வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

ஒப்புக்கு ஒரு தீர்ப்பு!

By ஆசிரியர்| Published: 14th February 2019 01:38 AM


அரசியலில் தலையிடாமல் ஒதுங்கி நிற்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத்தையும், ராணுவத்தின் சக்தி வாய்ந்த ஐஎஸ்ஐ என்கிற உளவுத் துறையையும் அந்த நாட்டு உச்சநீதிமன்றம் எச்சரித்திருக்கிறது. இதுபோல உச்சநீதிமன்றமும் பாகிஸ்தானின் ஆட்சியாளர்களும் ராணுவத்தின் தலையீட்டை பலமுறை கண்டித்திருக்கிறார்கள். அதனால், இப்போதைய எச்சரிக்கை வியப்பை ஏற்படுத்தவில்லை. முந்தைய எச்சரிக்கையைப் போலவே இந்த எச்சரிக்கையையும் பாகிஸ்தான் ராணுவம் எந்த அளவுக்கு பொருட்டாக எடுத்துக்கொள்ளும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை அன்றைய ராணுவ ஆட்சி பதவியிலிருந்து விலக்கியது. ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் அந்த நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தானிலுள்ள வழக்குரைஞர்களும் நீதித் துறையினரும் ஊடகங்களும் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்கின. அது ராணுவ ஆட்சிக்கு எதிரான மிகப் பெரிய போராட்டமாக மாறி, முறையான ஜனநாயகம் ஏற்படுவதற்கு வழிகோலியது. 
பாகிஸ்தான் ராணுவத்தையும், உளவுத் துறையையும் தேச நிர்வாகத்திலிருந்து அகற்றி நிறுத்த உத்தரவிடும் அளவுக்கு நீதிபதிகள் வலுப்பெற்றிருக்கிறார்கள் என்றால், அதற்கு நீதித் துறையின் அதிகரித்த தன்னம்பிக்கையும் சுதந்திரமும்தான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் பாகிஸ்தானில் காணப்படும் சில அடிப்படை ஜனநாயக விரோத செயல்பாடுகளும் நடைமுறைக் குறைபாடுகளும் உச்சநீதிமன்றத்தின் செயல்பாட்டிலும் காணப்படுகின்றன. 
மக்களால் ஊழல்வாதிகள் என்று அறியப்படும் அரசியல்வாதிகள் மீதும், நிர்வாகத் தவறுகள் மீதும் உச்சநீதிமன்றம் துணிந்து கருத்துகளை வெளியிடுவதாலும், நடவடிக்கைகள் எடுப்பதாலும் மக்கள் மத்தியில் பாகிஸ்தான் நீதித்துறைக்கு ஓரளவு மரியாதை காணப்படுகிறது. ஆனால், அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அதிகாரம் செலுத்தவும் துணிவுள்ள பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் எந்த அளவுக்கு ராணுவத்தையும், அதன் உளவுத் துறையையும் கட்டுப்படுத்த முடியும் என்பது சந்தேகம்தான். 
உச்சநீதிமன்றத்தின் சில நடவடிக்கைகள் ராணுவத்துக்கு துணைபோவதாக இருந்திருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியையும், பிரதமரையும் அகற்றுவதற்கு ராணுவம் முனைந்த நிகழ்வுகளில், பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் சாதகமானத் தீர்ப்புகளை வழங்கி ராணுவத்தின் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறது என்பது வரலாறு. 
இரண்டாண்டுகளுக்கு முன்பு அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பதவியிலிருந்து அகற்றுவதற்கு உச்சநீதிமன்றம்தான் ராணுவத்துக்கு உதவியது. பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக இருந்த ராணுவத் தளபதி ஜியா உல் ஹக் ஆட்சியில், பாகிஸ்தானின் அரசமைப்புச் சட்டத்தில் ஒரு சட்டத்திருத்தம் நுழைக்கப்பட்டது. அந்தச் சட்டத்திருத்தம் அதற்குப் பிறகு பயன்படுத்தப்படவே இல்லை. அதன் அடிப்படையில், பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை பதவி விலகச் செய்து, அவர் பதவி வகிக்க வாழ்நாள் காலத் தடையையும் உச்சநீதிமன்றம் விதித்தது. அதனால்தான் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆசி பெற்ற இம்ரான் கான் கடந்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக முடிந்தது. 
ஐஎஸ்ஐ உளவுத் துறை இதற்கான எல்லா அடிப்படை வேலைகளையும் செய்தது என்பது அனைவருக்கும் தெரியும். ராணுவத்துக்கும் அதன் உளவுத் துறைக்கும் உதவும் விதத்தில் தீர்ப்பை வழங்கி நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட முடியாமல் அகற்றி நிறுத்திய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்தான், ராணுவமும் ஐஎஸ்ஐ-யும் அரசியலில் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று 
உத்தரவிட்டிருக்கிறது.
தெஹ்ரிக் ஈ லபைக் பாகிஸ்தான் என்கிற பயங்கரவாத இயக்கம் 2017-இல் இஸ்லாமாபாதை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றை நடத்தியது. இன்னொரு பயங்கரவாதியான சல்மான் தஷிரின் கொலையாளிக்கு தூக்கு தண்டனை விதித்ததைத் தொடர்ந்து உருவான இயக்கம்தான் தெஹ்ரீக் ஈ லபைக் பாகிஸ்தான். அப்போது நவாஸ் ஷெரீப் பதவியிலிருந்து அகற்றப்பட்டு அவருக்குப் பதிலாக ஷாஹித் அப்பாஸி பிரதமராக இருந்தார். 
போராட்டத்தில் ஈடுபட்ட பயங்கரவாத இயக்கத்தினரை கலைந்துப் போகச் செய்வதற்கு ஷாஹித் அப்பாஸி அரசு ராணுவத்தின் உதவியை நாடியது. அரசின் வேண்டுகோளை நிராகரித்து, போராட்டத்தில் ஈடுபட்டத் தலைவர்களுடன் மிகப்பெரிய பண உதவிப் பேரம் நடத்தி அந்தப் போராட்டத்தை ராணுவம் முடித்து வைத்தது. இந்தப் பிரச்னையை உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக எடுத்துக்கொண்டு விசாரித்த வழக்கில்தான், ராணுவமும் அதன் உளவுத் துறையும் அரசியலில் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும் என்கிற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வின் இந்தத் தீர்ப்பு பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. வெறுப்பு, தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பாகிஸ்தான் ராணுவத்தின் உதவி இல்லாமல் அரசால் நிறைவேற்ற முடியாது என்பது பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியாததல்ல. துவேஷத்தின் அடிப்படையில் செயல்படும் தீவிரவாத, பயங்கரவாத இயக்கங்கள் பாகிஸ்தான் ராணுவத்தாலும், அதன் 
உளவுத் துறையாலும் ஆதரித்து வளர்க்கப்படுபவை என்பதும் நீதிபதிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்போது, இப்போது வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு தலைப்புச் செய்திக்குப் பயன்படலாமே தவிர, பாகிஸ்தானின் செயல்பாடுகளில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது.
 

More from the section

முற்றுப்புள்ளி அல்ல... அரைப்புள்ளி!
வாடிக்கை வேடிக்கைகள்!
பீதியில் உலகம்...!
ஆட்டம் தொடங்கிவிட்டது!
இந்தியாவில் மட்டுமே நடக்கும்!