24 மார்ச் 2019

பாஜக எவ்வழி, காங்கிரஸ் அவ்வழி...

By ஆசிரியர்| Published: 15th February 2019 01:23 AM

சுதந்திர இந்தியாவில் பசுவதை முற்றிலுமாகத் தடுக்கப்படும் என்கிற உறுதிமொழியை பண்டித ஜவாஹர்லால் நேரு அளித்திருந்தார் என்பது  உண்மை. இந்தியா சுதந்திரமடைந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, வாக்குறுதியளித்தபடி மாட்டிறைச்சிக் கூடங்களைத் தடை செய்து மூடுவது என்பது இயலாத ஒன்று என்பதை பிரதமர் நேருவின் தலைமையிலான காங்கிரஸ் அரசு உணர்ந்தது. 
பல மாநிலங்களில் பசுவதைத் தடுப்புச் சட்டம் அமலில் இருக்கிறது என்றாலும்கூட, மாட்டிறைச்சிக் கூடங்கள் செயல்பட்டு வந்தன. உலகில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 2017-18 நிதியாண்டில் மட்டும் ரூ.25,988 கோடி மதிப்புள்ள 13,48,225 டன் மாட்டிறைச்சி இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. 
இப்போது மாட்டிறைச்சி ஏற்றுமதி கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பதும் அதனால் பலர் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள் என்பதும் வெளியில் சொல்லப்படாத சோகம்.
பசுவதைத் தடுப்பு என்பது வேறு. மாட்டிறைச்சி உண்பது என்பது வேறு. பசுவதைத் தடுக்கப்பட வேண்டுமானால் பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமே தவிர, மாட்டிறைச்சி உண்பவர்களைத் தடுக்க முற்படுவதும் தாக்குவதும் நாகரிக சமுதாயத்தின் ஏற்புடைய செயல்கள் அல்ல. கடந்த 5 ஆண்டுகளாக பசுப் பாதுகாப்பு என்பது தீவிர இயக்கமாக வட மாநிலங்களில் மாறியிருப்பது மட்டுமல்லாமல், வன்முறைக்கும் கும்பல் கொலைகளுக்கும் வழிகோலியிருக்கிறது. 
வட மாநிலங்களில் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்ற மாட்டிறைச்சிக்கு எதிரான கும்பல் தாக்குதல்களால் பயந்துபோய் விவசாயிகள் பலரும் தங்களது மாடுகளைத் தெருவில் அவிழ்த்துவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இப்படி அவிழ்த்து விடப்பட்ட மாடுகள், பயிர்களை நாசம் செய்வதும் தெருக்களை ஆக்கிரமித்துக் கொள்வதுமாக மிகப் பெரிய பிரச்னையாக மாறியிருக்கின்றன. 
வயல்களில் உழுவதற்கும் பாசனத்துக்கும் போக்குவரத்துக்கும் காளைகள் பயன்படுத்தப்பட்ட காலம் போய்விட்டது. டிராக்டர்களும், பம்ப் செட்டுகளும் விவசாயிகளால் பயன்படுத்தப்படும் நிலையில், காளைகளுக்கு எந்தவிதப் பயன்பாடும் இல்லை. அதேபோல, கறவை வற்றிய  பசுக்களை ஆகாரம் கொடுத்துப் பாதுகாக்கும் வசதி விவசாயிகளுக்கு இல்லை. 
உத்தரப் பிரதேசத்தில் தெருவோரங்களிலும் வயல்களிலும் சுற்றித் திரியும் மாடுகள் மிகப் பெரிய பிரச்னையாக மாறிவிட்டதைத் தொடர்ந்து,   சுற்றித் திரியும் மாடுகளையெல்லாம் உடனடியாக கோசாலைகளில் அடைக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த மாதம் உத்தரவிட்டார். அத்தனை மாடுகளையும் அடைத்து வைப்பதற்குப் போதுமான கோசாலைகள் இல்லாத நிலையில் அதிகாரிகள் செய்வதறியாது திகைக்கிறார்கள். இந்த மாடுகளைப் பராமரிப்பதற்கு நிதியாதாரம் இல்லாததால், உத்தரப் பிரதேச அரசு மதுவின் மீதும், நெடுஞ்சாலை சுங்கங்களிலும் 0.5% கூடுதல் வரி வசூலிக்க உத்தரவிட்டிருக்கிறது. 
பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இப்படியென்றால், காங்கிரஸ் ஆளும் அண்டை மாநிலங்களான மத்தியப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் அந்த மாநில அரசுகளும் தீவிரமான பசுப் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கின்றன. கடந்த வாரத்தில் மட்டும் கமல்நாத் தலைமையிலான மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு 5 பேரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது. 
அவர்கள் செய்த குற்றமெல்லாம் பசுப் பாதுகாப்புத் தொடர்பான சட்டத்தை மீறினார்கள் என்பதுதான். பசுவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்திருப்பதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. பிணைக்கான வாய்ப்பே தரப்படாமல், அரசு உத்தரவின் அடிப்படையில் தேசியப் பாதுகாப்பை காரணம் காட்டி ஓராண்டுக் காலம் சிறையிலடைக்கும்  அதிகார துஷ்பிரயோகம் கண்டனத்துக்குரியது. 
மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின்போது எல்லா பஞ்சாயத்துகளிலும் அரசு சார்பில் கோசாலைகள் அமைக்கப்பட்டு பசுக்கள் பாதுகாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்ததும் கோசாலை அமைக்கும் முயற்சியில் முனைப்புக் காட்டுவதோடு, பசுவதை குறித்த கடுமையான கொள்கையையும் கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. மத்தியப் பிரதேசம் மட்டுமல்ல, காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும் அண்டை மாநிலமான ராஜஸ்தானும் பசுக்கள் நல்வாழ்வுத் துறை ஒன்றை ஏற்படுத்தி, அதன் மூலம் பயன்பாடு இல்லாத பசுக்களை 
தத்தெடுத்துப் பாதுகாப்பதற்கு உதவித் தொகை வழங்கி ஊக்குவிக்கிறது. 
நமது பாரம்பரிய மாட்டினங்கள் அழிந்துவிடக் கூடாது என்பதிலும் தெய்வமாகப் போற்றப்படும் பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. கோயில்களிலும், ஏன் மசூதி, மாதா கோயில்களிலும்கூட கோசாலைகளை ஏற்படுத்தி பொதுமக்கள் பசுக்களை ஆதரிப்பதை ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால், மாட்டிறைச்சி உண்பவர்களைத் தடுப்பதும், பயனில்லாத மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதைத் தடுப்பதும் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. பசுப் பாதுகாப்பு என்கிற பெயரில் கடுமையான சட்டங்களைப் பிரயோகித்து பிணையில்லாமல் சிறையிலடைக்க முற்படுவதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
 பாஜக வழியில்தான் காங்கிரஸும் நடைபோடப் போகிறது என்றால் ஆட்சி மாற்றம் ஏற்படுவானேன்?
 

More from the section

போதும்,  உதட்டளவு கரிசனம்!
முற்றுப்புள்ளி அல்ல... அரைப்புள்ளி!
வாடிக்கை வேடிக்கைகள்!
பீதியில் உலகம்...!
ஆட்டம் தொடங்கிவிட்டது!