புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

இந்தியாவில் மட்டுமே நடக்கும்!

By ஆசிரியர்| Published: 18th March 2019 03:16 AM

உச்சகட்ட அலுவல் நேரத்தில் சாலையின் ஒரு பகுதியில் இருந்து மறுபுறம் இருக்கும் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் நடைமேம்பாலம் சீட்டுக்கட்டு சரிவதுபோல கடந்த வியாழக்கிழமை நொறுங்கி விழுந்தது. அந்த நடைமேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தவர்கள் 35 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். நல்லவேளையாக அருகிலுள்ள சாலை சந்திப்பில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்ததால், நூற்றுக்கணக்கான வாகனங்களின் சக்கரங்களில் சிக்காமல் அவர்கள் உயிர் பிழைத்தனர்.
 சில மாதங்களுக்கு முன்புதான் மும்பை நகரிலுள்ள எல்லா பாலங்களும், நடைமேம்பாலங்களும் உறுதித் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இந்த நடைமேம்பாலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறுதியாக இருப்பதாக சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மும்பை மாநகரம் சந்திக்கும் மூன்றாவது மிகப் பெரிய நடைமேம்பால விபத்து இது. 2017-இல் மும்பையின் மையப் பகுதியான எல்பின்ஸ்டன் சாலை ரயில் நிலைய நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட மக்கள் நெரிசலால் அந்த மேம்பாலம் தகர்ந்தபோது 22 பேர் உயிரிழந்தனர்.
 எல்பின்ஸ்டன் சாலை ரயில் நிலையத்தில், நெரிசலைத் தொடர்ந்து நடைமேம்பாலம் தகர்ந்து விழுந்து 22 பேர் உயிரிழந்த நிலையில் ஒரு வேடிக்கை நடந்தது. காவல் துறையினர் இரண்டு பிரிவாகப் பிரிந்து ரயில்வே காவல் துறையும், மாநகரக் காவல் துறையும் ஒருவருக்கொருவர் பலத்த வாக்குவாதத்திலும் சர்ச்சையிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பாலத்தை அளந்து அந்த விபத்து யாருடைய அதிகார வரம்பில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று விவாதித்துக்கொண்டிருந்தனர். இரு தரப்பினருமே பிரச்னையை மற்றவர்களின் தலையில் கட்டுவதற்கு முயற்சித்து வந்தனர் என்பது தெளிவு. இதுபோன்ற செயல்பாடு நமது இந்தியாவில் மட்டும்தான் காணக் கிடைக்கும் அரிய நிகழ்வு.
 மும்பையில் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இதேபோல நடைமேம்பாலங்களும், பாலங்களும் இடிந்து விழுவது என்பது வழக்கமாகிவிட்டிருக்கிறது. கடந்த மார்ச் 2016-இல் கொல்கத்தா நகரத்தில் விவேகானந்தர் சாலையில் அரைகுறையாகக் கட்டி முடிக்கப்படாமல் இருந்த மேம்பாலம் ஒன்று நொறுங்கி விழுந்து 25 பேர் உயிரிழந்தனர். தவறான வடிவமைப்பு, தரமில்லாத கட்டுமானப் பொருள்கள், போதுமான கண்காணிப்பு இல்லாதது எனப் பல்வேறு காரணங்களை அந்த விபத்து குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு குறிப்பிட்டிருந்தது.
 அந்த மேம்பாலம் உடனடியாக முழுமையாக இடிக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. மூன்றாண்டுகள் கழிந்தும் அந்தப் பகுதி மக்கள் எப்போது இடிந்து விழுமோ என்கிற அச்சத்துடன் இருக்கும் அரைகுறை மேம்பாலத்துடன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது இந்தியாவில் மட்டுமே நடக்கும்.
 கடந்த ஆண்டு மே மாதம் ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்திலும் இதேபோல கட்டுமானம் நடந்துகொண்டிருந்த மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. அதே மே மாதத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாராணசியிலும் கட்டுமானத்திலிருந்த மேம்பாலம் ஒன்று தகர்ந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். 17-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல வாகனங்கள் இடிந்து விழுந்த பாலத்தின் அடியில் சிக்கி நசுங்கின.
 40 அடி உயரமுள்ள இரண்டு பெரிய கான்கிரீட் தூண்கள் தரமில்லாத கட்டுமானத்தின் காரணமாக நொறுங்கியதன் விளைவுதான் அந்த விபத்து. இத்தனைக்கும் அந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணி, மாநில அரசின் கட்டுமான கார்ப்பரேஷனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது என்பது உச்சகட்ட வேதனை.
 இதுபோல சம்பவங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்தும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. உயிரிழப்பு இல்லாமல் போகும்போது, அவை ஊடக வெளிச்சம் பெறுவதில்லையே தவிர, மேம்பால விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம்தான் இருக்கின்றன.
 இன்றைய நிலையில், மேம்பாலங்கள் என்பவை இந்திய நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களில் அதி முக்கியத்துவம் பெறுகின்றன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, சாலைகளை விரிவாக்கம் செய்ய முடியாத நிலையில் மேம்பாலங்கள் மட்டுமே தீர்வு என்பதால், மேம்பாலங்கள் அமைப்பதை எல்லா மாநில அரசுகளும் முன்னுரிமை கொடுத்துச் செயல்படுத்துகின்றன.
 மேம்பாலம் அமைப்பதற்கு கட்டுமான நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டிபோடும் நிலையில், மிகக் குறைந்தத் தொகைக்கு ஒப்பந்தப்புள்ளி கோரும் நிறுவனங்களுக்கு மேம்பாலக் கட்டுமானப் பணி வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஆட்சியாளர்களின் உறவினர்களுக்கும், கட்சிப் பொறுப்பாளர்களுக்கும் கையூட்டாகப் பெரும் பணம் வழங்க முற்படும் கட்டுமான நிறுவனங்களுக்குத்தான், இந்தப் பணிகள் தரப்பட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது. இதுவும், இந்தியாவில் மட்டுமே நடக்கும்.
 மேலை நாடுகளில் பெரும்பாலும் மேம்பாலம் அமைக்கும் முறை தவிர்க்கப்படுகிறது. சாலையை விரிவுபடுத்துவது, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குத் தனியார் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதித்தல், பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை கொடுத்தல் உள்ளிட்ட பல வழிமுறைகளை அவர்கள் மேற்கொள்ளும்போது, நாம் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
 மேம்பால விபத்துகளிலும் நடைமேம்பால விபத்துகளிலும் இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்கப்போகிறோமோ, தெரியவில்லை. இதுவும் இந்தியாவில் மட்டுமே நடக்கும்.
 

More from the section

நிமோ ஜூடெக்ஸ் இன் காசா ஸ்வா!
கண்ணீர்த் துளியின் கண்ணீர்!
திறமைகளின் அணிவகுப்பு!
பணநாயகமாகும் ஜனநாயகம்!
காத்திருப்பில் தமிழகம்!