தில் ஜப்பானிய வீரரைத் தன்னுடைய தந்திரம் நிறைந்த பிடிகளால் தோற்கடித்த வினேஷ் போகத், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான ஹசன் பாய் துஸ்மடோவை வென்ற குத்துச்சண்டை வீரர் அமித் பங்கால் என்று ஜகார்த்தா ஆசியப் போட்டிகளில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க தருணங்கள். 
ஹெப்டத்லானில் வெற்றி பெற்ற ஸ்வப்னா பர்மன், 800 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மன்ஜித் சிங் ஆகியோருடைய சாதனைகள் வியக்க வைக்கின்றன. 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் 15 வயது செளரவ் செளத்ரி செய்திருக்கும் சாதனையும் சரித்திரப் பதிவு. இந்த வெற்றிக்கு லண்டன் ஒலிம்பிக்கைத் தொடர்ந்து ஆறு தலைமை பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டதும், மத்திய இடைநிலை கல்வி வாரியப் பள்ளிகளில் துப்பாக்கிச் சுடுதல் ஒரு விளைடாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டதும் மிக முக்கியமான காரணங்கள். 
மகளிர் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஹீமா தாஸும், ஆடவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற முகமது அனாஸும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகி இருக்கின்றனர். 1998 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு இந்தியா 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பதக்கம் வென்றதில்லை. இதற்கு முன்னர்100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் 1986-இல் பி.டி.உஷா. இந்த முறை பல இளம் ஓட்டப்பந்தய வீரர்கள் ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மூலம் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.
முக்கியமான பல்வேறு விளையாட்டுகளில் தலைமுறை மாற்றம் ஏற்பட்டிருப்பதை ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அடையாளம் காட்டுகின்றன. குண்டு எறிதலிலும், ஈட்டி எறிதலிலும் தேஜிந்தர் பால் சிங்கும், நீரஜ் சோப்ராவும் இந்தியாவின் இடத்தைக் காப்பாற்றுகிறார்கள். பஜ்ரங் புனியா, அமித் பங்கால், சௌரவ் சௌத்ரி, பி.வி. சிந்து ஆகியோர் இந்திய மூவர்ணக் கொடியை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தூக்கிப் பிடித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். அதேபோலே ஜின்சன் ஜான்சனின் பங்களிப்பையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. 
இந்தியா அதிக வெள்ளிப் பதக்கம் (24) வென்ற போட்டியாகவும் இது அமைந்துள்ளது. இதற்கு முன்னர் தில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 19 வெள்ளி வென்றதே சாதனையாக இருந்தது. செபாக்டாக்ராவில் இந்தியா முதல்முறையாக பதக்கம் வென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ராஹி சர்னோபட்டும், மல்யுத்தத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை வினேஷ் போகத்தும் பெற்றிருக்கிறார்கள்.
ஒருபுறம் நாம் அடைந்த வெற்றிகள் மகிழ்ச்சி அளித்தாலும் கூட, இன்னொரு புறம் இந்தியா இதுவரை தான் தக்கவைத்துக் கொண்டிருந்த இடத்தை சில விளையாட்டுகளில் இழந்திருப்பது சற்று வருத்தமளிக்கிறது. ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் எப்படியோ அதுபோன்று கபடியில் இன்று இந்திய அணி தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது. அப்படி இருந்தும் கூட, நாம் கபடியில் பதக்கத்தைக் கோட்டை விட்டதை மிகப்பெரிய பின்னடைவாகத்தான் கருத வேண்டியிருக்கிறது. ஹாக்கியிலும் நமது அணி கவனக்குறைவாக இருந்ததன் விளைவால் மலேசியாவிடம் தோல்வியைத் தழுவ நேர்ந்திருக்கிறது. ஏறத்தாழ 4 தங்கப் பதக்கங்களை நமது இந்திய அணி கவனக்குறைவால் தவறவிட்டது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
2.6 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.185 லட்சம் கோடி) மதிப்புள்ள பொருளாதாரமான இந்தியா அதற்கேற்றாற் போன்ற வெற்றியை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அடைந்ததா என்றால் இல்லை. சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு நிகராகவோ அல்லது அவர்களுக்குப் பின்னாலோதான் நாம் இருக்கிறோம் என்பது கூட வருத்தமில்லை. ஆனால், இந்தோனேஷியா, உஸ்பெகிஸ்தான், ஈரான், தைவான் ஆகிய நாடுகளை விட நாம் பின்தங்கி இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும்போதுதான் வருத்தம் மேலிடுகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன. இனி 2020 ஒலிம்பிக் போட்டிக்கு நாம் தயாராக வேண்டும். முனைப்பும் உறுதியும் இருந்தால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய சாதனையை ஈட்டும் என்கிற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நாம் வென்றிருக்கும் பதக்கங்களும், நமது விளையாட்டு வீரர்களின் சாதனைகளும்.
 

More from the section

இடஒதுக்கீட்டு மாயமான்!
ஜனநாயகமல்ல, பணநாயகம்!
அரசியல்... அரசியல்... அரசியல்...
நாடாளுமன்றம் எதற்காக?
எங்கேயோ இடிக்கிறது...