புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

ரத்தக் குழாய்கள் வலுவடைய...!

By டாக்டர் எஸ். சுவாமிநாதன்| DIN | Published: 30th August 2018 12:00 AM

என் வயது 83. எனக்கு திடீர் என்று மயக்கம் ஏற்படுகிறது. ஆனால் சில விநாடிகளில் நீங்கிவிடுகிறது. தும்மினாலும் கொட்டாவி விட்டாலும் பிடறியில் நரம்பு புடைக்கிறது. தலையை ஆட்டாமல் நேரே இருநிமிடம் பார்த்து தலையை வலது, இடது பக்கம் சாய்த்தால் சரியாகி விடுகிறது. இது எதனால்? குணப்படுத்த ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?

-சு. உலகநாதன்,  திருநெல்வேலி. 

தலைக்கு பிராணவாயுவை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களின் சுருங்கிவிரியும் தன்மையில் ஏற்படும் தொய்வான செயலால், தாங்கள் குறிப்பிடும் வகையில் உபாதைகள் ஏற்படக் கூடும். அவற்றின் செயல் திறனை மேம்படுத்தக் கூடிய நெய்ப்பு மற்றும் சூடு எனும் குணங்களை வலுவடையச் செய்ய வேண்டும். இவை இரண்டும் வறட்சி மற்றும் குளிர்ச்சி எனும் குணங்களை அவ்விடம் விட்டு அகலச் செய்வதன் மூலம் ரத்தக் குழாய்களை சுறுசுறுப்பாக இயக்கக் கூடிய கிரியா ஊக்கிகளாவும் செயல்படும். ஒரு சில ஆயுர்வேத சிகிச்சை முறைகள் தங்களுக்குப் பயனளிக்க கூடும்.

கார்ப்பாஸாஸ்த்யாதி எனப்படும் மூலிகைத் தைலத்தை வெது வெதுப்பாக, பஞ்சில் முக்கி எடுத்து தலையில் சுமார் 1/2  மணி நேரம் ஊற வைப்பதன் வாயிலாக, தலையைச் சார்ந்த வாயு உபாதைகளைக் குறைத்திட உதவும். காதினுள் விடப்படும் வசாலசுனாதி எனும் தைல மருந்தும், தலையிலுள்ள நரம்புகளுக்கும், ரத்தக் குழாய்களுக்கும் வலுவூட்டக் கூடியது. இதை சற்று வெது வெதுப்பாக 5-8 சொட்டுகள், காலையில் பல் துலக்கிய பிறகு விட்டுக் கொள்ளலாம். வாயினுள், அரிமேதஸ் எனும் நல்லெண்ணெய்யுடன் காய்ச்சப்பட்ட மூலிகைத் தைலத்தையும் ஐந்து மில்லி லிட்டர் விட்டு, சுமார் 8 - 10 நிமிடங்கள் நிதானமாகக் குலுக்கித் துப்பி விடுவதாலும், தலை சார்ந்த ரத்தக் குழாய்கள் வலுப்பெற வாய்ப்பிருக்கின்றன.

மேற்கூறிய சிகிச்சைகளனைத்தும் வெளிப்புறமான வைத்திய முறைகளாகும். அதன் வழியாக நெய்ப்பையும், சூட்டையும் முழுவதுமாக பெற முடியாது என்பதால், உட்புறமாகவும் அவற்றைக் கொண்டு வர வேண்டிய அவசியமிருப்பதால், காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாக, இந்துகாந்தம் எனும் நெய் மருந்தையும், மாலையில் வெறும் வயிற்றில் விதார்யாதி எனும் நெய் மருந்தையும் நீராவியில் உருக்கி, சுமார் 5-10 மிலி எனும் அளவில், 48 நாட்கள் வரை சாப்பிடலாம். மருந்தைச் சாப்பிட்ட பின் சிறிது சூடான தண்ணீர் அருந்தினால், மருந்து விரைவில் செரிமானமாகி, அதன் வீர்யமானது, ரத்தக் குழாய்களின் உட்புறங்களில் விரைவாகச் சென்றடைந்து செயலாற்றும். இவற்றைச் செரிமானம் செய்யக் கூடிய சக்தி தங்களுக்குக் குறைவாக இருந்தால், லவணபாஸ்கரம் எனும் சூரண மருந்தை, 5 கிராம் அளவில் உப்பு போடாத மோர் சாதத்துடன் கலந்து, மதிய உணவுடன் சாப்பிடலாம்.

அஸ்வகந்தா எனும் சூரண மருந்து, தற்சமயம் பரபரப்பான விற்பனையிலுள்ளது. அதற்குக் காரணம், அதன் செயல் வலிமையானது, நரம்புகளை வலுவூட்டச் செய்வதாக இருக்கிறது.  நீங்கள் சர்க்கரை உபாதை இல்லாதவராக இருந்தால், சுமார் 5 கிராம் சூரணத்தை, 10 மிலி தேன் குழைத்து, ஒரு நாளில் பல தடவை சிறிது சிறிதாக, நக்கிச் சாப்பிடலாம். இதற்கு நேரம் காலம் என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. சர்க்கரை உபாதை இருந்தால், 5 கிராம் சூரணத்தை, 1/2 கிளாஸ் (150 மிலி) சூடான பாலுடன் கலந்து, இரவு படுக்கும் முன் சாப்பிடலாம். இப்படி உள்ளும் புறமுமாக மருந்தைச் சாப்பிட்டால், உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் விரைவில் குணமாக வாய்ப்புள்ளது. 

உணவுக் கட்டுப்பாடும் உங்களுக்குத் தேவையாக இருக்கிறது. வயோதிகத்தில் வாயுவினுடைய சீற்றம் இயற்கையாகவே அதிகமிருப்பதால், காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையுடைய உணவு வகைகள் வாயுவை, குடலில் அதிகப்படுத்தும் என்பதால், அது போன்ற சுவைகளை நீங்கள் தவிர்த்தல் நலம். இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளை உணவில் மிதமாகச் சேர்க்கலாம். புலால் உணவுகளை நீர்த்தவடிவில், வெது வெதுப்பாகச் சாப்பிடலாமே தவிர, கனமாகவும் கெட்டியாகவும் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். குளிர்ந்த நீரில் தலை நனைக்கக் கூடாது. இளஞ் சூடான வெந்நீரில் குளிப்பதே நல்லது. குளிரூட்டப்பட்ட அறையில் படுத்துறங்குவதையும் பெருமளவு தவிர்த்தல் நல்லது. குடும்பத்திலுள்ள உறவினர்களின் அன்பும் ஆதரவும் அனுசரிப்பும் உங்களுக்கு இந்த வயதில் மிகவும் தேவை. வெளியில் செல்லும் போது, பாதங்கள் சில்லிப்பான தரையில் படாதவாறு காலணிகளைப் பயன்படுத்த வேண்டும். மழை, பனி நாட்களில் தலை, காது ஆகியவற்றை மறைக்கும் குல்லாய், மஃப்ளர் அணிவதும் நல்லதே. காபி, டீ, பால் போன்ற பானங்களை சூடாக அருந்தலாம். ஓய்வும், நல்உறக்கமும் அவசியமே.

 (தொடரும்) 

More from the section

நல்லெண்ணெய்: மனிதர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மனம்... உடல் நலமடைய..!
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: செவித்திறன் குறைந்தால்...?
கண்களை கவனியுங்கள்.. காதலியின் கண்களை அல்ல உங்கள் கண்களை!
பார்க்கின்ஸன்ஸ் நோய் பாதிப்புகள்!