வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

புல்வாமா விடுக்கும் செய்தி...

By ஆசிரியர்| Published: 18th February 2019 03:00 AM

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில், பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது என்கிற பயங்கரவாதக் குழுவால் நடத்தப்பட்டிருக்கும் தற்கொலைத் தாக்குதல், ஒட்டுமொத்த இந்தியாவையே கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. வெடிமருந்துகள் நிரம்பிய வாகனத்தை மத்திய துணைக் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தில் மோதி 40 வீரர்களின் உயிரை பலிவாங்கி இருக்கிறது அந்த பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதல். இதுவரை நடந்தத் தாக்குதல்களிலேயே மிக அதிகமான ராணுவ வீரர்களின் உயிர் பலிக்குக் காரணமான புல்வாமா தாக்குதல் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய நிகழ்வு அல்ல.
 78 வாகனங்களில் சுமார் 2,500 வீரர்கள் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகரிலுள்ள முகாம்களுக்குப் பயணித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்குப் போவதற்கு இந்த ஒரு நெடுஞ்சாலை மட்டுமேதான் இருக்கிறது. 2017-இல் அமர்நாத் யாத்ரிகர்கள் இதே நெடுஞ்சாலையில்தான் தாக்குதலுக்கு ஆளானார்கள். சாதாரணமாக, ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் இந்த நெடுஞ்சாலை வழியாக வேறு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதில்லை. கடந்த இரண்டு நாள்களாகப் பனிப்பொழிவு காணப்பட்டதால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அதனால்தான் வரிசையாக 78 வாகனங்களில் மத்திய துணைக் காவல் படை வீரர்கள் இந்த நெடுஞ்சாலை வழியாகப் பயணிக்க நேர்ந்தது.
 ராணுவ வாகனங்கள் செல்லும்போது பாதுகாப்பு வாகனங்கள் சாலையை முதலில் சோதனை நடத்தும் வழக்கம் தொடர்ந்தது என்றாலும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டிருப்பதைத்தான் இந்தத் தாக்குதல் வெளிச்சம் போடுகிறது. நெடுஞ்சாலைக்குள் சாலைகள் சேரும் இடங்களில் எல்லாம் பாதுகாப்பு இருந்தும்கூட எப்படி மனித வெடிகுண்டாகச் செயல்பட்ட அடில் அகமதால் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை அந்தக் குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து வரிசையில் ஐந்தாவதாகச் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தின் மீது மோதித் தாக்குதல் நடத்த முடிந்தது என்பது புதிராகவே இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட இடத்தில் கண்காணிப்புக் கேமரா இல்லாமல் இருந்ததை அவர்கள் சாதுர்யமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.
 புல்வாமா தற்கொலைத் தாக்குதல் வேறு பல செய்திகளையும் தெரிவிக்கிறது. பொதுவாக முஸ்லிம்கள் மத்தியில் தற்கொலை செய்து கொள்வது "ஹராம்' (தடை செய்யப்பட்டது) என்று கருதப்படுகிறது. காஷ்மீர் பயங்கரவாதிகள் இதுவரை இதுபோலத் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டதில்லை. மேற்கு ஆசியாவில், இஸ்லாமைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படும் "ஜிஹாத்' புனிதப் போரில் உயிரை மாய்த்துக் கொள்வது ஹராமல்ல என்கிற புதிய கருத்து உருவாகியது. அது சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பரவி, இப்போது இந்தியாவிற்குள்ளும் நுழைந்து விட்டிருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான், அடில் அகமது என்கிற மனித வெடிகுண்டு தெரிவிக்கும் செய்தி.
 இதற்கு முன்னர் நடந்த 2001 ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை மீதான வாகனத் தாக்குதல், பதான்கோட், நக்ரோட்டா, உரி தாக்குதல்கள் அனைத்துமே பாகிஸ்தானிய ஊடுவிகளால்தான் நடத்தப்பட்டன. இப்போது ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளூர் காஷ்மீரிகளையே தாக்குதலுக்கு பயன்படுத்த முற்பட்டிருப்பது, வருங்காலத்தில் இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது.
 ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர, தாலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியிருக்கிறது. இதற்கு, அமெரிக்காவுக்குப் பாகிஸ்தானின் உதவி தேவைப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், பயங்கரவாதி
 களுக்குப் பாகிஸ்தான் அடைக்கலம் அளிப்பதற்கு எதிராக அறிக்கைகள் விட்டாலும்கூட, பாகிஸ்தானுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கையில் ஈடுபட இந்தியாவை அமெரிக்கா அனுமதிக்குமா என்பது கேள்வி.
 மசூத் அசார், ஹபீஸ் சையது, சையத் சலாவுதீன் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கத் தலைவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தாலும், அதன் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ.யாலும் பாதுகாக்கப்படுகின்றனர். பாகிஸ்தானை சீனா பாதுகாக்கிறது. ஜெய்ஷ்-ஏ-முகமதுவின் தலைவர் மசூத் அசாரைத் தேடப்படும் பயங்கரவாதியாக ஐ.நா. சபை அறிவிப்பதைச் சீனா தொடர்ந்து தடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்குச் சீனா அளித்துவரும் ராஜாங்க ரீதியிலான பாதுகாப்பையும், ராணுவ ரீதியிலான ஆதரவையும் விலக்கிக் கொள்ளாதவரை, பயங்கரவாதக் குழுக்களை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்தப் போவதில்லை.
 பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை விலக்கிக் கொள்வதால் பயன் இருக்கப் போவதில்லை. சீனாவுடனான வர்த்தகத்தை முடக்குவது, தைவான், திபெத் பிரச்னைகளில் இந்தியா துணிந்து வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது, சீனாவில் வாழும் உயிகர் முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாடு எடுக்கும் நடவடிக்கைகளை வெளிச்சம் போடுவது என்று செயல்பட்டு, நெருக்கடி கொடுப்பது ஒருவேளை பயனளிக்கலாம். "எங்கே அடித்தால் அங்கே வலிக்கும்' என்பதை சீனாவையும் அமெரிக்காவையும்போல நாமும் புரிந்து கொள்ள வேண்டும்.
 கடைசியாக ஒரு வார்த்தை. நமது அரசியல் கட்சிகள் ராணுவத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். பாதுகாப்பு, ராணுவத் தளவாடக் கொள்முதல் போன்றவற்றை அரசியலாக்குவது பொறுப்பற்றதனம்.
 நமக்காக புல்வாமாவில் ரத்தம் சிந்திய வீரர்களுக்குக் கண்ணீரின் துளிகளுடன் நமது இதய அஞ்சலி!
 
 
 

More from the section

முற்றுப்புள்ளி அல்ல... அரைப்புள்ளி!
வாடிக்கை வேடிக்கைகள்!
பீதியில் உலகம்...!
ஆட்டம் தொடங்கிவிட்டது!
இந்தியாவில் மட்டுமே நடக்கும்!