20 ஜனவரி 2019

வயிற்றுப் பிரச்னைகளுக்கு இயற்கை வைத்தியம் இருக்க மாத்திரைகள் எதற்கு?

By டாக்டர் எஸ். சுவாமிநாதன்| DIN | Published: 02nd August 2018 12:00 AM


என்னால் நாட்டு மருந்துகள் தயாரிக்க முடியும். உணவுக் கட்டுப்பாடு இல்லாத தற்கால சூழலில் அதிகம் ஏற்படும் குடல் சார்ந்த மலக்கட்டு, வாயு பிடிப்பு, சீதக்கடுப்பு, வயிற்றுவலி, வயிற்றுக் கடுப்பு, குடல் புழு மற்றும் நீர்க்கட்டு கிராணி போன்ற உபாதைகளை நீக்கக் கூடிய இயற்கை வைத்திய முறைகள் உண்டா?

வி. ராமசாமி, திருவள்ளூர்.

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலக நிலையத்தாரால் பிரசுரித்து வெளியிடப்பட்டுள்ள சரபேந்திர வைத்திய முறைகள் எனும் பதின்மூன்றாவது நூலில் சில குறிப்புகள் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை அளித்துள்ளது. அவை பற்றிய விவரம்:

1. வயிறு கழிய வாயுவிற்கு

சுக்கு, இந்துப்பு,  கடுக்காய் தோல்,  நெல்லிக்காய், மிளகு, திப்பிலி,  தான்றித் தோல்  இவற்றைச் சம அளவு எடுத்து இடித்து துணியால் சலித்துக் கொள்ளவும். இச்சூரணத்திற்கு சமனளவு சுத்திசெய்த சிவதை வேர்ச் சூரணம் (பாலில் அவித்தது) சேர்த்து ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். சுமார் ஒரு பலம் (48 - 50 கிராம்) எடுத்து, 200 மி.லி. வெந்நீருடன் கலந்து அதிகாலையில் அருந்தவும். நன்கு பேதியாகும். குடலிலுள்ள வாயுக் கட்டு, பெருமலம் நீங்கும்.

2. சீதம், இரத்தக்கடுப்பு வயிற்றுவலிக்கு

சுக்கை எடுத்து சூரணித்து எலுமிச்சம்பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து கொட்டைப்பாக்களவு உருண்டைகளாக உருட்டிக் காய வைத்து பின்பு ஒரு மண்ணகலிற்குள் வைத்து மூடி சீலைமண் செய்து புடம் போட்டு எடுக்கவும். 
இம்மருந்தை எருமைத் தயிருடனரைத்து உட்கொள்ளச் சீதக்கடுப்பு, இரத்தக் கடுப்பு, வயிற்று வலி முதலானவை போய்விடும்.

3. வயிற்றுக் கடுப்பிற்கு

இஞ்சியை தோல் சீவி அதன் நடுவில் பெருங்காயம் வைத்து சுண்ணாம்பில் பொதிந்து, அடுப்பில் போட்டுச் சுட்டு விடவும். இதனை எருமைத் தயிர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். அதைச் சாப்பிட கடுப்பு நிற்கும்.
எலுமிச்சம்பழத்தைச் சிமிழ் போல் செய்து அதனுள் பெருங்காயத்தை வைத்துச் சுண்ணாம்பு கவசம் செய்து காய வைத்து நெருப்பிலிட்டுச் சுட்டு எருமைத் தயிர் விட்டு நன்றாக அரைத்துச் சாப்பிட வயிற்று கடுப்பு நிற்கும்.

4. புழு விழ மருந்து

காவிக் கல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தமான தண்ணீரில் ஊற வைத்து அதனுடன் புரசம் விதை ஒன்றும் போடவும். மறுநாள் சூரிய உதயத்தில் இந்த விதையை காவித் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து குழப்பி உட்கொள்ளவும். வயிற்றில் இருக்கும் புழுக்கள் கூண்டுடனே விழும்.

5. சுகவிரேசனம்

ஆமணக்கெண்ணெய்யுடன் காற்றாழைச் சாறு, கடுக்காய்த்தூள் இவற்றை ஒன்று கலந்து கால்களிலும், கைகளிலும் நன்றாகத் தேய்க்கவும். வெகுநாட்பட்ட மலக்கட்டுகள் நீங்கி செளக்கியமுண்டாகும். 

6. மலசலகட்டிக்கு மருந்து 

மிளகை நெரித்துச் சட்டியிலிட்டு வறுத்து சுத்தமான தண்ணீரில் எட்டு மடங்கு சேர்த்து எட்டில் ஒன்றாக வற்ற வைத்துச் சாப்பிடவும். சலக்கட்டு, மலக்கட்டு ஆகியவை நீங்கும்.  முருங்கை ஈர்க்கு, மிளகு இவ்விரண்டையும் நசுக்கி ஒரு சட்டியிலிட்டு, எட்டு மடங்கு சுத்தமான தண்ணீர் விட்டு எட்டில் ஒன்றாகும் வரை எரித்து இறுத்துக்கொண்டு பொரித்த வெங்காரம் சிறிதளவு சேர்த்து உட்கொள்ளவும். 

7. குடல் கிராணி, வாய்வுக்கு மருந்து 

கடுக்காய்த்தோல், தான்றிக்காய் தோல், சுக்கு, ஓமம், திப்பிலி, பெருங்காயம், வாயுவிடங்கம் முதலானவற்றைச் சமமான அளவிலெடுத்து கல் உரலில் இட்டு இடித்து வஸ்திரகாயம் செய்து பத்திரப்படுத்தவும். இதில் மூன்று விரல் கொள்ளும் அளவு எடுத்து காலையில் தேனுடனும், சாயங்காலத்தில் பசுவின் நெய்யுடனும் குழப்பி உட்கொள்ளவும். 20 நாட்களுக்குள் குடல் கிராணிகள் (IBS, Tenesmus, Amoebiasis) வாயு முதலானவை  தீரும். 
(தொடரும்) 

More from the section

நல்லெண்ணெய்: மனிதர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மனம்... உடல் நலமடைய..!
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: செவித்திறன் குறைந்தால்...?
கண்களை கவனியுங்கள்.. காதலியின் கண்களை அல்ல உங்கள் கண்களை!
பார்க்கின்ஸன்ஸ் நோய் பாதிப்புகள்!