புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

ஆட்டம் தொடங்கிவிட்டது!

By ஆசிரியர்| Published: 19th March 2019 01:28 AM


தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இரண்டு முக்கிய அணிகளிலும் முடிந்துவிட்ட நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேசியக் கட்சிகளான காங்கிரஸையும், பா.ஜ.க.வையும் தவிர ஏனைய கட்சிகள் அநேகமாக தங்களது  கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை அறிவித்துவிட்டன.
தென்சென்னை, காஞ்சிபுரம் (தனி), திருவண்ணாமலை, திருநெல்வேலி, மயிலாடுதுறை, சேலம், நீலகிரி (தனி), பொள்ளாச்சி ஆகிய  8 தொகுதிகளில் ஆளும் அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் நேரடியாகக் களத்தில் மோதுகின்றன. இடைத் தேர்தல் நடைபெற இருக்கும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் நேரடிப் போட்டி நடைபெற இருக்கிறது. டி.டி.வி. தினகரனின் தலைமையிலான அ.ம.மு.க.வும் இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் களமிறங்க இருக்கும் நிலையில்,  சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல்களில் கடுமையான மும்முனைப் போட்டி நிலவ இருக்கிறது. 
இந்தப் போட்டியில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படும் கட்சி, அரசியலில் நிரந்தரமாகவே முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடும் என்பதால் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய மூன்று கட்சிகளுமே மக்களவைத் தொகுதிகளைவிட, சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முற்பட்டிருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. 
அ.தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியலில் சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. அந்தக் கட்சி போட்டியிடும் 20 மக்களவைத் தொகுதிகளில் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, மக்களவை அ.தி.மு.க. தலைவர் பி.வேணுகோபால் உள்ளிட்ட முன்னாள் உறுப்பினர்கள் 6 பேருக்கு மட்டும்தான் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஏனைய தொகுதிகளில் புதிய வேட்பாளர்களுக்கும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியலில் நான்கு அரசியல் வாரிசுகள் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன், பி.ஹெச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன், ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கனிமொழி, தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி, துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் என்று அரசியல் வாரிசுகள் 6 பேருக்குப் போட்டியிட  தி.மு.க. வாய்ப்பளித்திருக்கிறது.
நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் பலவிதங்களிலும் முந்தைய தேர்தல்களிலிருந்து வித்தியாசப்படுகிறது. ஏறத்தாழ 30 ஆண்டுகள் தமிழக அரசியலில் நிர்ணாயக சக்திகளாக விளங்கிய அ.தி.மு.க.வின் ஜெயலலிதாவும், தி.மு.க.வின் கருணாநிதியும் இல்லாமல் நடைபெற இருக்கும் முதல் பொதுத் தேர்தல் இது. கடந்த அரை நூற்றாண்டு காலமாகக் கருணாநிதியை மையப்புள்ளியாக வைத்து சுழன்று கொண்டிருந்த தமிழக அரசியல், இப்போது வேறு திசையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. 
1967-ஆம் ஆண்டு முதல் எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி-தோல்வியைக் கூட்டணி பலம்தான் தீர்மானித்து வருகிறது. 2014-ஆம் ஆண்டு  மட்டுமே இதற்கு விதிவிலக்கு. அந்த வகையில் பார்த்தால், வாக்குவங்கி அரிச்சுவடி அடிப்படையில் சக்தி வாய்ந்த கூட்டணியாக அ.தி.மு.க. கூட்டணியை கட்டமைத்திருக்கின்றனர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் 2004-இல் தி.மு.க. அமைத்துக்கொண்ட கூட்டணியைப்போல வலுவான கூட்டணியாக அ.தி.மு.க. கூட்டணி  காட்சியளிக்கிறது.
 கூட்டணி பலத்தை நம்பி அ.தி.மு.க. களமிறங்குகிறது என்றால்,  அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கும் பிளவையும், அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியில் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. ஏற்படுத்தக்கூடிய பாதிப்பையும் எதிர்பார்த்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள முற்பட்டிருக்கிறது தி.மு.க.
பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தித்தான் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அமைந்து வந்திருக்கின்றன. 2014 மக்களவைத் தேர்தலில்கூட, அ.தி.மு.க.வால் 39 இடங்களில் 37 இடங்களில் வெற்றிபெற முடிந்ததற்கு, ஜெயலலிதா பிரதமராகக்கூடும் என்கிற தோற்றத்தை அந்தக் கட்சி ஏற்படுத்த முற்பட்டதுதான் முக்கியமான காரணம். அதனால்தான் பா.ஜ.க.வை தனது அணியில் அ.தி.மு.க. சேர்த்துக் கொண்டிருக்கிறது.  ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக தி.மு.க. முன்மொழிந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறது. 
டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்களுக்கென பிரதமர் வேட்பாளர் இல்லாத நிலையில் தேர்தலில் வாக்காளர்களை எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்று தெரியவில்லை. அ.தி.மு.க. கூட்டணிக்கு பிரதமர் நரேந்திர மோடியும், தி.மு.க. கூட்டணிக்கு ராகுல் காந்தியும் பலமா? பலவீனமா? என்பதைப் பொருத்தும் தேர்தல் முடிவுகள் அமையக்கூடும்.
இந்தத் தேர்தலைப் பொருத்தவரையில், இரண்டு அணிகளுமே தங்களது பலத்தைவிட மாற்று அணியின் பலவீனத்தைத்தான் குறிவைத்து வியூகம் வகுத்திருக்கின்றன. அதனால்தான் தி.மு.க. கூட்டணியின் பலவீனத்தை தனது பலமாக்க அ.தி.மு.க.வும், அ.தி.மு.க.வுக்கு அ.ம.மு.க. ஏற்படுத்த இருக்கும் பாதிப்பை தி.மு.க.வும் தங்களது தேர்தல் வெற்றிக்கு வாய்ப்பாகக் கருதுகின்றன. 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், டி.டி.வி. தினகரன், கமல்ஹாசன் ஆகியோரின் தலைமைப் பண்பை நிர்ணயிக்கப்போவது இந்தத் தேர்தல் முடிவுகள்தான் என்பதால், இதைத் திருப்புமுனைத் தேர்தல் என்று குறிப்பிடுவதில் தவறில்லை.
 

More from the section

நிமோ ஜூடெக்ஸ் இன் காசா ஸ்வா!
கண்ணீர்த் துளியின் கண்ணீர்!
திறமைகளின் அணிவகுப்பு!
பணநாயகமாகும் ஜனநாயகம்!
காத்திருப்பில் தமிழகம்!