புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

பீதியில் உலகம்...!

By ஆசிரியர்| Published: 20th March 2019 01:26 AM


நியூஸிலாந்து நாட்டின் தென் பகுதியிலுள்ள கிறைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள இரண்டு மசூதிக்குள் புகுந்து கடந்த வெள்ளிக்கிழமை  மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கின்றனர். பலர் பலத்த காயமடைந்திருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் நியூஸிலாந்துக்குக் குடிபெயர்ந்தவர்கள். சிலர் அகதிகள். இந்த பயங்கரவாதத் தாக்குதல் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
கிறைஸ்ட்சர்ச்  நகரத்தில் நடத்தப்பட்ட அந்த மசூதித் தாக்குதல் ஏனைய பயங்கரவாதத் தாக்குதல்களில் இருந்து வேறுபடுகிறது. முதன்முறையாக, தொழில்நுட்பத்தின் உதவியுடன் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற  நோக்கத்துடன்  திட்டமிடப்பட்டிருந்தது. உலகின் எல்லா மூலைக்கும் பயங்கரவாதமும், வெறுப்பின் அடிப்படையிலான துவேஷக் குற்றங்களும் பரவியிருப்பதன் அறிகுறியாகத்தான் கிரைஸ்ட்சர்ச்  மசூதித் தாக்குதலை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
மத்திய ஆசியாவில் கடந்த 20 ஆண்டுகளாகக் காணப்படும் அரசியல் ஸ்திரத்தன்மையின்மையும்  தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர்களும் அங்கிருந்து மக்களை உலகின் பல்வேறு பகுதிகளுக்கு அகதிகளாகப் புலம்பெயரச் செய்திருக்கின்றன. அவர்களுடைய வருகைதான்  இப்போது சர்வதேச அளவிலான பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. 
கிறைஸ்ட்சர்ச்சிலுள்ள மசூதிகளில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியரான 28 வயது பிரென்டன் ஹாரிஸன் டாரன்ட் தலைமையில் மர்ம நபர்கள்  சர்வ சாதாரணமாக கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்தனர். மசூதியில் அவர்களால் நடத்தப்பட இருக்கும் படுகொலையைப் படம் பிடிக்க கேமராவுடனும் நுழைந்தனர். ஒருபுறம் தொழுகையில் இருந்தவர்கள் துப்பாக்கி ரவைகளுக்குப் பலியாகிக் கொண்டிருந்தபோது, அந்தச் சம்பவம் முகநூல் மூலம் நேரடியாக உலகம் முழுவதும் பரப்பப்பட்டது என்பதுதான்  கிறைஸ்ட்சர்ச்  மசூதித் தாக்குதலின் எதிர்பாராத வக்கிரத்தனம். 
எதற்காக  முஸ்லிம்களுக்கு எதிரான இப்படியொரு படுகொலை நடத்தப்படுகிறது என்பதற்கான காரணங்களை விளக்கும் சுற்றறிக்கை கூடவே பரப்பப்பட்டது. உலகம் முழுவதும் இந்தச் சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீள் பதிவு செய்து டாரன்ட் குழுவினரின் நோக்கத்துக்கு வலு சேர்த்தனர். இதன் மூலம் உலகின் பல்வேறு பாகங்களில் உள்ள புலம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷ சிந்தனையுள்ள பயங்கரவாதக் குழுக்களைத் தூண்டிவிட வேண்டும்  என்பதுதான் டாரன்ட்  குழுவினரின் உள்நோக்கம். 
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வலதுசாரி இன பயங்கரவாதம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இப்போது சில ஆண்டுகளாக ஐரோப்பாவில் பெருமளவில் முஸ்லிம்கள் குடியேறத் தொடங்கியதன் விளைவாக மீண்டும் அங்கு தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. ஜெர்மனியிலும், பிரான்ஸிலும் பல மசூதிகள் தாக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் குத்திக் கொல்லப்பட்டிருக்கிறார். அமெரிக்காவிலும் இதேபோன்ற தாக்குதல்களில் 11 பேர் இறந்திருக்கிறார்கள். 
இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்ட அனைவருமே அந்நியர்களின் புலம்பெயர்தலுக்கு எதிரானவர்கள். ஐரோப்பிய கிறிஸ்தவ வெள்ளையர் இனத்தின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற கொள்கையை உடையவர்கள். ஆசியாவிலிருந்து லட்சக்கணக்கில் ஐரோப்பாவுக்குக்  குடியேறும் ஏனைய இனத்தவர்களால் தங்களது கிறிஸ்தவ வெள்ளையர் இனத்தின் தனித்துவமும் தூய்மையும் பாதிக்கப்படுவதை இவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. 
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏனைய வெள்ளை இனத்தவர்களின் நாடுகளிலும் குடியேறிய முஸ்லிம்களால் நடத்தப்படும்  மத மாற்றம்தான் வெள்ளை இன வலதுசாரி தீவிரவாதத்துக்கு மிக முக்கியமான காரணம். தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடும் இவர்கள் சில மேலைநாட்டு அரசியல்வாதிகளின் கருத்துகளுடன் ஒத்துப் போகிறார்கள். முஸ்லிம்கள் அமெரிக்காவில் நுழைவதைத் தடுக்க விரும்பும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், கிறிஸ்தவ ஐரோப்பாவின் புனிதத்தன்மையும், தனித்துவமும் சிதைந்து விடாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்று குரலெழுப்பும் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன், குடியேறுபவர்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும் இத்தாலியின் உள்துறை அமைச்சர் மேட்தியோ ஸல்வினி போன்றவர்கள்தான் இந்தத் தீவிரவாதிகளின் ஆதர்ஷ புருஷர்கள். 
உலகெங்கிலும் எல்லா நாடுகளிலும் குடியேற்றமும், மதமாற்றமும் மிகப்பெரிய பிரச்னையாக உருவாகி வருகின்றன.  தாங்கள் தங்களது சொந்த மண்ணில் காலப்போக்கில் சிறுபான்மையினராக மாற்றப்பட்டுவிடுவோமோ என்கிற அச்சம் பெரும்பான்மை சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.  அதன் விளைவுதான் முஸ்லிம்களுக்கு எதிரான, புலம்பெயர்பவர்களுக்கு எதிரான மனநிலைக்குக் காரணம். கிறைஸ்ட்சர்ச்சில்  நடத்தப்பட்ட தாக்குதலும், விடியோ காட்சி மூலம் அது உலகளாவிய அளவில் பரப்பப்பட்டதும், சர்வதேச அளவில் இந்தப் பிரச்னையைக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற நோக்கத்துடன்தான்.  இதை உலகம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது? 
இதுவரை ஐ.எஸ். தீவிரவாத இயக்கம், ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கர் -எ-தொய்பா உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள்தான் தீவிரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தன. இப்போது எதிர்வினைக்கு இன்னொரு துவேஷக் கும்பல் தயாராகிவிட்டிருப்பதை  கிறைஸ்ட்சர்ச் தாக்குதல் உணர்த்துகிறது. இது எங்கே போய் முடியுமோ என்கிற பீதியில் மனித இனம் உறைந்து போய் நிற்கிறது.
 

More from the section

நிமோ ஜூடெக்ஸ் இன் காசா ஸ்வா!
கண்ணீர்த் துளியின் கண்ணீர்!
திறமைகளின் அணிவகுப்பு!
பணநாயகமாகும் ஜனநாயகம்!
காத்திருப்பில் தமிழகம்!