20 ஜனவரி 2019

பலமே வாழ்வு, பலவீனமே மரணம்!

By ஆசிரியர்| Published: 10th September 2018 02:53 AM

"லான்செட்' எனப்படும் உலக சுகாதார இதழில் வெளியாகி இருக்கும், உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வு இந்தியாவில் குறைவான உடற்பயிற்சி இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவிலேயேகூட கடந்த 18 ஆண்டுகளில் மக்கள் மத்தியில் உடல் நலம் பேணல் குறித்த முனைப்பு அதிகரிக்கவில்லை என்பதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
 முக்கியமான பல நோய்களும், உடல் நல இடர்ப்பாடுகளும் உலகளாவிய அளவில் குறைந்து வந்தாலும்கூட அன்றாட உடற்பயிற்சி அளவு அதிகரிக்கவில்லை என்கிறது அந்த ஆய்வு. 168 நாடுகளில் 19 லட்சம் பேருடன் நடத்தப்பட்ட அந்த ஆய்வின் முடிவு, மேலும் பல முக்கியமான தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் வழங்குகிறது.
 வாரத்துக்கு 109 நிமிட மிதமான உடற்பயிற்சி அல்லது 75 நிமிட தீவிர உடற்பயிற்சி அத்தியாவசியம் என்று கருதப்படுகிறது. 32% பெண்களும் 23% ஆண்களும் இந்த குறைந்தபட்ச அளவுக்குக்கூட நடைப்பயிற்சியோ, வேறு உடற்பயிற்சியோ மேற்கொள்வதில்லை. அந்த புள்ளிவிவரம் கூறும் இன்னொரு எதிர்பாராத முடிவு என்னவென்றால், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகள் வளர்ச்சி அடைந்த நாடுகளைவிட அதிகமாக ஆரோக்கியம் பேணுகின்றன என்பதுதான்.
 ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் ஓர் ஆய்வை நடத்தியிருக்கிறது. 46 நாடுகளில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில், மிகக்குறைவான உடற்பயிற்சி உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியாவும், மிக அதிகமாக உடல் நலம் பேணும் நாடாக ஹாங்காங்கும் காணப்படுகின்றன. சராசரியாக இந்தியர்கள் நாளொன்றுக்கு 4,297 எட்டுகள் நடக்கிறார்கள் என்றால், சீனர்கள் 6,880 எட்டுகள் நடக்கின்றனர். ஆண்களைவிடப் பெண்கள் இந்தியாவில் இன்னும்கூடக் குறைவாகவே நடக்கிறார்கள். அவர்களது சராசரி நடையின் அளவு 3,684 எட்டுகள் மட்டுமே.
 இந்தியாவில் 44% பெண்கள் போதுமான உடல் ரீதியான செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், 25% ஆண்கள் போதுமான செயல்பாடுகள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது மிகவும் கவலைக்குரியது. பெண்கள் உடல் நலம் பேணாமல் இருப்பது குழந்தைகளையும் பாதிக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதுமட்டுமல்லாமல், உடற்பயிற்சிக் குறைவால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் தாமதமாகத்தான் கண்டறியப்படுகின்றன என்பதால், அவர்கள் போதுமான சிகிச்சை பெறுவது இல்லை. பெரும்பாலோர் பாதியிலேயே சிகிச்சையைக் கைவிட்டு விடுவதும் பரவலாகக் காணப்படுகின்றது.
 உடற்பயிற்சியின்மைதான் தொற்று நோய் அல்லாத இதயம் தொடர்பான நோய்களுக்கும், சர்க்கரை நோய்க்கும், மறதி நோய்க்கும், சில வகை புற்றுநோய்களுக்கும் காரணம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால், ஆண்களானாலும் பெண்களானாலும் கட்டாயமாக உடற்பயிற்சி மேற்கொள்வதும், உடல் நலம் பேணுவதும் அவசியம் என்பதைப் பொது மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
 உலகத்தில் ஏறத்தாழ 50 லட்சம் பேர் போதுமான மருத்துவ சிகிச்சை பெறாததால் மரணிப்பதாக "லான்செட்' இதழ் தெரிவிக்கிறது. அவர்களில் 16 லட்சம் பேர் இந்தியாவில் காணப்படுகிறார்கள். அதிகமான மருத்துவ வசதி மட்டுமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் கூறிவிட முடியாது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் சுகாதார மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு பல லட்சம் கோடிகள் செலவிட்டிருந்தாலும்கூட, மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய், பேறுகால மரணம் ஆகியவை அதிகரித்திருக்கின்றனவே தவிர குறைந்தபாடில்லை. இதற்குக் காரணம், மக்கள் மத்தியில் உடல் நலம் பேணல் குறித்த விழிப்புணர்வு ஏற்படாமல் இருப்பதுதான்.
 பொதுவாகவே கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள உணவு உட்கொள்பவர்கள், உடல் உழைப்பு குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. இதுவே கூட, இந்தியர்கள் அதிக அளவில் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கக்
 கூடும்.
 மேலும், நடுத்தர, உயர் வகுப்பு இந்தியர்கள் உடல் உழைப்புடன் கூடிய வேலைகளில் ஈடுபடுவதை சமூக அந்தஸ்துக்கு இழுக்கு என்று கருதுகிறார்கள். நடப்பது என்பதை தவிர்த்து, முடிந்தவரை வாகனங்களை நாடும் போக்கு இந்தியாவில் அதிகமாகக் காணப்படுவதும்கூட இந்தியர்களின் உடல் ரீதியான செயல்பாடுகள் குறைவாக இருப்பதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.
 பாதசாரிகள் நடப்பதற்கு ஏற்ற சாலைகள் இல்லாமல் இருத்தல், எல்லா பகுதிகளிலும் பூங்காக்கள் இல்லாமை, சுற்றுச்சூழலில் காணப்படும் காற்று மாசு ஆகியவை இந்திய நகரங்களில் பெரியோர்களையும் குழந்தைகளையும் வெளியில் போகாமல் வீட்டுக்குள் அடைந்துகிடக்க வைக்கின்றன. உலகிலுள்ள உடல் பருமன் அதிகரித்தவர்களில் 3.7% இந்தியாவில் தான் காணப்படுகிறார்கள். ஆண்டுதோறும் ஏறத்தாழ 53 லட்சம் இந்தியர்கள் உடல் சார்ந்த செயல்பாட்டுக் குறைவால் ஏற்படும் நோய்களுக்கு பலியாகிறார்கள்.
 நடைப்பயிற்சியாக இருந்தாலும், உடற்பயிற்சியாக இருந்தாலும், யோகாவாக இருந்தாலும் ஏதாவது ஒருவிதத்தில் உடலின் செயல்பாட்டை உறுதிப்படுத்தாமல் போனால் இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்தாலும் அதனால் எந்தவித பயனும் இருக்கப் போவதில்லை. இதை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே உணர்ந்திருந்ததால்தான் சுவாமி விவேகானந்தர், இந்தியர்களுக்கு உடல் நலம் பேணுதல் குறித்துத் தொலைநோக்குச் சிந்தனையுடன் "பலமே வாழ்வு, பலவீனமே மரணம்' என்று வலியுறுத்தினார் என்பதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
 

More from the section

இடஒதுக்கீட்டு மாயமான்!
ஜனநாயகமல்ல, பணநாயகம்!
அரசியல்... அரசியல்... அரசியல்...
நாடாளுமன்றம் எதற்காக?
எங்கேயோ இடிக்கிறது...